ரூ.13.99 லட்சத்தில் டாடா சியரா டார்க் எடிஷன் அறிமுகம்... கருப்பு நிறத்தில் மிரட்டும் தோற்றம்!!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா எஸ்யூவியின் புதிய டார்க் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் சியரா எஸ்யூவியின் லெஜென்ட் சீரிஸ் பதிப்பு அறிமுகமான நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது இந்த பிரத்யேக கருப்பு வண்ணத்திலான தோற்றத்தில் சியரா எஸ்யூவி வந்துள்ளது
சியரா டார்க் எடிஷனின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.13.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பதிப்பு Pure L, Pure L (O), Pure+ L, Adventure+ L, Accomplished மற்றும் Accomplished+ என பல்வேறு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். அனைத்து வசதிகளும் கொண்ட டாப் வேரியண்ட்டின் விலை ரூ.21.59 லட்சமாக உள்ளது.

சியரா டார்க் எடிஷனின் முக்கிய அம்சமாக புதிய Friesian Black என்ற வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காரின் பாடி முழுவதும் கருப்பு தோற்றத்தை வலுப்படுத்தும் வகையில் பேட்ஜ்கள் மற்றும் சில வெளிப்புற அலங்காரப் பகுதிகளிலும் டார்க் ஃபினிஷ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 19 இன்ச் அலாய் வீல்களும் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. முன்புறம் மற்றும் பின்புறத்திலும் இதே டார்க் தீம் தொடர்கிறது.
வெளிப்புற மாற்றங்களுக்கு இணையாக கேபினிலும் புதிய கருப்பு வண்ண தீம் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான கருப்பு நிற இன்டீரியருடன் Violet Eclipse என அழைக்கப்படும் ஊதா நிற அலங்கார அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் வழக்கமான சியராவுடன் ஒப்பிடும்போது கேபினுக்கு தனித்துவமான தோற்றம் கிடைக்கிறது. லெதரெட் இன்டீரியர் உள்ளிட்ட வசதிகள் அந்தந்த வேரியண்ட்டுக்கு ஏற்ப தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

தோற்றத்தில் மட்டுமே அலங்கார அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதால், வழக்கமான எஞ்சின் தேர்வுகள் தக்க வைக்கப்பட்டு இருக்கின்றன. வழக்கம்போல் சியரா எஸ்யூவியில் கிடைக்கும் 1.5 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் ஹைப்பீரியன் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் கைரோஜெட் டீசல் எஞ்சின் தேர்வுகள்தான் டார்க் எடிஷனிலும் வழங்கப்படுகின்றன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் தொடர்கின்றன.
வேரியண்ட்டைப் பொறுத்து சியரா டார்க் எடிஷனில் பல்வேறு பிரீமியம் வசதிகள் கிடைக்கின்றன. குறிப்பாக உயர்நிலை வேரியண்ட்களில் டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், குளிர்ச்சியை வழங்கும் வென்டிலேட்டட் இருக்கைகள், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் ADAS பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுகின்றன.
சமீபத்தில் அறிமுகமான சியரா லெஜென்ட் சீரிஸ் மாடலை அடிப்படையாகக் கொண்டே டார்க் எடிஷன் உருவாக்கப்பட்டுள்ளது. லெஜென்ட் சீரிஸ் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வேரியண்ட்களிலும் கூடுதல் வசதிகளை சியரா காரில் டாடா வழங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது கருப்பு நிறத்தை மையமாகக் கொண்ட இந்த சிறப்பு பதிப்பு அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் சியரா வரிசையில் வாடிக்கையாளர்களுக்கான தேர்வு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
டாடா சியரா எஸ்யூவி பாதுகாப்பு அம்சங்களிலும் சிறப்பான தேர்வாக உள்ளது. இநத் கார் பாரத் என்சிஏபி அமைப்பு சோதனையிலும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. மேலும், 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டியும் கொடுக்கப்படுகிறது.
டாடா சியரா டார்க் எடிஷனுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. வரும் அக்டோபர் மாதம் டெலிவரி கொடுக்கும் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தனித்துவமான தோற்றத்தில் தேர்வு செய்ய விரும்புவோருக்கு இந்த சியரா டார்க் எடிசன் நிச்சயம் கவரும் வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications


