5 லட்ச ரூபாய் கூட இல்ல... வெறும் ரூ.4.69 லட்சத்தில் புதிய டாடா கார்! 5 பேர் பயணிக்க தாராளமான கார்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காரை பற்றிய விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.4.69 லட்சம் என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான ஹேட்சபேக் வகை காராக டியாகோ விளங்குகிறது. மேலும், பாதுகாப்பான காராக டியாகோ 4-ஸ்டார் ரேட்டிங்கை கொண்டுள்ளது. இதனாலேயே டியாகோவின் விற்பனை சிறப்பாக இருக்கும் நிலையில், இந்த காரை அவ்வப்போது மறக்காமல் டாடா நிறுவனம் அப்கிரேட் செய்து விடுகிறது. அந்த வகையில் தற்போது டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.4.69 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதிகப்பட்சமாக ரூ.7.29 லட்சம் வரையில் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. CNG ஆப்ஷனில் ஆரம்ப விலை ரூ.5.79 லட்சமாகவும், அதிகப்பட்ச விலை ரூ.7.99 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட், பியூர், பியூர்+, பியூர்+ ஏ, கிரியேட்டீவ் மற்றும் கிரியேட்டீவ்+ என 6 விதமான வேரியண்ட்களில் புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில், கிரியேட்டீவ்+ வேரியண்ட்டை தவிர்த்து மற்ற அனைத்தையும் CNG ஆப்ஷனில் வாங்கலாம். 2026 டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரில் வெளிப்புறம், உட்புறம் மற்றும் தொழிற்நுட்ப வசதிகள் என அனைத்திலும் புதியதாக அப்கிரேட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய டியாகோவில் இருந்து அப்படியே தொடரப்பட்டுள்ளது.

2026 டியாகோவின் முன்பக்கத்தில் கூர்மையான டிசைனிலான ஹெட்லைட்கள், மெல்லியதான மற்றும் உயரமாக பொருத்தப்பட்ட க்ரில் மற்றும் பெரிய ஏர் டேம் உடன் ரீடிசைன் செய்யப்பட்ட பம்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களினால் டியாகோவின் முன்பக்கம் ஆனது முன்பை விட நிமிர்ந்த வடிவில் உள்ளது. 15-இன்ச் அலாய் சக்கரங்கள் புதிய டிசைனில் வழங்கப்பட்டுள்ளன.
சக்கரங்களுக்கு மேலே கருப்பு நிறத்தில் வீல் ஆர்ச் கிளாடிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் பின்பக்கத்தில் டெயில்லைட்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. பின்பக்க மேற்கூரையில் சிறிய அளவில் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்க பம்பரின் டிசைன் ஆனது முன்பை விட தெளிவானதாக காட்சியளிக்கிறது. மொத்தம் 6 விதமான கலர் ஆப்ஷன்களில் புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் கிடைக்கும்.
அவையாவன, டேடோனா கிரே, பாங்காங் பல்ஸ், பிரிஸ்டைன் வெள்ளை, பியூர் கிரே, சோபோ சர்ஜ் மற்றும் வாரணாசி வைப்ரன்ஸ் உள்ளிட்டவை ஆகும். புதிய டியாகோ காருக்கு உள்ளே டாஷ்போர்டு முன்பை விட தட்டையான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையில் திசைக்காட்டி நீக்கப்பட்டுள்ளது. செண்டர் கன்சோல் பகுதி மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரத்திற்கு சிறிய அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த காரின் AMT வேரியண்ட்களில் சுழற்றக்கூடிய கியர் செலக்டர் கிடைக்கும். தொழிற்நுட்ப அம்சங்களாக 10.25-இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் டச் ஸ்க்ரீன், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, ட்யூயல் வயர்லெஸ் சார்ஜிங் பேட்ஸ், பின் இருக்கை பயணிகளுக்கு ஏசி வெண்ட்ஸ், 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், கூல்டு க்ளோவ்பாக்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், டியாகோவின் என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும், புதிய 2026 டாடா டியாகோ வாடிக்கையாளர்களை கவரக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ள பலவேறு விதமான கலர் ஆப்ஷன்கள் நம்மை கவர்கின்றன. மேலும், டியாகோ CNG AMT காரில் பெடில் ஷிஃப்டர்களும் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதும் நம்மை கவர்கிறது.


Click it and Unblock the Notifications