நாளை வெளிவரும் புதிய டாடா எலெக்ட்ரிக் கார் இதுதானா! சிட்ரோன் காரை எல்லாம் ஓட விட போகுது!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், பன்ச் இவி (Punch EV) எலெக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை நாளை (பிப்.20) அறிமுகப்படுத்த உள்ளது. 2024ஆம் ஆண்டில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பன்ச் இவி பெறும் முதல் பெரிய அப்டேட் இது ஆகும்.
கார் வெளியீட்டிற்கு இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று சிவப்பு நிறத்தில் சாலையில் செல்லும் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இந்த படங்களில் காரில் தெரியும் அலாய் சக்கரங்கள், சமீபத்திய டீசர்களில் காட்டப்பட்டபடி, இது பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த வரவிருக்கும் அப்டேட்டான கார் குறித்து இதுவரை வெளியிடப்பட்டுள்ள தகவல்களை இங்கு விரிவாகப் பார்ப்போம்.

வடிவமைப்பில் மாற்றங்கள்: டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் வெளிப்புற வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை டாடா பன்ச் பெட்ரோல் காரின் ஃபேஸ்லிஃப்ட் வடிவமைப்புடன் ஒத்திருக்கிறது. முன்பக்க பம்பர் மற்றும் ஏர் டேம் (Air Dam) மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது; இதற்காக முன்பு இருந்த முழு நீள DRL லைட் பார் நீக்கப்பட்டுள்ளது.
பெரிய ஹெட்லேம்ப் குழிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்கிட்-பிளேட் ஆகியவை புதிய பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட்டில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரின் பின்புறத்தில், புதிய டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் ஆனது பெட்ரோல் பதிப்பைப் போலவே இணைக்கப்பட்ட LED டெயில்-லேம்ப்களைக் கொண்டுள்ளது. மேலும், பம்பரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டுப் பகுதி பெரும்பாலும் மாறாமல் இருந்தாலும், புதிய ஏரோ-ஆப்டிமைஸ்டு அலாய் சக்கரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

உட்புற மேம்பாடுகள் மற்றும் அம்சங்கள்: டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் காரின் கேபினில் பெரிய மாற்றங்கள் இருக்காது, ஏனெனில் தற்போதைய மாடலிலேயே அதிக அம்சங்கள் உள்ளன. டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஸ்டீயரிங் சக்கர வடிவமைப்பு மற்றும் சென்டர் கன்சோல் அமைப்பு ஆகியவை அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மேம்படுத்தப்பட்ட அப்ஹோல்ஸ்டரி மற்றும் டிரிம் ஃபினிஷ் வழங்கப்படும்.
புதிய பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் காரின் உயர் வேரியன்ட்கள், பெரிய டாடா எலெக்ட்ரிக் கார்களின் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பெறலாம். வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங், கேபினுக்குள் வண்ண விளக்குகள், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற அம்சங்கள் தொடர்ந்து பன்ச் இவி காரில் இடம்பெறலாம்.
பேட்டரி, ரேஞ்ச் மற்றும் பவர்டிரெய்ன்: புதிய டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் குறிப்பிடத்தக்க அப்டேட்களில் ஒன்று அதன் பேட்டரி மற்றும் பவர்டிரெய்ன் பிரிவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள பன்ச் இவி, 25 kWh மற்றும் 35 kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. இதில், 25 kWh பேட்டரி பேக் நீக்கப்பட்டு, 35 kWh ஆப்ஷன் விலை குறைவான வேரியண்ட்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு ஆப்ஷனாக டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் மிட்-ரேஞ்சில் உள்ள 45 kWh பேட்டரி பேக், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பன்ச் இவி-யில் வழங்கப்படும் என்று டீசர் வீடியோக்கள் தெரிவிக்கின்றன. இந்த பேட்டரி முழு சார்ஜில் 593.6 கிமீ வரை ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது. தற்போதுள்ள பன்ச் இவி காரில் ஒரேயொரு எலக்ட்ரிக் மோட்டார் மட்டுமே முன்பக்கத்தில் வழங்கப்படுகிறது.
தற்சமயம் பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில், எலெக்ட்ரிக் மோட்டார் 25 kWh பேட்டரி உடன் 82 எச்பி மற்றும் 114 என்.எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. அதே சமயம் 35 kWh வேரியன்ட் 122 எச்பி மற்றும் 190 என்.எம் டார்க் திறனை வழங்குகிறது. பெரிய பேட்டரி பேக் அறிமுகப்படுத்தப்பட்டால், அதற்கேற்ப பவர் அவுட்புட் அதிகரிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மார்க்கெட் தொடர்ந்து வளர்ந்து வருவதில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் பங்களிப்பு முக்கியமானது. இத்தகைய கார், ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்யப்படுகிறது எனும்போது அது கவனத்தை ஈர்க்கிறது. மேம்படுத்தப்பட்ட டாடா பன்ச் இவி, இந்தியாவின் என்ட்ரி-லெவல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் பிரிவில் சிட்ரோயன் இசி3 (Citroen eC3) எலெக்ட்ரிக் காருக்கு மட்டுமே தற்போதைக்கு போட்டியாக உள்ளது. பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே டெலிவரிகள் (Deliveries) தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









