ஜூன் 30இல் அறிமுகமாகும் ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்த டாடா கார்! கம்மி விலையில் வாங்கினாலும் 500km ரேஞ்ச்!
இந்தியாவில் தற்சமயம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் கார் அறிமுகங்களுள் ஒன்று, டாடா சியரா இவி ஆகும். பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன் கொண்ட சியரா காருக்கான வரவேற்பு அதிகமாக கிடைக்க ஆரம்பித்ததை பார்த்த பின், சியரா இவி எலெக்ட்ரிக் காரை முடிந்தவரையில் விரைவாக அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் மும்முரமாக பணியாற்றி வருகிறது.
டீசர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வரும் நிலையில், சியரா இவி வருகிற ஜூன் 30ஆம் தேதி பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டீசரில் சியரா இவி காரின் தோற்றம் வெளிக்காட்டப்பட்டாலும், இந்த புதிய எலெக்ட்ரிக் காரில் என்னென்ன மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட உள்ளன என்பது குறித்த விபரங்கள் எதையும் இன்னும் டாடா மோட்டார்ஸ் வெளியிடவில்லை.

இந்த நிலையில், புதிய சியரா இவி காரின் விலை குறைவான எண்ட்ரி-லெவல் 'பியூர்' வேரியண்ட்டில் 65kWh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படலாம் என்கிற தகவல் தற்போது கிடைத்துள்ளது. இதனை காட்டிலும் விலைமிக்க டாடா ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரிலும் இதே 65kWh பேட்டரி தான் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டில் வழங்கப்படுகிறது.
ஹாரியர் இவி காரை காட்டிலும் விலை குறைவானதாக, அதேநேரம் டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரை காட்டிலும் விலைமிக்கதாக புதியதாக சியரா இவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் எண்ட்ரி-லெவல் பியூர் வேரியண்ட்டில் 65kWh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், விலைமிக்க டாப் வேரியண்ட்டில் 75kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம்.

ஹாரியர் இவி காரிலும் 75kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த 75kWh பேட்டரி மற்றும் இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உடன் ஹாரியர் இவி காரின் டாப் வேரியண்ட் QWD செட்-அப் உடன் கிடைக்கிறது. புதிய சியரா இவி காரிலும் QWD செட்-அப் வழங்கப்படும் என டாடா நிறுவனம் உறுதியளித்துள்ளதால், 75kWh பேட்டரி ஆப்ஷன் உடன் இந்த காரின் டாப் வேரியண்ட்டையும் QWD செட்-அப் உடன் வாங்கலாம்.
இவ்வாறு, செயல்படுதிறனில் ஹாரியர் இவி காருக்கு இணையானதாக புதிய சியரா இவி உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால், எலெக்ட்ரிக் மோட்டாரில் இருந்து கிடைக்கும் ஆற்றல் அளவுகளிலும் இந்த இரு கார்களுக்கும் இடையே பெரியதாக வித்தியாசம் இருக்காது என எதிர்பார்க்கிறோம். ஹாரியர் இவி சிங்கிள் மோட்டார் வேரியண்ட்களில் அதிகப்பட்சமாக 238 பிஎச்பி மற்றும் 315 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடிகிறது.
இந்த வேரியண்ட்களில் பொருத்தப்படும் 65kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 538கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். அதுவே, ஹாரியர் இவி QWD காரில் அதிகப்பட்சமாக சுமார் 622கிமீ வரையிலான ரேஞ்ச் கிடைக்கிறது. அதேபோல், பெரிய பேட்டரியினால் இந்த காரில் 504 என்.எம் வரையிலான டார்க் திறன் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹாரியர் இவி காரின் அதே 65kWh பேட்டரியை பெற்றாலும், ஹாரியர் இவி-ஐ காட்டிலும் சியரா இவி எடை குறைவானதாக உருவாக்கப்படுவதால் ரேஞ்ச் சற்று கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல், 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை எட்ட குறைந்தது 6.3 வினாடிகளை ஹாரியர் இவி எடுத்துக் கொள்ளும் நிலையில், சியரா இவி இதனை காட்டிலும் இன்னும் விரைவாக 100kmph வேகத்தை எட்டக் கூடியதாக இருக்கும்.
ஹாரியர் இவி காரின் அறிமுகத்தின் போது, அந்த எலெக்ட்ரிக் காரை கேரளாவில் உள்ள சுமார் 4,000 அடி உயரமான யானை பாறையில் ஏற்றி டாடா நிறுவனம் சாதனை படைத்திருந்தது. அதேபோல், புதிய சியரா இவி காரை அபுதாபியில் உள்ள தால் மொரீப் மணற்குன்று மீது ஏற்றி அதன் தரத்தை டாடா நிறுவனம் வெளிக்காட்ட உள்ளது. சமீபத்தில் வெளியான டீசர்களில் மணல் நிறைந்த பாலைவனத்தில் சியரா இவி இயங்குவது போல் காட்டப்பட்டு இருந்ததால், தால் மொரீப் மணற்குன்று சோதனையை டாடா நிறுவனம் ஏற்கனவே நடத்தி முடித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications