6 லட்ச ரூபாய் டாடா காருக்கு 5-ஸ்டார் ரேட்டிங்... எமனே எதிர்ல வந்தாலும் தப்பிக்கலாம்!!
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch Facelift) கார் பாரத் என்சிஏபி (Bharat NCAP) மோதல் சோதனைகளின் முடிவில் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸின் வலுவான கட்டமைப்பு மற்றும் உயர் பாதுகாப்புத் தரத்திற்கான நற்பெயர் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
'மீண்டும்' என ஏன் கூறுகிறோம் என்றால், டாடா பன்ச் கார் ஏற்கனவே உலகளாவிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிலேயே 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது ஆகும். 2026ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட பன்ச் ஃபேஸ்லிஃப்ட், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வந்துள்ளது.

டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் ரூ.5.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அதன் பிரிவிலேயே சிறந்த அம்சங்களையும், உயர் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்குகிறது. அறிமுக நிகழ்வின் போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் ஃபேஸ்லிஃப்ட்டின் உறுதித்தன்மையை விளக்கும் விதமாக ஒரு மோதல் பரிசோதனையை நிகழ்த்தி காட்டியிருந்தது. அப்போது அதனை பற்றி நமது தளத்தில் கூட பார்த்திருந்தோம்.
அதில், பன்ச் கார் ஒரு முழு அளவிலான லாரி உடன் மோத விடப்பட்டு, உயரமான வாகனங்களுடன் நடக்கும் நிஜ உலக கார் மோதல் காட்சியை டாடா நிறுவனம் உருவகப்படுத்தியது. இந்த கடுமையான மோதலைத் தாங்கியும், காரின் உட்புறக் கட்டமைப்பு நிலைத்தன்மையுடன் இருந்தது. எனினும், அது ஒரு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு மதிப்பீடு அல்ல. மாறாக, காரின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் டாடா நிறுவனத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மட்டுமே ஆகும்.

பாரத் என்சிஏபி சோதனைகளில், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் பெரியவர்கள் மற்றும் குழந்தை பயணிகள் என இருவரது பாதுகாப்பிலும் 5 நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்றுள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 30.58 புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49க்கு 45 புள்ளிகளையும் புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் பெற்றுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட்டில் ஆறு ஏர்பேக்குகள் (அனைத்து வேரியண்ட்டுகளிலும்), ஆட்டோ-டிம்மிங் IRVM, டயர்களில் காற்றழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு (TPMS), ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ், மழை வருவதை உணர்ந்து செயல்படும் சென்சார்கள், கார்னரிங் வசதியுடன் கூடிய ஃபாக் விளக்குகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இவை மட்டுமின்றி, மைக்ரோ-எஸ்யூவி கார்கள் பிரிவிலேயே முதன்முறையாக 360-டிகிரி சரவுண்ட் வியூ கேமரா, SOS அழைப்பு, ஏறுமுகமான பாதைகளில் ஏறுவதற்கான கண்ட்ரோல், காரை சுற்றி டிரைவரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் அமைப்பு மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) ஆகியவையும் புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரில் அடங்குகின்றன.
2026 பன்ச் காரில் வழக்கமான 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் புதிய 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் என இரு என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் புதிய டர்போ என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கும் நிலையில், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி (AMT) கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா பன்ச் காரின் முந்தைய மாடலும் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றிருந்த நிலையில், புதிய 2026 மாடலும் அதே பாரம்பரியத்தைத் தொடர்கிறது. இது, டாடா மோட்டார்ஸ் வழங்கும் ஒரு பாதுகாப்பான கார் பன்ச் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









