5 லட்சம் ரூபாய் விலையில் பெட்ரோல் & எலெக்ட்ரிக் என இரண்டு வடிவிலும் வெளியாகும் புதிய டாடா கார்
அப்டேட் செய்யப்பட்ட 2026 டியாகோ ஃபேஸ்லிப்ட் (Tiago Facelift) மற்றும் 2026 டியாகோ EV ஃபேஸ்லிப்ட் (Tiago EV Facelift) கார்களை ஒரு சிறிய டீஸர் வீடியோ மூலமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ் (Tata Motors). மே 28ம் தேதியன்று இந்த இரண்டு கார்களையும் இந்தியாவில் வெளியிடவிருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேம்படுத்தப்பட்ட புதிய டியாகோ கார்களில் என்னென்ன மேம்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
வெளிப்புற டிசைன் மாற்றம்:
டியாகோ மற்றும் டியாகோ EV ஆகிய இரண்டு கார்களிலும் வெளிப்புறம் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். இரண்டு கார்களிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட போல்டான முகப்பு விளக்குகள் மற்றும் கண் புருவம் போல முகப்பு விளக்கின் மேலே LED DRL-கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டியாகோ எரிபொருள் காரில் முகப்பு விளக்குகளுக்கு இடையில் கருப்பு நிற கிரில் கொடுக்கப்பட்டிருப்பதோடு, ஆல்ட்ராஸில் இருப்பதைப் போலவே பெரிய மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. டியாகோ EV-யில் கிரில் மற்றும் பம்பர் பெரிய அளவில் இல்லாமல் மினிமலிஸ்டிக்கான ஸ்டைலில் பாடியின் நிறத்திலேயே இருக்கிறது. டியாகோவில் பிக்சல் வடிவ ஃபாக் விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. EV-யில் அது இல்லை.
இரண்டு கார்களிலும் பக்கவாட்டில் புதிய வடிவிலான 15 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் பின்பக்கமும் விளக்குகள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. வெர்டிகல் LED ஸ்ட்ரிப்களுடன் கூடிய புதிய பின்பக்க விளக்குகள் இரண்டு கார்களிலும் கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இரண்டு பக்க விளக்குகளுக்கும் இடையில் சங்கியான பார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு கார்களிலும் பின்பக்கம் பம்பர் பெரிதாக கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. டியாகோ மற்றும் டியாகோ EV ஆகிய இரண்டு கார்களிலுமே பின்பக்க வடிவமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கிறது. TIAGO அல்லது TIAGO.EV எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயரை வைத்து மட்டுமே அது எரிபொருள் டியாகோவா அல்லது எலெக்ட்ரிக் டியாகோவா என்பதை நம்மால் கூற முடிகிறது.
உட்புற வசதிகள்:
உட்புறம் என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்ற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. எனினும் டீஸர் காணொளியை வைத்து குறிப்பிபட்ட வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. அப்படி ஒரு வசதியாக 360 டிகிரி கேமரா இருக்கிறது. முன்பக்க பம்பர் மற்றும் ORVM-களில் இருக்கும் கேமரா பாடுகளை வைத்து இந்த வசதி கொடுக்கப்பட்டிருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதனைத் தவிர்த்து புதிய மாடர்னான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குகள், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், கூல்டு கிளவ்பாக்ஸ், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய அம்சங்களை புதிய டியாகோ மற்றும் டியாகோ EV கார்களில் நாம் எதிர்பார்க்கலாம். டேஷ்போர்டு டிசைன் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை இந்தக் கார்களில் கடந்தாண்டு தான் அப்டேட் செய்தது டாடா. எனவே அதில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.
தற்போது டியாகோ மற்றும் டியாகோ EV ஆகிய இரண்டு கார்களிலும் பாதுகாப்பிற்காக இரண்டு ஏர்பேக்குகள் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. புதிய ஃபேஸ்லிப்ட் வெர்ஷன்களில் இவற்றை ஆறு ஏர்பேக்குகளாக ஸ்டாண்டர்டாக டாடா மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மேலும் சில பாதுகாப்பு அம்சங்களையும் புதிய கார்களில் டாடா மேம்படுத்தியிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பவர்ட்ரெயின்:
எரிபொருள் டியாகோ காரின் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதே 1.2 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினே புதிய காரிலும் இருக்கும். 5 ஸ்பீட மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் தேர்வுகளைப் பெற்றிருக்கும் இந்த இன்ஜினானது 86 hp பவர் மற்றும் 113 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
CNG பவர்ட்ரெயினும் இந்தக் காரில் உண்டு. இதே இன்ஜினே CNG வெர்ஷனிலும் பயன்படுத்தப்படுகிறது. CNG எரிபொருளில் இயங்கும் போது இந்த இன்ஜின் 75.5 hp பவர் மற்றும் 96.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. CNG வெர்ஷனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளையும் கொண்டுள்ளது.
டியாகோ EV காரில் தற்போது கொடுக்கப்பட்டு வருவதை விட சற்று பெரிய பேட்டரி பேக்குகளை கூடுதல் ரேஞ்சுக்காக டாடா கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அப்டேட் செய்யப்பட்ட பன்ச் EV-யில் இந்த மாற்றத்தை டாடா செய்திருந்தது. எனவே அதே மாற்றம் டியாகோ EV-யிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது டியாகோ EV காரில் 19.2 kWh மற்றும் 24 kWh என இரண்டு பேட்டரி பேக் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 19.2 kWh பேட்டரி பேக்குடன், 61 hp பவர் மற்றும் 110 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பவர்ட்ரெயின் செட்டப்பானது 223 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டிருக்கிறது.
24 kWh பேட்டரி பேக்குடன் 75 hp பவர் மற்றும் 114 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் செட்டப்பானது அதிகபட்சமாக 293 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுத்து வருகிறது.
விலை மற்றும் போட்டியாளர்கள்:
புதிய மாற்றங்களுடன் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதை விட சற்று கூடுதல் விலையில் இரண்டு ஹேட்ச்பேக் கார்களும் வெளியாகவுள்ளது. டியோகா காரானது தற்போது 4.60 லட்சம் ரூபாய் முதல் 7.68 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் டியாகோ EV காரானது 7.99 லட்சம் ரூபாய் முதல் 11.14 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டியாகோ EV காருக்கு தற்போது BaaS (Battery as a Service) திட்டத்தை டாடா கொடுக்கவில்லை. ஆனால் பன்ச் EV காருக்கு அதனை வழங்கி வருகிறது. எனவே புதிய டியாகோ EV-யையும் BaaS திட்டத்தின் கீழ் டாடா வழங்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது விற்பனை செய்யப்படுவதை விட குறைவான தொடக்க விலையிலேயே இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை வாடிக்கையாளர்களால் வாங்க முடியும்.
டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரானது மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்டு i10 நியாஸ் உள்ளிட்ட தொடக்கநிலை ஹேட்ச்பேக் கார்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் டாடா டியாகோ EV காரானது எம்ஜி காமெட் EV மற்றும் சிட்ரன் eC3 உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்களுக்குப் போட்டியாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
இந்தியாவில் டாடா விற்பனை செய்து வரும் குறைவான விலை கொண்ட எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் என்றால் அது மேலே கூறிய டியாகோ மற்றும் டியாகோ EV தான். இந்தக் கார்கள் முன்பை விட கூடுதல் வசதிகளுடன் இப்போது அப்டேட் செய்யப்படவிருக்கிறது. இவற்றை வாங்கத் திட்டமிட்டிருந்தால் இது தான் சரியான நேரம். மேலும் புதிய கார்கள் என்பதால் அறிமுக சலுகைகளும் கொடுக்கப்படும். மேலே கூறியது போல் எலெக்ட்ரிக் காருக்கு BaaS திட்டம் அளிக்கப்பட்டால் இன்னும் சிறப்பு.


Click it and Unblock the Notifications