பன்ச் எஸ்யூவியின் விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்.. இனி வாங்க முடியாது அவ்ளோ தான்!
இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனை செய்யப்பட்டு வரும் கார் அல்லது எஸ்யூவி என்றால் அது டாடா பன்ச் (Tata Punch) தான். மாருதியின் மற்ற விலை குறைவான சிறிய ரக கார்களை விட கடந்த ஜூன் மாதம் டாடாவின் பன்ச்சும், நெக்ஸானும் அதிகம் விற்பனையாகி அசத்தியிருக்கின்றன. இந்நிலையில், பன்ச் எஸ்யூவியின் விலையை உயர்த்தியுள்ளது டாடா மோட்டார்ஸ். வேரியன்ட் வாரியாக பன்ச் காரின் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
இந்த மைக்ரோ எஸ்யூவி காரை, ஸ்மார்ட், ப்யூர், ப்யூர் பிளஸ், அட்வென்சர், அக்காம்ப்ளிஷ்டு மற்றும் அக்காம்ப்ளிஷ்டு பிளஸ் என ஆறு வேரியன்ட்களாக இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.2 லிட்டர் NA பெட்ரோல் + CNG மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்று பவர்ட்ரெயின் தேர்வுகளை இந்தக் கார் கொண்டுள்ளது.

எவ்வளவு விலை உயர்த்தப்பட்டிருக்கிறது?
மூன்று பவர்ட்ரெயின் தேர்வுகளுடனுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் CNG + ஆட்டோமேட்டிக் பவர்ட்ரெயின் காம்போ தான் அதிகபட்ச விலை உயர்வைச் சந்தித்துள்ளது. இந்த பவர்ட்ரெயின் கொண்ட அனைத்து வேரியன்ட்களின் விலையையும் 7,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது டாடா மோட்டார்ஸ்.
அடுத்ததாக ப்யூர் பிளஸ், அட்வென்சர், அக்காம்பிளிஷ்டு மற்றும் அக்காம்பிளிஷ்டு பிளஸ் S ஆகிய வேரியன்ட்களின் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் + ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் காம்போ மற்றும் ப்யூர், ப்யூர் பிளஸ், அட்வென்சர், அட்வென்சர் S மற்றும் அக்காம்பிளிஷ்டு வேரியன்ட்களின் CNG + மேனுவல் காம்போவின் விலையை 6,000 ரூபாய் வரை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது.

இறுதியாக, NA பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின்களுடன் மேனுவல் கியர்பாக்ஸ் காம்போ கொண்ட வேரியன்ட்களின் விலையையே குறைந்தபட்சமாக 5,000 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். ஒட்டுமொத்தமாக பன்ச் எஸ்யூவியின் விலையை 5,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை தற்போது அந்நிறுவனம் உயர்த்தியிருக்கிறது.
இரண்டாவது விலை உயர்வு:
ஏற்கனவே ஏப்ரல் மாதம் பன்ச் உட்பட சில கார்களின் விலையை டாடா மோட்டார்ஸ் உயர்த்தியது. அந்த வகையில் பன்ச் எஸ்யூவிக்கு நான்கு மாதங்களில் இது இரண்டாவது விலை உயர்வாகும். ஏப்ரல் மாதமும் 5,000 ரூபாய் வரை அனைத்து பன்ச் வேரியன்ட்களின் விலையையும் உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்.
அந்த வகையில் ஜனவரி மாதம் அப்டேட் செய்யப்பட்ட பன்ச் ஃபேஸ்லிப்ட் வெளியான பிறகு ஆறு மாதங்களில் இந்த மைக்ரோ எஸ்யூவியின் விலை 10,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. அடுத்த ஆறு மாதங்களில் மீண்டும் விலை உயர்வு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பன்ச் மட்டுமின்றி எந்தக் கார் அல்லது பைக்கை வாங்குவது என்றாலும், உடனடியாகத் திட்டமிடுவது சிறந்தது. தற்போது இந்த மைக்ரோ எஸ்யூவி காரை இந்தியாவில் 5.70 லட்சம் ரூபாய் முதல் 10.67 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதலில் ஆண்டுக்கு இரண்டு முறையாக இருந்த விலை உயர்வு தற்போது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாக மாறியிருக்கிறது. எனவே டாடா பன்ச் மட்டுமின்றி எந்தக் காரை வாங்கத் திட்டம் வைத்திருந்தாலும், கூடிய விரைவில் அதனை செயல்படுத்துவது சிறந்தது. இல்லையென்றால் நீங்கள் திட்டமிட்ட காரை வாங்குவதற்கே கூடுதலாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். பன்ச் விலை கூடியிருக்கிறது என்றாலும் வாடிக்கையாளர்களின் வாங்கும் முடிவை மாற்றும் அளவிற்குக் கூடவில்லை.


Click it and Unblock the Notifications