டாடா கார்களின் செயலியை குறிவைத்த ஹேக்கர்கள்... உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

கார் வாங்கும்போது அதன் பாதுகாப்பு, செயல்திறன், மைலேஜ் ஆகியவற்றுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால் இன்றைய நவீன கார்களில் இணையதள வசதிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய இணையப் பாதுகாப்பு எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் கார்களில் வழங்கப்படும் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பத்தை (Connected Car Technology) பயன்படுத்தும் இரண்டு செயலிகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதை இந்திய இணையப் பாதுகாப்பு அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) கண்டறிந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வாகனம் தொடர்பான விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

Tata Nexon

கடந்த 4ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் iRA 2.0 மற்றும் iRA.ev ஆகிய இரண்டு செயலிகளிலும் நான்கு முக்கியமான பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக CERT-In தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு உயர் ஆபத்து நிலை (High Severity) வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பழைய செயலிப் பதிப்புகளைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும்.

இந்தக் குறைபாடுகளைப் பயன்படுத்தி ஊடுருவும் நபர்கள் டாடா கார் செயலிகளில் சேமிக்கப்பட்டுள்ள ரகசியத் தகவல்களைத் திருட முடியும். மேலும், பயனர்களைப் போலவே ஆள்மாறாட்டம் செய்து அவர்களது கணக்குகளை அணுகவும், வாகனம் தொடர்பான தகவல்களைப் பார்க்கவும், சில சேவைகளை அனுமதியின்றி பயன்படுத்தவும் வாய்ப்புள்ளதாகப் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

Tata Seirra

இதில் முதலாவது குறைபாடு, செயலிகளுக்குள் ரகசியக் குறியீடுகள் மற்றும் அனுமதி குறியீட்டு சாவிகள் (API Keys) நேரடியாகச் சேமிக்கப்பட்டிருப்பது தொடர்பானதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்து செயலியில் திறக்கப்படும் இணையப் பக்கங்களின் பாதுகாப்பைச் சரிபார்க்கும் மென்பொருளும் பலவீனமாக உள்ளது. இதன் மூலம் பயனர்களின் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம்.

மூன்றாவதாக செயலியின் செயல்பாடுகளைப் பதிவு செய்யும் பதிவுகளில் (Debug Logs) பயனர்களின் அங்கீகாரத் தகவல்கள் இடம்பெறுவதிலும் குறைபாடு உள்ளது. மேலும், இணையத் தொடர்புகளுக்கான பாதுகாப்புச் சான்றிதழைச் சரிபார்க்கும் முறையில் பிரச்னையும் உள்ளது. இதனால் தகவல் பரிமாற்றத்தில் இடையூறு ஏற்படுத்தி விபரங்களை இடைமறித்து எடுக்க வாய்ப்புள்ளது.

Also Read

CERT-In வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டாடா iRA 2.0 செயலியின் 26.7.3 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளும், iRA.ev செயலியின் 26.7.2 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் செயலிகள் பெட்ரோல், டீசல் கார்கள் மற்றும் மின்சார வாகனங்களில் இணைக்கப்பட்ட கார் வசதிகளைப் பயன்படுத்த உதவுகின்றன.

இந்தச் செயலிகள் மூலம் காரின் தற்போதைய நிலை, பயண விவரங்கள், வாகனத்தின் செயல்பாட்டு நிலை மற்றும் தொலைவிலிருந்து சில கட்டுப்பாடுகளை இயக்குவது போன்ற வசதிகளைப் பெற முடியும். எனவே, இந்தச் செயலிகளில் ஏற்படும் பாதுகாப்புப் பிரச்சினைகள் வெறும் கைப்பேசித் தகவல்களுடன் நின்றுவிடாமல் வாகனச் சேவைகளையும் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன.

Also Read

இதற்கிடையே, இந்தப் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. iRA 2.0 செயலிக்கு 26.8.2 என்ற புதிய பதிப்பும், iRA.ev செயலிக்கு 26.9.1 என்ற புதிய பதிப்பும் முறையே கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்பட்டதாக நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

மேலும், செயலியைத் திறக்கும்போது புதிய பதிப்பைப் பதிவிறக்கம் செய்வதற்கான அறிவிப்பு தானாகவே தோன்றும் என்றும், சில நிமிடங்களிலேயே மென்மொருளை புதுப்பிக்க முடியும். செயல்பாட்டில் உள்ள பயனர்களுக்கு புதுப்பிப்பு வழங்கப்பட்டுவிட்டதாகவும், இன்னும் புதுப்பிக்காத வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு வருவதாகவும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், கணக்குகளின் ரகசிய விவரங்கள் அல்லது வாகனம் தொடர்பான தகவல்கள் அனுமதியின்றி அணுகப்பட்டதற்கான எந்த ஆதாரமும் தங்களது ஆய்வில் கிடைக்கவில்லை என்று டாடா மோட்டார்ஸ் கூறியுள்ளது. தொடர்ந்து செயலியின் பாதுகாப்பு அமைப்புகளைக் கண்காணித்து வருவதாகவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

எனவே, டாடா கார் உரிமையாளர்கள் தங்களது கைப்பேசியில் உள்ள iRA 2.0 அல்லது iRA.ev செயலியின் பதிப்பை உடனடியாகச் சரிபார்க்க வேண்டும். பழைய பதிப்பாக இருந்தால் அதிகாரப்பூர்வ கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் புதிய பதிப்பைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அடையாளம் தெரியாத இணையதளங்களில் இருந்து செயலிகளைப் பதிவிறக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Article Published On: Saturday, November 7, 2026, 14:58 [IST]
English summary
Tata motors ira ira ev app security vulnerability cert in alert
மேலும்... #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out