ரூ.11.99 லட்சத்தில் டாடா சியரா லெஜண்ட் சீரிஸ் அறிமுகம்... விலை, சிறப்பம்சங்கள் விபரம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா எஸ்யூவியின் புதிய லெஜண்ட் சீரிஸ் (Legend Series) மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள சியரா மாடல்களுடன் இந்த புதிய வகைகள் கூடுதலாக விற்பனை செய்யப்பட உள்ளன. புதிய சீரிஸ் ரூ.11.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கும்.
லெஜண்ட் சீரிஸில் மொத்தம் 5 முக்கிய வேரியண்ட்டுகள் மற்றும் 18 விதமான வகைகளில் இடம்பெற்றுள்ளன. Smart+ L, Pure L, Pure L(O), Pure+ L மற்றும் Adventure+ L என தேர்வுகளில் வழங்கப்படுகின்றன. வழக்கமான சியரா வகைகளுடன் ஒப்பிடும்போது, புதிய வகைகளில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காக சுமார் ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை கூடுதல் தொகை செலுத்த வேண்டும்.

Smart+ L தான் புதிய வரிசையின் ஆரம்ப நிலை வேரியண்ட்டாக உள்ளது. இதில் செயற்கை லெதர் இருக்கைகள் மற்றும் உட்புற அலங்காரம், ஸ்டீயரிங் கட்டுப்பாடுகள், தானாக மடங்கும் பக்கவாட்டு கண்ணாடிகள் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கின்றன. இதன் பெட்ரோல் மேனுவல் மாடலின் விலை ரூ.11.99 லட்சமாகவும், டீசல் மேனுவல் மாடல் ரூ.13.49 லட்சத்திலும் கிடைக்கிறது.
அடுத்ததாக வரும் Pure L வேரியண்ட்டில் 10.25 அங்குல தொடுதிரையுடன் இன்ஃஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ, பின்புற கேமரா, 8 ஸ்பீக்கர் ஆடியோ அமைப்பு, க்ரூஸ் கன்ட்ரோல், டயர் காற்றழுத்த கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ.13.79 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Pure L(O) வகையில் பனோரமிக் சன்ரூஃப், தானியங்கி ஹெட்லைட்டுகள் மற்றும் மழையை உணர்ந்து இயங்கும் தானியங்கி வைப்பர்கள் போன்ற வசதிகள் கிடைக்கின்றன. இதன் விலை ரூ.14.29 லட்சத்தில் தொடங்குகிறது. இதற்கு அடுத்த Pure+ L வகையில் முன்புற காற்றோட்ட இருக்கைகள், 6 வழிகளில் மின்சார முறையில் இயக்கக்கூடிய ஓட்டுனர் இருக்கை, டூயல்-ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், செயற்கை லெதர் உட்புற அப்ஹோல்ஸ்ட்ரி உள்ளிட்ட கூடுதல் வசதிகள் உள்ளன.
லெஜண்ட் சீரிஸின் அதிக வசதிகள் கொண்ட Adventure+ L வகையில் 360 டிகிரி கேமரா, கண்ணுக்குப் புலப்படாத பகுதிகளில் வரும் வாகனங்கள் குறித்த கண்காணிப்பு அமைப்பு, முன்புற பார்க்கிங் சென்சார்கள், டெரெயின் மோடுகள், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியன்ட் லைட்டிங், குளிரூட்டப்பட்ட க்ளவ் பாக்ஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. இதன் ஆரம்ப விலை ரூ.16.99 லட்சமாக உள்ளது.
லெஜண்ட் சீரிஸ் அறிமுகத்துடன் சியராவின் எஞ்சின் தேர்வில் மாற்றம் செய்யப்படவில்லை. 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் தொடர்கின்றன. வேரியண்ட்டை பொறுத்து மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, Pure+ L முதல் சியராவின் டர்போ பெட்ரோல் ஆட்டோமேட்டிக் தேர்வு கிடைக்கிறது. அதேபோல் Adventure+ L வகையில் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

