டாடா எலெக்ட்ரிக் காரை வாங்கும் முன் இதை கேட்டு தெரிஞ்சிக்கோங்க! இன்று முதல் அமலுக்கு வந்தாச்சு!
இந்திய எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) சந்தையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) சுமார் 40% சந்தைப் பங்கைத் தக்க வைத்துக்கொண்டு முன்னணியில் உள்ளது. நம்பகமான செயல்திறன் மற்றும் விரிவான அம்சங்களுக்காக அறியப்படும் டாடா நெக்ஸான் இவி (Nexon EV), டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில் தற்போது, வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கேற்ப, நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில் இரண்டு புதிய கலர் ஆப்ஷன்களை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 'ஓஷன் ப்ளூ' (Ocean Blue) மற்றும் 'ப்யூர் கிரே' (Pure Grey) என்பன அவை ஆகும். முன்னதாக, நெக்ஸான் இவி 'ப்ரிஸ்டீன் ஒயிட்', 'டேடோனா கிரே' மற்றும் 'எம்பவர்டு ஆக்சைடு' போன்ற வண்ணங்களில் நெக்ஸான் இவி கிடைத்தது.

இவற்றில், 'எம்பவர்டு ஆக்சைடு' நிறம் ஆனது நெக்ஸான் இவி காரின் எம்பவர்டு வேரியண்ட்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. புதிய 'ஓஷன் ப்ளூ' மற்றும் 'ப்யூர் கிரே' ஆகிய கலர் ஆப்ஷன்கள், 45 kWh பேட்டரி பேக்குடன் வரும் நெக்ஸான் இவி-யின் கிரியேட்டிவ், ஃபியர்லெஸ் மற்றும் எம்பவர்டு உள்ளிட்ட அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கின்றன.
'ஓஷன் ப்ளூ' நிறம் நீலம் மற்றும் பச்சை டோன்களின் கலவையுடன் மிகவும் புத்துணர்ச்சியூட்டுவதாக உள்ளது. இந்த கவர்ச்சியான நிறம், நெக்ஸான் இவி-யின் நவீன அம்சங்களையும், தனித்துவமான தோற்றத்தையும் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. இந்த கலர் ஆப்ஷனின் கருப்பு நிற மேற்கூரை மற்றும் கருப்பு நிற பில்லர்கள் 'ஓஷன் ப்ளூ' நிறத்துடன் இணைந்து காருக்கு இளமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அழகியலைத் தேடும் வாடிக்கையாளர்களைக் கவரும்.

'ப்யூர் கிரே' என்பது ஒரு மென்மையான சாம்பல் நிறமாகும். இந்த நிறம், காரின் கூர்மையான வடிவமைப்பு அம்சங்களான தனித்துவமான விளக்குகள், நவீன பம்பர் வடிவமைப்பு மற்றும் நேர்த்தியான DRL-கள் போன்றவற்றை மேலும் தெளிவாக காட்டுகிறது. புதிய வண்ணத் தேர்வுகளைத் தவிர, நெக்ஸான் இவி காரில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
வாடிக்கையாளர்கள் நெக்ஸான் இவி காரில் 30 kWh பேட்டரி கொண்ட மீடியம் ரேஞ்ச் (MR) அல்லது 45 kWh பேட்டரி கொண்ட லாங் ரேஞ்ச் (LR) வேரியண்ட்டைத் தேர்வு செய்யலாம். மீடியம் ரேஞ்ச் வேரியண்ட்களில் 95 kW (130 PS) எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. அதே நேரத்தில் 45 kWh வேரியண்ட்களில் 106 kW (144 PS) எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்படுகிறது.

அனைத்து வேரியண்ட்களிலும் டார்க் அவுட்புட் ஒரே மாதிரியாக 215 என்.எம் ஆக உள்ளது. 30 kWh MR வேரியண்ட்களுக்கு ARAI சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் 325 கிமீ எனவும், 45 kWh வேரியண்ட்களுக்கு 489 கிமீ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. MR வேரியண்ட்கள் 9.2 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ/மணி வேகத்தையும், 45 kWh வேரியண்ட்கள் 8.9 வினாடிகளில் இதே வேகத்தையும் அடைகின்றன.
அனைத்து வேரியண்ட்களிலும் மல்டி டிரைவ் மோடுகள் மற்றும் வெப்ப மேலாண்மைக்கு திரவத்தை குளிரூட்டும் அமைப்பு உள்ளன. ஏசி ஹோம் சார்ஜிங் மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்களும் நெக்ஸான் இவி-யில் கிடைக்கின்றன. 60 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தும்போது, 45 kWh பேட்டரி கொண்ட வேரியண்ட்களை கூட வெறும் 40 நிமிடங்களில் 10% முதல் 80% வரை சார்ஜ் நிரப்பிவிட முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக பேர் வாங்கும் எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக விளங்கும் நெக்ஸான் இவி-இன் விற்பனை இந்த புதிய கலர் ஆப்ஷன்கள் மூலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள டீலர்ஷிப்பில் புதிய நிறங்களில் நெக்ஸான் இவி காரை முன்பதிவு செய்யலாம்; டெலிவிரிகள் (Deliveries) விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









