வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு இந்தக் காரை வாங்குறாங்க.. ஏன் தெரியுமா?
இந்தியாவில் எஸ்யூவிக்கள் இப்போது அதிகம் விற்பனையாகி வருவது யாருக்கும் தெரியாத விஷயமில்லை. அதுவும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் என்றால் மக்கள் பாய்ந்து பாய்ந்து வாங்குகிறார்கள். தற்போதைய நிலையில் இந்தியாவில் மிகவும் ஹாட் செல்லிங் கார் பிரிவு என்றால் அது சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவு தான். இந்தப் பிரிவில் ஒரு கார் தொடர்ந்து அதிகம் விற்பனையாகி வருகிறது.
அது வேறெதுவும் இல்லை, டாடாவின் நெக்ஸான் (Tata Nexon) தான். சில மாதங்களுக்கு முன்பு தான் 1 மில்லியன், அதாவது 10 லட்சம் கார்கள் என்ற விற்பனை அளவை எட்டியது டாடா நெக்ஸான். இந்த அதிக விற்பனை அளவிற்கு டாடா நெக்ஸான் கடந்து வந்த பாதையை இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

2017 செப்டம்பரில் முதன் முதலில் நெக்ஸான் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். அங்கிருந்து தொடங்கி எட்டு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்களில் 10 லட்சம் கார்கள் என்ற விற்பனை அளவை இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் எட்டியிருக்கிறது. இந்த விற்பனை மைல்கல்லை எட்டும் முதல் டாடா கார் நெக்ஸான் தான் என்பது குறிப்பிடத்தக்கது. டாடாவின் வெறெந்த காரும் இதுவரை 10 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனை அளவை எட்டியதில்லை.
வெளியான முதல் மாதத்தில் வெறும் 2,772 யூனிட்டுகள் மட்டுமே நெக்ஸான் விற்பனையாகியிருந்திருக்கிறது. அதுவே அடுத்த பல மாதங்களுக்குத் தொடரவும் செய்திருக்கிறது. 2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4,000 யூனிட்டுகள் முதல் 6,000 யூனிட்டுகள் வரையிலேயே நெக்ஸான் எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. கொரோனா காலத்திலும் இந்த விற்பனை அளவில் பெரிய அளவில் மாற்றமில்லை.

2021ம் ஆண்டிற்குப் பின்பே நெக்ஸானின் விற்பனை உயரத் தொடங்கியது. முதலில் மாதம் 8,000 யூனிட்டுகள், பின்பு 10,000, தொடர்ந்து 15,000 என்ற அளவை எட்டிய நிலையில், தற்போது ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20,000 நெக்ஸான் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முறையே 19,810 யூனிட்டுகள் மற்றும் 18,126 யூனிட்டுகள் நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த அதிக விற்பனைக்கு கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வரி விதிப்பு மாற்றமும் ஒரு முக்கிய காரணம். கடந்தாண்டு செப்டம்பர் மாதமே விரி விதிப்பில் மாற்றம் கொண்டு வந்தது மத்திய அரசு. நெக்ஸான் போன்ற சிறிய ரக பட்ஜெட் கார்கள் மீதான வரி வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதனால் இந்தக் கார்ளின் விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்தது.
வரி மாற்றத்திற்கு முன்பு வரை 16,000 நெக்ஸான் கார்களையும், சராசரியாக 13,000 யூனிட்டுகளையுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வந்தது. வரி மாற்றத்திற்குப் பிறகு சராசரி அளவு 20,000 யூனிட்டுகளாக ஆகியிருக்கிறது. மேலும் இந்தாண்டு ஜனவரி மாதம் தான் அதிகபட்சமாக 23,365 நெக்ஸான் கார்களை ஒரே மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.
மேலும் கடந்த 2025ம் ஆண்டு தான் முதல் முறையாக ஒரே ஆண்டில் 2 லட்சம் நெக்ஸான் கார்கள் என்ற விற்பனை மைல்கல் எட்டப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு 2023ம் ஆண்டிலேயே அதிகபட்சமாக 1.70 லட்சம் நெக்ஸான் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. நடப்பு 2026ம் ஆண்டில் கூட முதல் நான்கு மாதங்களிலேயே 80,731 நெக்ஸான் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே வேகத்தில் சென்றால் இந்தாண்டு 2.20 லட்சம் யூனிட்டுகளுடன் நெக்ஸான் விற்பனையில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விற்பனையுடன் டாடாவின் அதிகம் விற்பனை செய்யப்படும் ஒரு காராகவும், தொடர்ந்து டாப் 10 பட்டியலில் இடம்பெறும் ஒரு காராவும் மாறியிருக்கிறது நெக்ஸான் சப்-காம்பேக்ட் எஸ்யூவி. இதன் விற்பனை தொடர்ந்து அதிகரிப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று வாடிக்கையாளர்களுக்கு நிறைய தேர்வுகளை டாடா கொடுப்பது தான்.
இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவியை பெட்ரோல், டீசல், CNG மற்றும் எலெக்ட்ரிக் என அனைத்து வரையான பவர்ட்ரெயின் தேர்வுகளுடனும் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. பெட்ரோலிலும், NA பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என இரண்டு தேர்வுகளைக் கொடுக்கிறது. CNG பவர்ட்ரெயின் மற்றும் டர்போ பெட்ரோல் காம்பினேஷனும் கூட விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications