அடித்து ஆடும் டாடா மோட்டார்ஸ்... செப்டம்பரிலும் கார் விற்பனை அமோகம்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை செப்டம்பர் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்திய சந்தையில் மட்டும் 68,810 கார்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 59,667 கார்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு விற்பனை 15.32 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு விற்பனையுடன் வெளிநாட்டு சந்தைகளையும் சேர்த்துப் பார்த்தால், டாடா மோட்டார்ஸ் மொத்தம் 70,210 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 60,907 வாகனங்கள் மட்டுமே விற்பனையான நிலையில், இந்த முறை மொத்த விற்பனையில் 15.27 சதவீத வளர்ச்சி கிடைத்துள்ளது. ஏற்றுமதியும் 1,400 வாகனங்களாக உயர்ந்துள்ளது.

செப்டம்பர் மாத விற்பனை மட்டுமின்றி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த மூன்று மாதங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடு என மொத்தம் 2,01,723 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1,44,397 வாகனங்கள் விற்பனையாகி உள்ளது.
இதன் மூலம் காலாண்டு விற்பனையிலும் டாடா மோட்டார்ஸ் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு விற்பனை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்திய சந்தையில் மட்டும் 1,96,674 கார்கள் விற்பனையாகியுள்ளன. ஏற்றுமதி 5,049 வாகனங்களாக இருந்தது. பல்வேறு கார் மாடல்களின் விற்பனையும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

இந்த வளர்ச்சியில் டாடா நிறுவனத்தின் மின்சார கார்களின் பங்களிப்பும் கவனிக்கத்தக்கதாக மாறி உள்ளது. செப்டம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் மொத்தம் 15,384 மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 9,191 மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில், தற்போது 67.38 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
காலாண்டு அளவில் பார்த்தால் மின்சார வாகனங்களின் விற்பனை மேலும் வேகமாக வளர்ந்துள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 47,150 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 24,855 வாகனங்கள் மட்டுமே விற்பனையான நிலையில், தற்போது 90 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை பங்களிப்பிலும் மின்சார கார்கள் தற்போது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இரண்டாவது காலாண்டில் மின்சார வாகனங்கள் அந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 23 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன. அதேபோல், சிஎன்ஜி கார்களின் பங்களிப்பு 28 சதவீதமாக இருந்தது. இரண்டையும் சேர்த்தால் மொத்த விற்பனையில் 51 சதவீதமாக உள்ளது.
அதாவது, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்த கார்களில் பாதிக்கும் மேற்பட்டவை மின்சாரம் அல்லது சிஎன்ஜி மூலம் இயங்கும் மாடல்களாக இருந்துள்ளன. குறைந்த இயக்கச் செலவு மற்றும் மாற்று எரிபொருள் மீதான வாடிக்கையாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதும் இந்த விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, டாடா பன்ச் மாடல் இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான எஸ்யூவி காராக இருந்ததாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த நிலைசில், அண்மையில் கர்வ் எக்ஸ், சியாரா லெஜண்ட் மற்றும் புதிய ஏரிஸ் உள்ளிட்ட புதிய கார் மாடல்களை அந்நிறுவனம் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய மாடல்கள் வரும் மாதங்களில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தை டாடாவுக்கு வழங்கும் என்று தெரிகிறது.
செப்டம்பர் மாதத்திலிருந்து பண்டிகை கால விற்பனையும் தொடங்கியுள்ள நிலையில், புதிய மாடல்கள் மற்றும் வலுவான முன்பதிவுகளுடன் டாடா மோட்டார்ஸ் இந்த ஆண்டு சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மின்சார மற்றும் சிஎன்ஜி கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கிறதா என்பது, அடுத்தடுத்த மாதங்களில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
இதனிடையே, டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் பங்களிப்பு அதன் விற்பனையில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், புக்கிங் குவிந்து வருவதற்கு ஏற்ப உற்பத்தி செய்து டெலிவிரி கொடுக்க முடியாத நிலைக்கு டாடா தள்ளப்பட்டுள்ளது. முடிந்தவரை புக்கிங் செய்பவர்களுக்கு விரைந்து டெலிவிரி கொடுப்பதற்காக, தொடர்ந்து எலெக்ட்ரி கார் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications


