சைஸில் 4 மீட்டர் கூட இல்லாத டாடா கார்கள்! 5-ஸ்டார் ரேட்டிங்கை பார்த்து வாங்கிய 4 லட்சம் பேர்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் மிகுந்த நம்பிக்கைக்குரிய கார் மாடல்களாக நெக்ஸான் (Nexon) மற்றும் பன்ச் (Punch) விளங்குகின்றன. எந்த அளவிற்கு என்றால், ஒவ்வொரு மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் டாப்-2 டாடா கார் மாடல்கள் இவை இரண்டும் தான். குறிப்பாக, கடந்த ஒரு வருடத்தில் இவற்றின் விற்பனை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
எந்த அளவிற்கு என்றால், இவை இரண்டும் சேர்த்து 2025 ஏப்ரல் - 2026 மார்ச் வரையிலான கடந்த 1 வருட காலத்தில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சரியாக சொல்ல வேண்டுமென்றால், 4 லட்சத்து 34 யூனிட்கள். அதாவது, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 4,00,034 டாடா பன்ச் மற்றும் நெக்ஸான் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி (Delivery) செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் காம்பாக்ட் எஸ்யூவி (Compact SUV) கார்கள் மார்க்கெட்டில் இந்த டாடா எஸ்யூவி கார்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்றால், மேற்கூறப்பட்ட ஒரு வருடத்தில் இந்தியாவில் மொத்தம் விற்பனையான காம்பாக்ட் எஸ்யூவி கார்களின் எண்ணிக்கையில் 31 சதவீதத்தை இந்த இரு டாடா எஸ்யூவி கார்கள் கொண்டுள்ளன.
ஆனால், டாடா பன்ச் மற்றும் நெக்ஸான் இரண்டும் காம்பாக்ட் எஸ்யூவி கார்களை காட்டிலும் அளவில் சிறியவை ஆகும். நெக்ஸான் ஆனது 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார் ஆகும். அதுவே, பன்ச் ஆனது இன்னும் அளவில் சிறியதான மைக்ரோ-எஸ்யூவி கார் ஆகும்.

இந்த இரு டாடா எஸ்யூவி கார்களும் கடந்த 2025-26 நிதியாண்டில் விற்பனையான 4 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களில் நெக்ஸானின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 54 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சராசரியாக ஒவ்வொரு மாதமும் சுமார் 18 ஆயிரம் நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதுவே, 2024 ஏப்ரல்- 2025 மார்ச் வரையிலான ஒரு வருடத்தில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 88 நெக்ஸான் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில் 2025-26 நிதியாண்டில் நெக்ஸான் கார்களின் விற்பனை 32.5% அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் மொத்தம் விற்பனையான காம்பாக்ட் எஸ்யூவி கார்களில் நெக்ஸான் பங்கு மட்டும் 16.7% அதிகமாகும்.
அதாவது, விற்பனையான 6இல் ஒரு காம்பாக்ட் எஸ்யூவி கார், நெக்ஸான் ஆகும். மறுப்பக்கம், டாடா பன்ச் கார்கள் 1 லட்சத்து 83 ஆயிரத்து 980 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உண்மையில், பன்ச் கார்களின் விற்பனை கடந்த 1 வருடத்தில் சற்று குறைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், 2024 ஏப்ரல்- 2025 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 96 ஆயிரத்து 572 பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது பன்ச் கார்களின் விற்பனை ஆனது 6.4% குறைந்துள்ளது. இருப்பினும், நெக்ஸான் உடன் சேர்ந்து பன்ச் ஆனது இந்தியாவின் சிறப்பாக விற்பனையாகும் காராக விளங்குகிறது.
கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் மொத்தம் விற்பனையான கார்களின் எண்ணிக்கையில் டாடா பன்ச் மற்றும் நெக்ஸானின் பங்கு மட்டுமே 14.3% ஆகும். இதற்கேற்ப இந்த இரு கார்களையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் டாடா நிறுவனம் மறக்காமல் அப்கிரேட் செய்து வந்துள்ளது. அந்த வரிசையில், நெக்ஸானுக்கு வருகிற 2027ஆம் ஆண்டில் மிக பெரிய அப்கிரேடை வழங்க டாடா தயாராகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸின் இந்த எஸ்யூவி கார்களுக்கு இந்த அளவிற்கான வரவேற்பு கிடைப்பதற்கான முக்கியமான காரணமாக நாங்கள் பார்ப்பது, இவை இரண்டும் பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுவது ஆகும். குறிப்பாக, நெக்ஸான் ஆனது பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, சிஎன்ஜி (CNG) ஆப்ஷன், எலெக்ட்ரிக் (Electric) வெர்சன் என பல்வேறு விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், பன்ச் காருக்கு அதன் அளவில் சிறியதான உடலமைப்பிற்காக அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








