எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா புதிய சாதனை
இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையை தற்போது இரண்டு நிறுவனங்கள் ஆட்சி செய்யத் தொடங்கியிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா, இந்தியாவின் இருபெரும் ஆட்டோமொபைல் ஜாம்பவான்கள். மற்ற நிறுவனங்கள் யோசிக்கும் முன்பாகவே வேகமாக செயல்பட்டு எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் மற்ற நிறுவனங்களை விட பல மடங்கு கூடுதல் விற்பனையுடன் இரண்டு எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களும் முன்னணியில் உள்ளன.
கடந்த ஜூன் மாதம் இரண்டு நிறுவனங்களுமே எலெக்ட்ரிக் கார் விற்பனையில் புதிய உயரங்களை எட்டியிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஜூன் மாதம் மட்டும் 12,187 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு ஜூன் மாதம் டாடா மோட்டார்ஸின் விற்பனையுடன் ஒப்பிடும் போது சுமார் 126 சதவீதம் விற்பனை உயர்வாகும்.

அதேபோல் மஹிந்திரா நிறுவனமானது கடந்த ஜூன் மாதம் 7,766 எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து புதிய உயரத்தைத் தொட்டிருக்கிறது. இதுவும் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 121 சதவீதம் கூடுதல் விற்பனையாகும். இந்த விற்பனை அளவுகளுடன் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய இரண்டு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார் விற்பனை சந்தையில் முறையே 38 சதவீதம் மற்றும் 24 சதவீதம் சந்தைப் பங்குகளையும் கைப்பற்றியிருக்கின்றன.
கடந்தாண்டு வரை டாடா மோட்டார்ஸுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருந்த JSW எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த சில மாதங்களாக மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் 5,861 எலெக்ட்ரிக் கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 24 சதவீதம் விற்பனை உயர்வாகும்.

இந்திய எலெக்ட்ரிக் கார் விற்பனை சந்தையில் கணிசமான அளவு சந்தைப் பங்குகளை JSW எம்ஜி மோட்டார் நிறுவனமும் கைப்பற்றியிருக்கிறது. சுமார் 18 சதவீதம் சந்தைப் பங்குகளைக் கொண்டுள்ளது இந்நிறுவனம். இதற்கு அடுத்தபடியாக இருக்கும் மாருதி மற்றும் வின்ஃபாஸ்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் 2,000 யூனிட்டுகளுக்கும் குறைவான அளவிலேயே கடந்த ஜூன் மாதம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளன. இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து 10 சதவீதம் சந்தைப் பங்குகளையும் கைப்பற்றியிருக்கின்றன.
ஆறாம் இடத்தில் இருக்கும் BYD-யைத் தவிர்த்து மற்ற அனைத்து நிறுவனங்களும் 500 யூனிட்டுகளுக்கும் குறைவான அளவிலேயே கடந்த ஜூன் மாதம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளன. 25 லட்சம் ரூபாய்க்கும் மேலான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்து வரும் BYD கடந்த ஜூன் மாதம் 873 யூனிட்டுகள் என்ற விற்பனை அளவைப் பதிவு செய்துள்ளது. இது கடந்தாண்டு ஒப்பிடும் போது 51 சதவீதம் விற்பனை உயர்வாகும்.
எரிபொருள் கார்களைப் போல எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையிலும் சோபிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஹூண்டாய் வெறும் 352 எலெக்ட்ரிக் கார்களையே விற்பனை செய்து, சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW-வுக்கும் கீழே ஒன்பதாம் இடத்தில் இருக்கிறது. BMW நிறுவனம் கடந்த மாதம் 497 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இது 105 சதவீதம் விற்பனை உயர்வாகும். கியா 449 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து BMW-வுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி குறைவான அளவே எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தாலும், அந்நிறுவனம் ஒரேயொரு எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில மாடல்களை இந்திய சந்தைக்கு அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அவை விற்பனைக்கு வரும் போது மாருதியும் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா நிறுவனமும் இந்தியாவில் கேரன்ஸ் கிளாவிஸ் EV என்ற ஒரேயொரு மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் எம்பிவி காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. விரைவில் புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளது கியா. அவை இந்நிறுவனத்தை டாப் 5 இடங்களுக்குள் எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொகுசு எலெக்ட்ரிக் கார் விற்பனையைப் பொறுத்தவரை மேலே கூறியது போல BMW யாரும் எதிர்பாராத வகையில் முன்னணியில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மெர்சிடீஸ் பென்ஸும் வேகமாக உயர்ந்து வருகிறது. நிறைய எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வரும் ஆடி மிகவும் குறைவான அளவிலேயே விற்பனையைப் பதிவு செய்து ஏமாற்றமளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications