அம்பாஸிடர் மாதிரி அந்த காலத்துல ரொம்ப பிரபலம்! மறுபடியும் வந்து மார்க்கெட்டை மொத்தமா வளச்சு போட்றுச்சு!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை டாடா சியரா (Tata Sierra) கார், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து புதிய தலைமுறை டாடா சியரா காரின் டெலிவரி (Delivery) பணிகள், நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கின.
ஆனால் அதற்குள்ளாகவே 20 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு டாடா சியரா கார்கள் டெலிவரி செய்யப்பட்டு விட்டன. டாடா சியரா காரை ஏற்கனவே 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் முன்பதிவு (Bookings) செய்துள்ளனர். அத்துடன் டாடா சியரா காருக்கு தொடர்ந்து சிறப்பான முறையில் முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

எனவே வரும் மாதங்களில், டாடா சியரா கார், மிகப்பெரிய விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா சியரா கார் இந்திய சந்தையில் முதல் முறையாக கடந்த 1991ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2003ம் ஆண்டு அதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.
இருப்பினும் சுமார் 22 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு, டாடா சியரா கார் தற்போது மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா சியரா காரில் வழங்கப்பட்டுள்ள 'ட்ரிபிள் ஸ்க்ரீன் லே அவுட்', அதன் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதாவது டாடா சியரா காரின் டேஷ்போர்டில் 3 திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு திரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும். அதன் அளவு 10.25 இன்ச் ஆகும். மற்ற 2 திரைகளில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகும். அதன் அளவு 12.3 இன்ச் ஆக உள்ளது. இதுதவிர முன் பக்க பயணியின் இருக்கை முன்பாகவும் ஒரு திரை வழங்கப்பட்டுள்ளது. அதன் அளவும் 12.3 இன்ச் ஆகவே இருக்கிறது.
இவை எல்லாம் தவிர, பனரோமிக் சன்ரூஃப், ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, கூல்டு க்ளவ் பாக்ஸ் மற்றும் ட்யூயல் ஸோன் முழு ஆட்டோமேட்டிக் டெம்ப்ரேச்சர் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும் (Features), டாடா சியரா கார் கொண்டுள்ளது.
அத்துடன் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features), டாடா சியரா காரில் வழங்கப்பட்டுள்ளன.
செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களை (Engine Options), புதிய டாடா சியரா கொண்டுள்ளது. அத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களையும் (Gear Box Options), டாடா சியரா கார் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா காரின் ஆரம்ப விலையை வெறும் 11.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது மிகவும் சரியான விலை நிர்ணயம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. இதன் காரணமாகவே டாடா சியரா கார், வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாறியுள்ளது.
மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு எல்லாம், டாடா சியரா காரின் வருகை, விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








