கூடுதல் அம்சங்களுடன் புதிய எஸ்யூவியை வெளியிட்டுள்ளது டாடா
சமீபத்தில் டாடாவின் வெற்றிகரமான ஒரு கார் என்றால் அது சியரா தான். கடந்தாண்டு நவம்பரில் அறிமுகமாகி, இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த மிட்-சைஸ் எஸ்யூவியின் சிறப்பு எடிஷன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். தற்போது ஒவ்வொரு மாதமும் சராசரியாக 7,000 யூனிட்டுகள் என்ற அளவில் சியரா எஸ்யூவி விற்பனையாகி வருகிறது.
இந்தக் காரின் விற்பனையை மேலும் உயர்த்தவும், தொடர்ந்து ஃப்ரஷ்ஷாக வைத்திருக்கவும் புதிய சிறப்பு எடிஷன்களை வெளியிட்டுள்ளது டாடா. காஸ்மெடிக்காக கூடுதல் ஸ்டைலிங் அம்சங்களை எதிர்பார்ப்பவர்கள் மற்றும் கூடுதல் வசதிகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் இந்த சியரா சிறப்பு எடிஷன் மாடல்களை வாங்கலாம். ஜூபிலி எடிஷன் (Jubilee Edition) என இந்த சிறப்பு எடிஷனுக்கு பெயரிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ்.

சியரா எஸ்யூவியானது ஸ்மார்ட் பிளஸ், ப்யூர், ப்யூர் பிளஸ், அட்வென்சர், அட்வென்சர் பிளஸ், அக்காம்பிளிஷ்டு மற்றும் அக்காம்பிளிஷ்டு பிளஸ் என ஏழு வேரியன்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஸ்மார்ட் பிளஸ், ப்யூர் மற்றும் அட்வென்சர் ஆகிய மூன்று வேரியன்ட்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மூன்று விதமான ஜூபிலி எடிஷன் சியரா கார்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது டாடா மோட்டார்ஸ்.
மூன்று மாடல்களிலும் மூன்று விதமான கூடுதல் அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலில் ஸ்மார்ட் பிளஸ் ஜூபிலி எடிஷன். அடிப்படையான ஸ்மார்ட் வேரியன்டுடன் கூடுதல் அம்சங்கள் வேண்டும் என்பவர்கள் இந்த சிறப்பு எடிஷன் மாடலை வாங்கலாம். ரூ.11.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி ஸ்மார்ட் பிளஸ் ஜூபிலி எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு எடிஷன் மாடலில் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ரியர் பார்க்கிங் கேமரா, ரூஃப் ரெயில், லெதர் போன்ற சீட்கள், நான்கு ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் ஆகிய வசதிகள் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது, ப்யூர் வேரியன்டை அடிப்படையாகக் கொண்ட ஜூபிலி எடிஷன். 13.39 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இதனை நாம் வாங்கலாம். இங்கே கூடுதலாக முன்பக்க மற்றும் பின்பக்க டேஷ்கேம்கள், ரூஃப் ரெயில், பார்சல் டிரே, மேக்னடிக் சன்ஷேடு, லெதர் போன்ற சீட் கவர்கள், லெதர் போன்ற ஸ்டீயரிங் வீல் கவர் மற்றும் வெளிப்புற கிளாடிங் பேக்கேஜ் ஆகியவை கொடுக்கப்படுகின்றன.
மூன்றாவதாக அட்வென்சர் ஜூபிலி எடிஷன். 16.19 லட்சம் ரூபாய் விலையில் தொடங்கி இதனை நாம் வாங்கலாம். இங்கே சியரா ROQ அக்சஸரி கிட், முன்பக்க மற்றும் பின்பக்க ஸ்கிட் பிளேட்கள், ஹூடு ஸ்கூப், விண்டோ லைன் மற்றும் வீல் ஆர்ச் கிளாடிங், பாடி டீகல்கள், முன்பக்க மற்றும் பின்பக்க டேஷ்கேம்கள் ஆகியவை கூடுதலாகக் கொடுக்கப்படுகின்றன.
ஸ்மார்ட் பிளஸ், ப்யூர் மற்றும் அட்வென்சர் ஆகிய ஸ்டாண்டர்டு வெர்ஷன்களை விட கூடுதல் வசதிகளுடன் மேற்கூறிய ஜூபிலி எடிஷன் வெர்ஷன்களின் விலையும் கொஞ்சம் மட்டும் கூடுதலாக நிர்ணியிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூடுதல் அம்சங்கள் கொடுக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்து சிறப்பு எடிஷனில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறியது போல அடிப்படை வேரியன்டிலேயே கூடுதல் அம்சங்கள் வேண்டும் என்பவர்கள் ஸ்மார்ட் பிளஸ் ஜூபிலி வேரியன்டை தேர்வு செய்யலாம். மற்ற இரண்டு வேரியன்ட்களையும் கூடுதல் காஸ்மெடிக் ஸ்டைலிங் அம்சங்களுக்காகத் தேர்ந்தெடுக்கலாம். கடந்த ஆறு மாதங்களில் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் முக்கியமான ஒரு போட்டியாளராக மாறியிருக்கிறது டாடா சியரா. புதிய சிறப்பு எடிஷன் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தேர்வுகளைக் கொடுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications