சிங்கிள் சார்ஜில் 600 கிமீ ஓடிய டாடாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! ஒட்டுமொத்த உலகையும் மிரள விட்டுட்டாங்க
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் இவி (Tata Punch EV). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல், வரும் பிப்ரவரி 20ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) பற்றிய தகவல் தற்போது வெளியாகி, அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல் சிங்கிள் சார்ஜில் எவ்வளவு தூரம் பயணம் செய்கிறது? என்பதை பரிசோதனை செய்வதற்காக ராகுல் கக்கர் என்ற ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கையாளரை அழைத்திருந்தது. முதலில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து உதய்பூர் வரை மட்டுமே காரை ஓட்டி பார்த்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டது.

இந்த 2 நகரங்களுக்கு இடையேயான தொலைவு சுமார் 400 கிலோ மீட்டர்கள் ஆகும். ஆனால் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல் 34 சதவீத சார்ஜ் மீதம் இருக்கையிலேயே, ஜெய்ப்பூரில் இருந்து உதய்பூர் நகரை சென்றடைந்து விட்டது. எனவே உதய்பூரில் இருந்து குஜராத் மாநிலத்திற்குள் செல்ல முடிவு செய்யப்பட்டது.
இறுதியாக குஜராத் மாநிலம் ஹிமாந்த்நகர் பகுதியை அடைந்தபோது டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பேட்டரி முழுமையாக தீர்ந்து போனது. ஆனால் அப்போது ஒட்டுமொத்தமாக 593.6 கிலோ மீட்டர் தொலைவை (ஜெய்ப்பூர்-ஹிமாந்த்நகர்), டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்திருந்தது. இந்த சோதனையில் பெரும்பாலான நேரம் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல் நெடுஞ்சாலையில்தான் இயக்கப்பட்டது.

இருப்பினும் சுமார் 600 கிலோ மீட்டர்கள் என்பது பிரம்மிக்க வைக்க கூடிய ஒரு டிரைவிங் ரேஞ்ச் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இதன் காரணமாக இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பேட்டரியை வழங்கியுள்ளது. ஆனால் அந்த பேட்டரியை பற்றிய தொழில்நுட்ப தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ள நாம் வரும் 20ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தற்போதைய நிலையில் வெறும் 9.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக டாடா பன்ச் இவி திகழ்கிறது. இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படவுள்ள காரணத்தால், விலை சற்று உயர்த்தப்படலாம். இருப்பினும் இந்தியாவில் கிடைக்க கூடிய விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று என்ற பெருமையை டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் தொடர்ந்து தக்க வைத்து கொள்ளும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








