இந்தியாவே வாங்க ஏங்கும் டாடா காரில் புதிய அம்சங்கள்! விலையை கரெக்ட்டா நிர்ணயிச்சா பெரிய ஹிட்டு அடிக்கும்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் புதிய டாடா பன்ச் எச்பிஎக்ஸ் (Tata Punch HBX) ஸ்பெஷல் எடிஷன் காரை காட்சிப்படுத்தி உள்ளது. கரடுமுரடான சாலைகளில் சாகசப் பயணங்களை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அட்வென்ச்சர் ரக கார், புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் மிக சக்திவாய்ந்த என்ஜினைக் கொண்டிருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு இப்போதே ஆட்டோமொபைல் பிரியர்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது.
இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட SUV கார் மாடல்களில் டாடா பன்ச் ஓர் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை உருவாக்கி வருகிறது. பெட்ரோல், CNG மற்றும் எலெக்ட்ரிக் என பல வகைகளில் கிடைக்கும் இந்த கார், தற்போது இன்னும் கூடுதல் முரட்டுத்தனமான தோற்றத்துடன் எச்பிஎக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஆக வெளிவரத் தயாராகிவிட்டது.

சாகசப் பயணங்களை விரும்புபவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில், தடிமனான பம்பர்கள், ஆர்மர் கார்டு ஸ்கிட் பிளேட்டுகள், இரட்டை நிறங்களில் 16-இன்ச் அலாய் சக்கரங்கள், கருப்பு நிற ரூஃப் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் (ORVM), ஏர்-ஷீல்டு பின்பக்க ஸ்பாய்லர் எனப் பார்ப்பதற்கே மிரட்டலாக இருக்கும் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
காருக்கு கீழ் வழங்கப்பட்டுள்ள தடிமனான பாடி கிளாடிங் மற்றும் வீல் ஆர்ச்சுகள் இதன் கம்பீரமான ஸ்டைலை மேலும் தூக்கி நிறுத்துகின்றன. இதன் எல்இடி விளக்குகள் மற்றும் DRL-கள் வழக்கமான பன்ச் காரில் இருந்து பெறப்பட்டு, இதன் கம்பீரத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. காரின் உட்புறம் வழக்கமான பன்ச் காரைப் போலவே இருந்தாலும், சாகச விரும்பிகளைக் கவரும் வகையில் ஸ்போர்ட்டியான முற்றிலும் கருப்பு நிறத்தில் ஃபினிஷிங் கொண்ட இருக்கைகள் வழங்கப்படலாம்.

இத்துடன், புதிய கேபின் வடிவமைப்பும் புதிய பன்ச் எச்பிஎக்ஸ் காரில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. ஆனால், எல்லாவற்றையும் விட இதன் என்ஜின் தான் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த காரில் 120 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த 1.2 லிட்டர் ஐ-டர்போ (iTurbo) பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைந்து, பயணத்தின்போது ஓட்டுநருக்கு ஒரு அதிரடியான அட்வென்ச்சர் உணர்வையும் அதிவேக முடுக்கலையும் வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. டாடா பன்ச் எச்பிஎக்ஸ் காரில் சாகசங்கள் மட்டுமின்றி, பாதுகாப்பிற்கும் உச்சகட்ட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஏர்பேக்குகள் மற்றும் 360-டிகிரி கேமரா உள்ளிட்டவை முக்கியமாகும்.
இவை மட்டுமின்றி, சாய்வான பாதையில் இறங்குவதற்கான கன்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் IRVM, டயர்களில் உள்ள காற்றின் அழுத்தத்தை கண்காணிக்கும் வசதி, மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைப்பர்களுடன் கூடிய தன்னிச்சையாக செயல்படக்கூடிய ஹெட்லேம்ப், ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் மானிட்டர் மற்றும் கார்னரிங் வசதியுடன் கூடிய முன்பக்க ஃபாக் விளக்குகள் போன்ற உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புத்தம் புதிய டாடா பன்ச் எச்பிஎக்ஸ் ஒரு லிமிடெட் எடிஷன் மாடலாக அறிமுகமாகலாம் அல்லது கார் வாங்கும்போதே பொருத்திக் கொள்ளக்கூடிய ஆக்செஸரி பேக்கேஜாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சந்தையில் கிடைக்கும் வழக்கமான பன்ச் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.65 லட்சம் ரூபாயாகவும், டர்போ-பெட்ரோல் மாடலின் விலை ரூ.8.29 லட்சம் ஆகவும் உள்ளது.
எனவே, அதீத சாகச அம்சங்களுடன் வரவிருக்கும் இந்த டாப்-ஸ்பெக் எச்பிஎக்ஸ் காரின் விலை இதைவிட சற்றுக் கூடுதலாகவே இருக்கும் எனத் தெரிகிறது. இந்திய சாலைகளில் புதிய சகாப்தம் படைக்கப்போகும் இந்த அட்வென்ச்சர் காரை ஓட்ட நீங்கள் தயாரா? என்பதை பற்றி கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications