அடேங்கப்பா.. டாடா சியரா இவ்வளவு மைலேஜ் கொடுக்குதா.. நம்பவே முடியலையே!
இந்திய வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை ஒரு காரில் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் பெர்ஃபாமன்ஸுடன் மைலேஜும் மிகவும் முக்கியம். அதிக மைலேஜ் கொடுக்கும் கார் மாடலே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களாகவும் இருந்து வந்திருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவில் டாடா புதிதாக வெளியிட்ட சியரா எஸ்யூவி மாடலின் மைலேஜ் விவரங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. அது குறித்து விரிவாக இங்கே நாம் பார்க்கலாம்.
கடந்த ஆண்டு இறுதியில் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் புதிய சியரா எஸ்யூவி மாடலை வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். விண்டேஜ் சியராவை, சற்று மாடர்னான டிசைன் கலந்து புதிய சியராவாக வடிவமைத்திருந்தது அந்நிறுவனம். டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் வரை அனைத்திலும் வாடிக்கையாளர்களின் மனதைக் கவர்ந்த எஸ்யூவி மாடலாகவும் இது இருந்தது.

இந்தக் காரில் மூன்று இன்ஜின் தேர்வுகளைக் கொடுத்திருந்தது டாடா மோட்டார்ஸ். 1.5 லிட்டர் NA பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்று இன்ஜின் தேர்வுகள். இதில் இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளையும் முற்றிலும் புதிதாக உருவாக்கி இந்தக் காரில் பயன்படுத்தியிருந்தது அந்நிறுவனம். 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை முதன்மையாகவும், அதனை அடிப்படையாக்க கொண்டு 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினையும் டாடா உருவாக்கியிருந்தது.
டாடா சியரா மைலேஜ்:
1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினானது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொண்டிருந்தது. இதில் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பவர்ட்ரெயினானது லிட்டருக்கு 17.40 கிமீ வரையிலான மைலேஜும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட பவர்ட்ரெயினானது லிட்டருக்கு 16.90 கிமீ வரையிலான மைலேஜும் கொடுக்கிறது.

அதேபோல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை மட்டுமே எக்ஸ்க்ளூஸிவ்வாகக் கொடுத்திருக்கிறது டாடா. சிறப்பான பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருப்பதோடு, பவர்ஃபுல்லான இந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 15.30 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கிறது.
இறுதியாக 1.5 லிட்டர் டீசல் இன்ஜின். இந்த டீசல் இன்ஜின், சியரா மட்டுமின்றி, டாடாவின் மற்ற எஸ்யூவிக்களான ஹேரியர் மற்றும் சஃபாரி ஆகியவற்றிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொடுத்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
இதில் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பவர்ட்ரெயினானது லிட்டருக்கு 21.26 கிமீ வரையிலான மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட பவர்ட்ரெயினானது லிட்டருக்கு 19.22 கிமீ வரையிலான மைலேஜையும் கொடுக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. இங்கே குறிப்பிட்டப்பட்டிருக்கும் அனைத்து மைலேஜ் அளவுகளுமே ARAI அமைப்பினால் சோதனை செய்யப்பட்டு பெறப்பட்டவையே ஆகும்.
வழக்கமாக ARAI அமைப்பு குறிப்பிடும் மைலேஜ் அளவுகளை விட தினசரிப் பயன்பாட்டில் நாம் பெறும் மைலேஜ் குறைவாகவே இருக்கும். அதற்கு டாடா சியராவும் விதிவிலக்கல்ல. எனவே இதே மைலேஜ் அளவுகளை சியராவில் எதிர்பார்க்க முடியாது. இதனை விட சற்று குறைவான அளவிலேயே தினசரிப் பயன்பாட்டில் மைலேஜை நாம் பெறமுடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எது எப்படி இருந்தாலும் இது ஒரு மிட்-சைஸ் எஸ்யூவிக்கு சிறப்பான மைலேஜ் அளவுகள் தான். காரை சரியாக ஹேண்டில் செய்தால் அதிகளவிலான மைலேஜை நாம் பெற முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் டர்போ பெட்ரோல் இன்ஜினில் மட்டும் இவ்வளவு அதிக மைலேஜை கண்டிப்பாக நாம் எதிர்பார்க்க முடியாது. அது அப்படியான பெர்ஃபாமன்ஸையும் வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








