ரூ.40,000 கோடி முதலீடு, மாதத்திற்கு 1 லட்சம் கார்கள்... மாருதியை ஒரு கை பார்க்க டாடாவின் மெகா திட்டம்!!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது கார் உற்பத்தி திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. தற்போது நிலவும் கார்களுக்கான தேவையையும், புதிய மாடல்களின் அறிமுகம் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கு அதிகரித்து வரும் வரவேற்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மாதத்திற்கு 1 லட்சம் கார்களை தயாரிக்கும் அளவுக்கு உற்பத்தியை உயர்த்தும் முயற்சியை தொடங்கியுள்ளது.
இதற்காக, டீலர்கள் மற்றும் உதிரிபாகங்கள் சப்ளையர்களுக்கும் உற்பத்தி மற்றும் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் அறிவுறுத்தல்களை டாடா மோட்டார்ஸ் வழங்கி உள்ளது. கடந்த சில மாதங்களாக நிறுவனத்தின் திட்டமிட்ட உற்பத்தி அளவு மாதத்திற்கு 75,000 கார்களாக இருந்தாலும், உதிரிபாகங்கள் சப்ளை உள்ளிட்ட பல நடைமுறை பிரச்னைகளால் சராசரியாக 65,000 கார்களையே தயாரிக்க முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் புக்கிங்கிற்கும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்களின் எண்ணிக்கைக்கும் இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. குறிப்பாக புதிய மாடல்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தி அதற்கு ஈடான அளவில் இல்லாததால், காத்திருப்பு காலம் பல மாதங்கள் நீள்கிறது.
இதனை சரிசெய்யும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் அடுத்த நிதியாண்டு முதல் பெரிய அளவில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்கள் என்ற அளவில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

டாடா கார்ஸ் நிறுவனம் வரும் ஆண்டுகளில் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் தயாராகி வருகிறது. அடுத்த தலைமுறை நெக்ஸான் கார் வரும் 2027ஆம் ஆண்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவின்யா வரிசையில் புதிய மின்சார வாகனங்களும் வரவுள்ளன. மொத்தமாக இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் ஆறு புதிய மாடல்களை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போதுள்ள உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி, உதிரிபாகங்கள் வழங்கும் நிறுவனங்களின் திறனையும் ஒரே நேரத்தில் அதிகரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கடந்த காலங்களில் சில மாடல்களுக்கு அதிக தேவை இருந்தபோது உதிரிபாகங்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தடைகள் உற்பத்தியை பாதித்தன. புதிய திட்டத்தின் மூலம் இதுபோன்ற தடைகளை முன்கூட்டியே சமாளிக்க டாடா முயற்சி செய்கிறது.

மின்சார வாகனப் பிரிவிலும் உற்பத்தி அதிகரிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஹாரியர் EV போன்ற மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு, தற்போதைய உற்பத்தி திறனை விட தேவையை அதிகமாக்கியுள்ளது. சியரா EV உள்ளிட்ட புதிய மாடல்கள் சந்தையில் அதிக கவனத்தை பெறும் நிலையில், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி மற்றும் பிற முக்கிய உதிரிபாகங்களின் விநியோகத்தை வலுப்படுத்துவதிலும் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
கார் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, டாடா மோட்டார்ஸ் அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. வரும் 2027 முதல் 2031ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.37,500 கோடி முதல் ரூ.40,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன், இந்திய பயணிகள் கார் சந்தையில் தனது பங்களிப்பையும் கணிசமாக உயர்த்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
தற்போது டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன உற்பத்தி திறன் ஆண்டுக்கு சுமார் 8.5 லட்சம் யூனிட்களாக இருப்பதாக தொழில்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் மேலும் 3 லட்சம் யூனிட்கள் அளவுக்கு திறனை அதிகரித்து, ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான கார்களை தயாரிக்கும் நிலைக்கு செல்ல நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சனந்த் தொழிற்சாலை இதற்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உற்பத்தி விரிவாக்கம் டாடா மோட்டார்ஸுக்கு மட்டுமல்லாமல், புதிய கார் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் முக்கியமானதாக இருக்கலாம். உற்பத்தி அதிகரித்தால் பிரபலமான மாடல்களின் காத்திருப்பு காலம் குறைய வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், புதிய மாடல்கள் அறிமுகமான பிறகு அதிக முன்பதிவுகள் கிடைத்தாலும், அவற்றை விரைவாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் நிறுவனத்துக்கு கிடைக்கும்.
இந்தியாவில் கார் சந்தை மிக வலுவான நிலையில் உள்ளது. இதனை மனதில் வைத்து டாடா மோட்டார்ஸ் மட்டுமின்றி, மாருதி கார் நிறுவனமும் ஆண்டுக்கு 40 மில்லியன் கார்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு தனது முதலீட்டுத் திட்டங்களை வகுத்துள்ளது. ஹூண்டாய் நிறுவனமும் மூன்றாவது கார் ஆலையை இந்தியாவில் அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications



