மாருதியால கூட செய்ய முடியாத காரியத்தை செய்த டாடா மோட்டார்ஸ்.. இந்தியாவையே திரும்பி பார்க்க வச்சுட்டாங்களே!
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் தான் முதலிடத்தில் இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் முதல் முறையாக ஒரே மாதத்தில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்திருக்கிறது அந்நிறுவனம். இந்திய போன்ற பட்ஜெட்டை முக்கியமாகக் கருத்தும் ஒரு நாட்டில் முதன் முறையாக ஒரு நிறுவனம் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறது.
கடந்த மே மாதம் இந்தியவில் சுமார் 10,231 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது டாடா மோட்டார்ஸ். கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது இது அப்படியே இருமடங்காகும், அதாவது கிட்டத்தட்ட 102 சதவீதம் விற்பனை உயர்வாகும். கடந்தாண்டு மே மாதம் இந்தியாவில் வெறும் 5,068 எலெக்ட்ரிக் கார்களையே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. ஆனால் அப்போதும் இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக டாடாவே இருந்தது.

இந்த விற்பனை அளவுடன் இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையின் 39 சதவீத சந்தைப் பங்குகளைக் கைப்பற்றியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். இந்தியாவில் தற்போது ஆறு எலெக்ட்ரிக் கார் மாடல்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. டியாகோ EV, பன்ச் EV மற்றும் நெக்ஸான் EV ஆகிய மூன்று கார்களே டாடாவின் அதிகளவிலான எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கான முக்கியக் காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன.
இவற்றைத் தவிர்த்து ஹேரியர் EV, கர்வ் EV மற்றும் டிகோர் EV ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. இதில் ஹேரியர் EV-யே ப்ரீமியமான வசதிகளுடன் டாடாவின் ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் கார் மாடலாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் கார்களைத் தவிர்த்து, சியரா EV, சஃபாரி EV மற்றும் அவின்யா எக்ஸ் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களையும் இந்தியாவில் வெளியிட டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருகிறது. சியரா EV மற்றும் சஃபாரி EV ஆகியவை ஹேரியர் EV-யைப் போலவே மிகவும் ப்ரீமியமான ஒன்றாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த கார்களை மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்களுக்குப் போட்டியாக இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது டாடா மோட்டார்ஸ்.
கடந்த வாரம் தான் டியாகோ EV-யின் ஃபேஸ்லிப்ட் மாடலையும் டாடா மோட்டார்ஸ் வெளியிட்டது. முன்னதாக 8 லட்சம் ரூபாய் என்ற தொடக்க விலையில் இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதன் ஃபேஸ்லிப்ட் மாடலை 7 லட்சம் ரூபாய் என்ற தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது.
மேலும், புதிய டியாகோ EV-யுடன் BaaS திட்டத்தையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தயிருக்கிறது. BaaS திட்டத்துடன் வெறும் 4.69 லட்சம் ரூபாய் என்ற விலைக்கே மேம்படுத்தப்பட்ட டியாகோ EV ஃபேஸ்லிப்ட் மாடலை நாம் வாங்கலாம். மேலும் இது தான் தற்போதைய நிலையில் இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் எலெக்ட்ரிக் கார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இப்படி குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை வெளியிட்டிருப்பதையடுத்து வரும் மாதங்களில் டாடா எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக அந்நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களும் இந்திய எலெக்ட்ரிக் வாகன விற்பனை சந்தையில் டாடாவின் நிலையை வலுப்படுத்தவே செய்யும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: CNG கார்களில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் எப்போதுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனமே முன்னோடியாக இருந்து வந்திருக்கிறது. அதேபோல் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் பயன்பாட்டை அதிகரிப்பதிலும் டாடாவின் பங்கு அதிகமாகவே இருக்கிறது. அதனையே இந்த புதிய மைல்கல் காட்டுகிறது. வேறெந்த நிறுவனமும் இதுவரை செய்யாத சாதையை டாடா மோட்டார்ஸ் செய்திருக்கிறது.


Click it and Unblock the Notifications