ஏரிஸ் காருக்கு ‘டாக்ஸி' முத்திரை வேண்டாம்... டாடா எடுத்த பெரிய ரிஸ்க்!
இந்திய காம்பேக்ட் செடான் சந்தையில் மிக சவாலான விலையில் புதிய ஏரிஸ் செடான் காரை டாடா கார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.5.29 லட்சம் ஆரம்ப விலையில் வந்துள்ள இந்த கார், வழக்கமான செடான் அறிமுகமாக மட்டும் இல்லாமல், தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் என பல்வேறு கார் மாடல்கள் தனிநபர் பயன்பாடு மற்றும் வணிக ரீதியிலான டாக்ஸி மார்க்கெட்டிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், டாடா டிகோர் கார் கூட தனிநபர் மற்றும் டாக்ஸி மார்க்கெட்டிலும் விற்பனை செய்யப்படுகிறது. தனிநபர் பயன்பாடு மற்றும் டாக்ஸி என இரண்டிலும் உள்ள கார்களை வைத்து சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது விவாதம், நையாண்டி பதிவுகளை பார்க்க முடியும்.

அதேநேரத்தில், ஒரே கார் மாடலை இரண்டிலும் விற்பனை செய்வதன் மூலமாக கார் உற்பத்தி செலவு, விலை நிர்ணயம் மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்தும் இலக்கு உள்ளிட்ட பல விஷயங்களில் கார் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. இதனால், இரண்டிலுமே கார்களை விற்பனை செய்யும் அடிப்படையாக வைத்தே பல நிறுவனங்கள் வர்த்தகக் கொள்கை முடிவுகளை எடுக்கின்றன.
இந்த நிலையில், ஏரிஸ் செடான் காரை டாடா கார்ஸ் நிறுவனம் டாக்ஸி மார்க்கெட்டுக்கு கிடையாது; தனிநபர் பயன்பாட்டுக்கு மட்டுமே இந்த காரை விற்பனை செய்வோம் என்று துணிச்சலாக அறிவித்துள்ளது. இந்த முடிவு பார்க்கும்போது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், இதற்கு பின்னால் வர்த்தக அளவில் சில ஆய்வுகளை செய்தே டாடா இந்த முடிவை எடுத்துள்ளது.
தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளும், வாடகை கார்களின் தேவைகளும் வெவ்வேறானவையாக உள்ளன என்று டாடா கார்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், அதிக மைலேஜ், நீடித்த பயன்பாட்டை டாக்ஸி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் நிலையில், தனிநபர் பயன்பாட்டு வாகனங்களை வாங்குவோரின் எதிர்பார்ப்பும், பயன்பாடும் முற்றிலும் வேறாக உள்ளன.
அத்துடன், காம்பேக்ட் செடான் பிரிவில் சுமார் 65 சதவீதம் பேர் தனிப்பட்ட பயன்பாட்டுக்காகவே காரை வாங்குகின்றனர். இருந்தபோதிலும், வாடகைக் கார் சந்தையை மனதில் வைத்து உருவாக்கப்படும் கார்களையே தனிநபர் வாடிக்கையாளர்களும் தேர்வு செய்ய வேண்டிய நிலை இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. இந்த குறையை போக்கும் நோக்கத்தில்தான் ஏரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. தனிநபர் பயன்பாட்டு பிரிவு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வசதிகள், தேவைகளை கருத்தில்கொண்டு ஏரிஸ் காரை உருவாக்கி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதை வெறும் டாடா நிறுவனத்தின் வர்த்தக உத்தி என்று மட்டும் பார்க்க முடியாது. காம்பேக்ட் செடான் என்றாலே வாடகை கார் என்ற ஒரு பொதுவான பார்வை உருவாகியிருக்கும் நிலையில், அதிலிருந்து ஏரிஸை முற்றிலும் விலக்கி வைக்க டாடா முயற்சிக்கிறது. குடும்பத்திற்காக வாங்கும் தனிப்பட்ட கார், உரிமையாளரின் விருப்பம் மற்றும் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் கார் என்ற புதிய அடையாளத்தை உருவாக்குவதற்கு டாடா முயற்சிக்கிறது.
அதற்காகவே ஏரிஸ் காரின் வடிவமைப்பிலும் டாடா அதிக கவனம் செலுத்தியுள்ளது. அகலமான தோற்றம், எல்இடி முகப்பு விளக்குகள், பகல்நேர விளக்குகள், டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் மற்றும் தனித்துவமான பின்புற விளக்கு அமைப்பு ஆகியவை வழக்கமான நடைமுறை செடான் தோற்றத்திலிருந்து வேறுபட்ட உணர்வை கொடுக்க முயற்சிக்கின்றன. இரட்டை வண்ணத் தேர்வு போன்ற அம்சங்களும் இதன் தனித்துவத்தை அதிகரிக்கின்றன.
உட்புறத்திலும் ஏராளமான அம்சங்கள் உள்ளன. காற்றோட்ட வசதியுடன் கூடிய லெதரெட் இருக்கைகள், 26.03 செமீ தொடுதிரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 419 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருப்பதால் குடும்பப் பயன்பாட்டிலும் நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பிலும் தனிநபர் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ஏபிஎஸ், ஹில் ஹோல்டு கன்ட்ரோல் மற்றும் ஐஎஸ்ஓஃபிக்ஸ் இருக்கை பொருத்தும் வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதனுடன் கண்ணுக்கு புலப்படாத பகுதியில் வரும் வாகனங்கள், நடமாட்டத்தை கண்காணித்து எச்சரிக்கும் பிளைண்ட் வியூ மானிட்டர், 360 டிகிரி கேமரா மற்றும் மல்டிவியூ டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் போன்ற வசதிகளும் உள்ளன.
இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வருகிறது. சிஎன்ஜி எரிபொருள் மாடலிலும் மேனுவல் மற்றும் ஏஎம்டி தேர்வுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக சிஎன்ஜியுடன் ஏஎம்டி இணைக்கப்பட்டிருப்பது நகர்ப்புற குடும்ப வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.
ஆனால், இங்கு டாடா எடுத்திருப்பது ஒரு ரிஸ்க் என்பதையும் மறுக்க முடியாது. ஏரிஸ் வாடகை கார் சந்தைக்குள் கொண்டு செல்லாமல், தனிநபர் வாடிக்கையாளர்களை மட்டுமே நம்புவது அதிக அளவிலான விற்பனையை பெறுவதில் ஒரு சவாலாக இருக்கலாம். குறிப்பாக இந்தியாவில் எஸ்யூவி மாடல்களின் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், தனிநபர் வாடிக்கையாளர்களை செடான் பக்கம் ஈர்ப்பது எளிதான காரியமாக இருக்காது.
அதே நேரத்தில், தனிநபர் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தனி அடையாளம் ஏரிஸ் காருக்கு போட்டியாளர்களைவிட ஒரு புதிய வாய்ப்பையும் உருவாக்குகிறது. டாடாவின் நோக்கம் வெறும் செடான் விற்பனையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இந்த கார் டாக்ஸிக்கு கிடையாது என்ற எண்ணத்தை உருவாக்கும் முயற்சியாக இருக்கிறது.
டாடாவின் இந்த துணிச்சலான முடிவு காரணமாக ஏரிஸ் வெற்றி பெறுகிறதா என்பதை அதன் ஆரம்ப விலை அல்லது அம்சங்களால் மட்டும் தீர்மானிக்க முடியாது. தனிநபர் வாடிக்கையாளர்களிடம் இந்த புதிய அடையாளம் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதுதான் முக்கியம். வாடகை கார் சந்தையின் வர்த்தக வாய்ப்பை விட்டுவிட்டு, தனிநபர் வாடிக்கையாளர்களை மட்டுமே மையப்படுத்தி டாடா எடுத்துள்ள இந்த முடிவு, இந்திய செடான் சந்தையில் ஒரு புதிய பரிசோதனை முயற்சியாகவே பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications


