ஒட்டுமொத்த இந்தியாவும் வாய் பிளக்க, சிங்கிள் சார்ஜில் 500கிமீ ஓடக்கூடிய காரை களமிறக்கிய டாடா!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய சியரா இவி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. மும்பையில் நடைபெற்ற இந்த காரின் அறிமுக நிகழ்ச்சியில் நமது டிரைவ்ஸ்பார்க் குழுவும் பங்கேற்றது. நாடு முழுவதும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த லேட்டஸ்ட் டாடா எலெக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
நீண்ட வருடங்களுக்கு பின் மீண்டும் களமிறக்கப்பட்ட டாடா சியரா மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரையில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான சியரா கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளதாக டாடா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே, பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது போதாது என்று எலெக்ட்ரிக் வெர்சனிலும் டாடா நிறுவனம் தற்போது சியராவை அறிமுகம் செய்துள்ளது.

சியரா இவி என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் காரில் அறிவித்ததை போன்று 75kWh பேட்டரி பேக் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 500கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்றும் டாடா நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. 250கிமீ பயணத்திற்கான சார்ஜை வெறும் 15 நிமிடங்களில் நிரப்பிவிடலாம் என கூறும் டாடா நிறுவனம் புதிய சியரா இவி காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 5.8 வினாடிகளில் எட்டிவிடலாம் என்றும் தெரிவித்துள்ளது.
சியரா இவி காருக்கான பேட்டரிக்கு முழு ஆயுட்கால உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள மிக முக்கியமான மற்றும் அசரடிக்கக்கூடிய தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், பார்க் அசிஸ்ட் மற்றும் சம்மன் மோட் ஆகும். இதில் பார்க் அசிஸ்ட் மூலமாக, காரே தனக்கான பார்க்கிங் பகுதியை கண்டறிந்து, அங்கு தானாக பார்க் செய்துக் கொள்ளுமாம்.

அதேநேரம், சம்மன் மோடில் காருக்கு வெளியே இருந்து மொபைல் போன் வாயிலாக காரை முன்னோக்கி, பின்னோக்கி நகர்த்த முடியும். மற்ற டாடா எலெக்ட்ரிக் கார்களை போலவே சியரா இவி-உம் டாடா மோட்டார்ஸின் ஆக்டி.இவி கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் சியரா இவி காரில் இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட உள்ளதாக ஏற்கனவே டாடா நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது.
அதன்படி, இந்த காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 103 கிலோவாட்ஸ் மற்றும் 164 என்.எம் டார்க் திறனையும், பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 175 கிலோவாட்ஸ் மற்றும் 340 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. இதில் முன்பக்க மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 14 ஆயிரம் RPM வேகத்திலும், பின்பக்க மோட்டார் அதிகப்பட்சமாக 16 ஆயிரம் RPM வேகத்திலும் இயங்கக் கூடியவைகளாக உள்ளன.
விலை குறைவான வேரியண்ட்களில் சியரா இவி காரில் எலெக்ட்ரிக் மோட்டாரின் பவர் பின் சக்கரங்களுக்கும், QWD வேரியண்ட்களில் அனைத்து நான்கு சக்கரங்களுக்கும் செல்லும். 75kWh பேட்டரி பேக் ஆப்ஷன் மட்டுமின்றி, 63kWh பேட்டரி பேக் ஆப்ஷனும் சியரா இவி காரில் வழங்கப்பட்டுள்ளது. சிறிய 63kWh பேட்டரி ஆனது அதிகப்பட்சமாக 440-இல் இருந்து 460கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது.
75kWh பேட்டரியை 15 நிமிடங்களில் 250-260கிமீ தொலைவிற்கு சார்ஜ் நிரப்பிவிடலாம், அதுவே 63kWh பேட்டரியில் 230-240கிமீ தொலைவிற்கான சார்ஜையே பெற முடியும். புதிய சியரா இவி கார் ஆனது 3.3 கிலோவாட்ஸ் சார்ஜர், 7.2 கிலோவாட்ஸ் ஹோம் சார்ஜர் மற்றும் 120 கிலோவாட்ஸ் DC ஃபாஸ்ட் சார்ஜர் என பல்வேறு விதமான சார்ஜிங் ஆப்ஷன்களை ஏற்கக்கூடியதாக உள்ளது.
மற்றப்படி தோற்றத்தை பொறுத்தவரையில், பெட்ரோல், டீசல் என்ஜின் சியரா காருக்கும், சியரா இவி எலெக்ட்ரிக் காருக்கும் இடையே பெரியதாக வித்தியாசம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரின் முன்பக்கத்தில் முக்கியமான சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. காரின் உட்புறத்தில் பல அலங்கார மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமாக, டாஷ்போர்டு ஆனது மூன்று லேயர்களாக வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சியரா இவி காரை அறிமுகத்திற்கு முன்னதாக, கடும் குளிர் பகுதிகளிலும், உயரமான மலைப்பாதைகளிலும், வெப்ப மிகுந்த கடற்கரை பகுதிகளிலும் மற்றும் கனமழையிலும் டாடா நிறுவனம் ஓட்டிப் பார்த்து சோதனை செய்துள்ளது. ஆதலால், எலெக்ட்ரிக் கார் என்கிற பயமின்றி இதனை தைரியமாக வாங்கலாம். புக் செய்தவர்களுக்கு ஜூலை 15ஆம் தேதி முதல் டெலிவிரி செய்யப்பட உள்ள புதிய டாடா சியரா இவி காரின் வேரியண்ட்களையும், அவற்றின் விலைகளையும் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.
| Variant | Battery & Drivetrain | Ex-Showroom Price |
| Pure 63kWh | 63kWh RWD | ₹18.79 Lakh |
| Empowered 63kWh | 63kWh RWD | ₹22.79 Lakh |
| Empowered 75kWh | 75kWh RWD | ₹23.79 Lakh |
| Average Variant Price | — | ₹21.79 Lakh |


Click it and Unblock the Notifications
