டாடா இந்தியாவில் வெளியிடும் 4 புதிய எலெக்ட்ரிக் கார்கள் இவை தான்
எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் முன்னணியில் இருந்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து நான்கு புதிய எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. கடந்த வாரம்தான் மேம்படுத்தப்பட்ட டியாகோ EV காரை வெறும் 4.69 லட்சம் ரூபாய் என்ற தொடக்க விலையில் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதற்குள்ளாகவே அடுத்ததாக டாடா எந்த எலெக்ட்ரிக் காரை வெளியிடும் என்ற ஆர்வம் எழுந்துவிட்டது. டாடாவின் புதிய கார் லைன்-அப் குறித்து விரிவாகப் பார்க்கலாம் வாங்க.
டாடா டிகோர் EV ஃபேஸ்லிப்ட்
டியாகோ EV-க்கு அடுத்து அதன் ட்வின்னான டிகோர் EV-யையே டாடா அப்டேட் செய்யவுள்ளது. டியாகோ ஹேட்ச்பேக் என்றால், டிகோர் செடான் வகையைச் சேர்ந்தது. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் நான்கே நான்கு செடான் கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது டிகோர். எரிபொருள், CNG மற்றும் எலெக்ட்ரிக் என மூன்று வகையான பவர்ட்ரெயின் தேர்வுகளுடன் டிகோர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து மாடல்களையுமே டாடா அப்டேட் செய்யும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. டியாகோ EV-யின் விலையைக் குறைத்தது போலவே, டிகோர் EV-யிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்வது மட்டுமில்லாமல் விலையையும் டாடா மோட்டார்ஸ் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் செடான் மாடலானது 12.49 லட்சம் ரூபாய் முதல் 13.75 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டாடா சியரா EV
டாடாவிடமிருந்து நிறைய வாடிக்கையாளர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கும் ஒரு காராக சியரா EV இருக்கிறது. கடந்தாண்டு இறுதியில் சியரா மிட்-சைஸ் எஸ்யூவி காரை இந்தியாவில் வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். அதன் எலெக்ட்ரிக் வடிவமாக சியரா EV-யை உருவாக்கி வருகிறது. சியரா எரிபொருள் எஸ்யூவி காரின் அதே டிசைன் அம்சங்கள் மற்றும் வசதிகளுடன், எலெக்ட்ரிக் பவர்ட்ரெயினை மட்டும் கொண்டு சியரா EV வடிவமைக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

தொழில்நுட்ப ரீதியில் மிகவும் மேம்பட்ட காராகவும் சியரா EV இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு இடைப்பகுதியில் ஹேரியர் EV காரை டாடா வெளியிட்டது. அதில் கொடுக்கப்பட்ட பேட்டரி பேக்குகள் மற்றும் எலெக்ட்ரிக் பவர்ட்ரெயினையே புதிய சியரா EV காரிலும் டாடா கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி என்பதால் 15 லட்சம் ரூபாய்க்கு மேலான விலையிலேயே இந்தப் புதிய எஸ்யூவி கொண்டிருக்கும்.
டாடா சஃபாரி EV
சியரா EV-யைப் போலவே, இந்தியாவில் ஏற்கனவே டாடா விற்பனை செய்து வரும் சஃபாரி என்ற எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டு வெளியாகவிருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடல் சஃபாரி EV. டாடாவின் முதல் மூன்று வரிசை சீட்கள் கொண்ட எஸ்யூவியாக இருந்த சஃபாரி EV இருக்கும். மஹிந்திரா XEV 9S என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவிக்குப் போட்டியாக இந்த சஃபாரி EV வெளியாகவுள்ளது.
மஹிந்திரா XEV 9S தான் இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் மூன்று வரிசை சீட்கள் கொண்ட எஸ்யூவி. தற்போது அதற்குப் போட்டியாக வேறெந்த எலெக்ட்ரிக் காரும் இந்திய சந்தையில் விற்பனையில் இல்லை. மேலும், இந்த XEV 9S 4.5 மீட்டர்களுக்கு மேலான எஸ்யூவிக்கள் பிரிவில் அதிகம் விற்பனையாகியும் வருகிறது. எனவே முடிந்த அளவிற்கு விரைவாக சஃபாரி EV-யை விற்பனைக்குக் கொண்டு வர டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருகிறது.
டாடா அவின்யா எக்ஸ்
டாடாவின் ப்ரீமியம் எலெக்ட்ரிக் காராக அவின்யா எக்ஸ் அடுத்த ஓராண்டிற்குள் இந்தியாவில் வெளியாகவுள்ளது. பல ஆண்டுகளாகவே அவின்யா லைன்-அப் கார்கள் குறித்து பேசி வருகிறது டாடா மோட்டார்ஸ். அவின்யா ஒரு காராக மட்டுமில்லாமல், ப்ரீமியமான கார்களை விற்பனை செய்யும் தனி பிராண்டாகவும் உருவாகவிருக்கிறது.
கடந்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி ஆட்டோ ஷோவிலேயே தயாரிப்பு நிலைக்கு அருகில் இருக்கக்கூடிய அவின்யா காரை காட்சிப்படுத்தியிருந்தது டாடா மோட்டார்ஸ். 5 மீட்டர்கள் நீளத்தில், மெர்சிடீஸ் பென்ஸ், ஆடி கார்கள் போல மிகவும் ப்ரீமியமான எலெக்ட்ரிக் காராக டாடா அவின்யா எக்ஸ் இருக்கும். 5, 6 மற்றும் 7 சீட்டர்களாக அவின்யா கார்களை நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னணியில் டாடா மோட்டார்ஸ் இருந்தாலும், மற்ற நிறுவனங்கள் கொஞ்சம் முயற்சி செய்தால் எட்டிப் பிடித்து விடும் தூரத்திலேயே இருக்கிறது. எனவே முடிந்த அளவிற்கு தனக்குக் கிடைத்த முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். வெறும் மூன்று எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களுடன் மஹிந்திரா முன்னேறி வந்து கொண்டிருக்கிறது.
டாடாவும் அதே வேகத்திற்கு ப்ரீமியமான புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே சியரா EV மற்றும் சஃபாரி EV ஆகியவற்றை இந்த 2026ம் ஆண்டு முடிவதற்குள்ளாகவே இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம். வரும் ஆண்டுகளில் தான் எலெக்ட்ரிக் கார் பிரிவில் போட்டி உக்கிரமாக இருக்கப் போகிறது. அதற்கு டாடாவும் வீரியமாக தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது.


Click it and Unblock the Notifications