ஒரே மாதத்தில் 5,000 கார்கள் விற்பனை! டாடா பன்ச் EV படைத்த பிரம்மாண்ட சாதனை!
இந்தியாவில் மின்சார கார் வாங்கும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குறைந்த விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் டாடா பன்ச் EV கார் புதிய விற்பனை சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த மாதம் மட்டும் 5,000-க்கும் அதிகமான பன்ச் கார்கள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் ஒரு மாதத்தில் 5,000 யூனிட்டுகளுக்கும் மேல் விற்பனையான முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா பன்ச் EV பெற்றுள்ளது. இது டாடா நிறுவனத்திற்கு மட்டுமல்ல, இந்திய மின்சார வாகனச் சந்தைக்கும் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

ஏன் இவ்வளவு வரவேற்பு?
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை வாங்க நினைப்பவர்களுக்கு விலை முக்கிய காரணியாக இருக்கிறது. பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடும்போது ஆரம்ப விலை அதிகமாக இருப்பதால், பலரும் மின்சார கார்களை வாங்கத் தயங்குகின்றனர். இந்த தயக்கத்தைப் போக்கும் வகையில் பன்ச் EV கார் குறைவான விலையில் அறிமுகமாகியுள்ளது.
அதே நேரத்தில், இது ஒரு சிறிய காரைப் போன்ற தோற்றத்தைத் தராமல் எஸ்யூவி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், உயரமான இருக்கை அமைப்பு, நகர்ப்புறப் பயன்பாட்டிற்கு ஏற்ற அளவு ஆகியவை குடும்ப வாடிக்கையாளர்களை அதிகம் கவர்கின்றன.
பேட்டரி தேர்வுகள்
டாடா பன்ச் EV இரண்டு விதமான பேட்டரி தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. 30 kWh பேட்டரி கொண்ட மாடல் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 365 கிமீ வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து 40 kWh பேட்டரி கொண்ட மாடல் 468 கிமீ வரை செல்லும் திறனைக் கொண்டுள்ளது. இதனால் தினசரி அலுவலகப் பயணம் செய்பவர்கள் முதல் வார இறுதியில் வெளியூர் செல்ல விரும்புபவர்கள் வரை பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்ய முடிகிறது. குறிப்பாக, 40kWh பேட்டரி தேர்வு நீண்ட தூரப் பயணங்களுக்கும் உதவியாக இருக்கும்.

வசதிகளிலும் குறைவில்லை
டாடா பன்ச் EV காரில் வேரியண்ட்டைப் பொறுத்து 360 டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், சன்ரூஃப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளும் வாடிக்கையாளர்களைக் கவர்கின்றன. பாதுகாப்பைப் பொறுத்தவரை ஆறு ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்களுடன் பாரத் NCAP பாதுகாப்புச் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.
மிகப்பெரிய பலம்
எலெக்ட்ரிக் கார் வாங்குபவர்களுக்கு பேட்டரியின் ஆயுட்காலம் மற்றும் மாற்றுவதற்கான செலவு முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு டாடா நிறுவனம் 40 kWh பேட்டரி கொண்ட பன்ச் EV மாடலுக்கு முதல் உரிமையாளருக்கு 15 ஆண்டுகள் வரம்பற்ற கிலோமீட்டர் பேட்டரி உத்தரவாதத்தை வழங்குகிறது. அடுத்து 30 kWh பேட்டரி மாடலுக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிமீ உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இந்த உத்தரவாதம் நீண்ட காலப் பயன்பாட்டில் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
டாடாவின் ஆதிக்கம்
இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி கடுமையான போட்டியை ஏற்படுத்தி வருகின்றன. இருப்பினும், டாடா பன்ச் EV கார் விலை, வசதிகள் மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. டாடா நிறுவனத்தின் மற்ற எலெக்ட்ரிக் கார்களான நெக்ஸான் EV, கர்வ் EV உள்ளிட்ட மாடல்களும் விற்பனையில் பங்களித்து வருகின்றன. அக்டோபர் மாதத்தில் டாடா நிறுவனத்தின் மொத்த எலெக்ட்ரிக் கார் விற்பனை 16,244 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
ஒரு மாதத்தில் எலெக்ட்ரிக் கார் 5,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை என்பது தற்போதைய நிலையில் மிகப்பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. வரும் மாதங்களில் இந்தியாவில் EV கார் விற்பனை தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், டாடா பன்ச் EV காரும் விற்பனையில் பல புதிய மைல்கற்களை எட்டும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications


