டாடா கார் பிளாட்ஃபார்மில் ஜீப் எஸ்யூவிகள்? ஸ்டெல்லாண்டிஸ் புதிய ஒப்பந்தம்
டாடா கார்கள் உருவாக்கப்பட்ட கட்டமைப்பை பயன்படுத்தி புதிய கார்களை தயாரிக்க ஸ்டெலாண்டிஸ் குழுமம் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலமாக, இந்திய கார் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லமை இப்போது உலக அளவில் செல்ல இருப்பதுடன், உலகின் பெரிய கார் தயாரிப்பு குழுமங்களில் ஒன்றான ஸ்டெலாண்டிஸ் டாடா கார் கட்டமைப்பை பயன்படுத்த இருப்பது ஆட்டோமொபைல் உலகினரையும், கார் பிரியர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதமே டாடா கார்களுக்கான பிளாட்ஃபார்மை பயன்படுத்திக் கொள்வதற்காக ஸ்டெலாண்டிஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதுதொடர்பாக, இரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டதால் இதற்கான இறுதி ஒப்பந்தம் நேற்று (அக்டோபர் 12) கையெழுத்தாகி உள்ளது.

இதன்படி, டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் (TMPV) மற்றும் அதன் அங்கமாக செயல்படும் டாடா பயணிகள் மின்சார வாகன நிறுவனம் (TPEM) ஆகியவை ஸ்டெலாண்டிஸ் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக முறைப்படி அறிவித்தன. இதன்மூலமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் தயாரிப்பு பிளாட்ஃபார்ம்களை ஸ்டெலாண்டிஸ் பயன்படுத்தி புதிய மாடல்களை இந்தியாவில் உள்ள அதன் பொறியாளர் குழு மூலமாக உருவாக்க உள்ளது.
இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ் தயாரிக்கப்படும் புதிய கார் மாடல்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, உலக அளவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. உலக அளவில் ஸ்டெலாண்டிஸ் நிறுவனத்திற்கு பெரிய விற்பனை மற்றும் வினியோக கட்டமைப்பை பெற்றிருப்பதால் இரு நிறுவனங்களும் இந்த ஒப்பந்தம் மூலமாக பயன் பெறும்.
மஹாராஷ்டிர மாநிலம் ரஞ்சன்கானில் உள்ள டாடா மற்றும் ஃபியட் இந்தியா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கார் ஆலையில்தான் இந்த புதிய கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த ஆலையானது இரு நிறுவனங்களுக்கும் 50:50 என்ற முதலீட்டு பங்களிப்பில் செயல்பட்டு வருகிறது.
மேலும், டாடா கார் கட்டமைப்பை பயன்படுத்தி ஜீப் பிராண்டில் புதிய எஸ்யூவிகளை தயாரிக்க ஸ்டெலாண்டிஸ் குழுமம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், டாடா சியரா அடிப்படையில் ஜீப் பிராண்டில் புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக, விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், ஸ்டெலாண்டிஸ் கீழ் செயல்படும் இத்தாலியை சேரந்த ஃபியட் நிறுவனம் நீண்ட காலமாக இந்தியாவில் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இத்தாலியை சேர்ந்த ஃபியட் குழுமமும், அமெரிக்காவை சேர்ந்த க்றைஸ்லர் குழுமம் இணைந்து கூட்டணியாக செயல்பட்டு வந்தன. பின்னர், பிரான்ஸ் நாட்டை சேரந்த பிஎஸ்ஏ குழுமத்துடன் இணைந்து ஒரே குழுமமாக ஸ்டெலாண்டிஸ் என்ற பெரிய வாகன குழுமமாக உருவாக்கப்பட்டது.
தற்போது ஸ்டெலாண்டிஸ் குழுமத்தின் கீழ் ஃபியட், மஸேரட்டி, ஓபல், பீஜோ, வாக்ஸ்ஹால், அபார்த், ஆல்ஃபா ரோமிடோ, கிறைஸ்லர், டாட்ஜ், ஜீப், லான்சியா, ராம் டிரக்ஸ், சிட்ரோன் என உலகின் மிக பழமையானதும், பிரபலமானதுமான 14 கார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், உலகின் 4வது பெரிய கார் தயாரிப்பு குழுமமாகவும் விளங்குகிறது.
ஒருகாலத்தில் அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து தொழில்நுட்பங்களையும், உரிமங்களையும் பெற்று இந்திய நிறுவனங்கள் வாகனத் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டன. ஆனால், தற்போது காலமும் மாறியது, காட்சிகளும் மாறியது என்பதுபோல், இந்திய நிறுவனத்தின் கார் கட்டமைப்பு தொழில்நுட்பத்தை உலகின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு குழுமங்களில் ஒன்றான ஸ்டெலாண்டிஸ் பயன்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


