டாடா சியரா EV.. ஒருவழியாக இந்தியாவில் அறிமுகமானது.. பார்க்க அட்டகாசமா இருக்கு!
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் காரான சியரா EV-யை அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். கடந்தாண்டு நவம்பர் மாதம் சியரா எரிபொருள் எஸ்யூவியை டாடா வெளியிட்டது. வாடிக்கையாளர்களிடம் இந்த எஸ்யூவி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது புதிய சியரா EV-யை அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். வரும் ஜூன் 30ம் தேதியன்று இந்த எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது அந்நிறுவனம்.
தற்போது காரின் வெளிப்புறத் தோற்றத்தையே முழுவதுமாகக் காட்டியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். புதிய டீஸர் வீடியோ மூலமாக சியரா EV-யை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கறது. கிட்டத்தட்ட சியரா எரிபொருள் காரின் டிசைனையே புதிய சியரா EV-யும் கொண்டுள்ளது. முகப்புப் பக்கத்தைத் தவிர. முகப்புப் பக்கத்தில், கிரில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டும் எலெக்ட்ரிக் காருக்கு ஏற்றது போல மூடப்பட்டது போல சியரா EV-யில் இருக்கிறது. இதனை வைத்தே இரண்டு கார்களையும் நாம் அடையாளம் காண முடியும்.

பக்கவாட்டிலும் காரின் பின்பக்கமும் இரண்டு கார்களுக்கும் இடையே எந்த வேறுபாடுகளும் இல்லை. சியராவும், சியரா EV-யும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கிறது. பக்கவாட்டில் அலாய் வீல்களின் வடிவமைப்பும் கூட ஒரே மாதிரியாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சியரா EV-யை சியரா எஸ்யூவியின் இன்னொரு வேரியன்ட் என்று சொல்லும் அளவிற்குத் தான் டிசைன் மாற்றங்கள் இருக்கின்றன. முற்றிலுமாக புதிய கார் என்று சொல்லும் வகையில் இல்லை. ஆனால் அது நல்ல விஷயம் தான்.
சியரா எஸ்யூவியே கடந்தாண்டு தான் வெளியிடப்பட்டது. எனவே டிசைனை புதிதாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இதுவே ஃபிரஷ்ஷான டிசைன் தான். சியரா.ev பேட்ஜ் மற்றும் பச்சை நிற நம்பர் பிளேட்களைக் கொண்டே இரண்டு கார்களையும் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உட்புற டிசைன், வசதிகள் மற்றும் பவர்ட்ரெயின் குறித்த விவரங்களை டாடா பகிர்ந்து கொள்ளவில்லை. அது வெளியிட்டின் போதே தெரியவரும். பவர்ட்ரெயினைப் பொறுத்தவரை ஹேரியர் EV-யைப் போலவே இந்த சியரா EV இருக்கும் எனத் தகவல்கள் கூறுகின்றன. அதன் பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புகளே புதிய சியரா EV-யிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அந்த வகையில் இந்தப் புதிய மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியானது 65 kWh மற்றும் 75 kWh பேட்டரி பேக் தேர்வுகளைக் கொண்டிருக்கும். ஹேரியர் EV-யானது அதிகபட்சமாக 627 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டிருக்கும் நிலையில், சியரா EV அதனைவிட சிறியதாகவும் எடை குறைவானதாகவும் இருக்கும் பொருட்டு, சற்று கூடுதல் ரேஞ்சைக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹேரியர் EV-யில் கொடுக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையான அம்சங்களை சியரா EV-யிலும் நாம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக குவாடு வீல் டிரைவ், அதாவது ஆல் வீல் டிரைவ் வசதியை ஹேரியர் EV-யைப் போலவே, சியரா EV-யிலும் டாடா கொடுக்கவிருப்பதை ஏற்கனவே டீஸரிலேயே அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹேரியர் EV-யை விட சற்று குறைவான விலையில் சியரா EV வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த வகையில் 18 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இந்த மிட்-சைஸ் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் மஹிந்திரா BE 6, ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், எம்ஜி ZS EV மற்றும் மாருதி e விட்டாரா உள்ளிட்ட மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக வெளியாகிறது புதிய டாடா சியரா EV.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சியரா EV-யின் டிசைன் எதிர்பார்ப்பட்டதைப் போலவே சிறப்பாகவே இருக்கிறது. விலையும் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது சற்று குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்தப் பிரிவின் அதிகம் விற்பனையாகும் காராக சியரா EV வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸ் தான் முன்னணி நிறுவனம் என்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது, குறிப்பாக விலையில்.


Click it and Unblock the Notifications