அடிமாட்டு விலையில் வெளியாகும் புதிய எலெக்ட்ரிக் கார்.. இந்த ப்ரீமியமான வசதிகள் எல்லாம் கூட இருக்கு!
மேம்படுத்தப்பட்ட டியாகோ EV காரை நாளை (மே 28) இந்தியாவில் வெளியிடவுள்ளது டாடா மோட்டார்ஸ். டியாகோ ஹேட்ச்பேக்கை பெட்ரோல், எலெக்ட்ரிக் மற்றும் CNG என பல்வேறு பவர்ட்ரெயின் தேர்வுகளுடன் டாடா விற்பனை செய்து வருகிறது. அனைத்தும நாளை அப்டேட் செய்யப்படவிருக்கின்றன. இதில் எலெக்ட்ரிக் காரான டியாகோ EV-யில் என்னென்ன மேம்பாடுகளை நாம் எதிர்பார்க்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
தற்போது விற்பனையில் இருக்கும் டியாகோ EV காரை விட வெளிப்புற டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை புதிய டியாகோ EV ஃபேஸ்லிப்ட் கார் கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களை டாடா வெளியிட்ட டீஸர் வீடியோக்களிலேயே நாம் பார்க்க முடிந்தது. தற்போதிருக்கும் காரில் இருந்து புதிய காரின் முகப்புப் பக்கத்தை முழுமையாகவே மாற்றியமைத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

ஸ்லீக்கான LED முகப்பு விளக்குகள், அதற்கு மேலே கண் புருவம் போல LED DRL-கள், முன்பக்கம் கருப்பு நிறமே இல்லாமல் பாடியின் நிறத்திலேயே குளோஸ்டு ஆஃப் கிரில் மற்றும் பம்பர் என புதிய காராகவே உருமாறி நிற்கிறது புதிய டியாகோ EV. பக்கவாட்டில் புதிய வடிவில் 14 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருப்பதோடு, பின்பக்கமும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை டாடா செய்திருக்கிறது.
புதிய காரின் கேபின் டூயல் டோனில் கொடுக்கப்பட்டிருக்கிறது. டேஷ்போர்டு டிசைனை முழுவதுமாக மாற்றியமைத்திருப்பதோடு, பிளாக் மற்றும் கிரே என டூயல் டோனில் டேஷ்போர்டையும் கொடுத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். டேஷ்போர்டின் மேலே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிரைவர்ஸ் டிஸ்பிளே இரண்டுமே ஃப்ளோட்டிங் வடிவில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது ஸ்டைலாகவும், கொஞ்சம் ப்ரீமியமாகவும் தான் இருக்கிறது.

புதிதாக என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்ற பட்டியலை டாடா பகிர்ந்து கொள்ளவில்லை. நாளையே அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும். எனினும், 360 டிகிரி கேமரா, ரியர் AC வென்ட்கள், டூயல் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஆறு ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் ஆகிய வசதிகள் புதிதாகக் கொடுக்கப்பட்டிருப்பதை டீஸர் வீடியோ மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிந்தது.
தற்போது இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரில் இரண்டு ஏர்பேக்குகளை மட்டுமே டாடா ஸ்டாண்டர்டாகக் கொடுத்து வருகிறது. புதிய டியாகோ EV-யில் ஆறு ஏர்பேக்குகளை அடிப்படை வேரியன்டில் இருந்தே ஸ்டாண்டர்டாக அந்நிறுவனம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் வசதியும் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
தற்போதைய மாடலில் 19.2 kWh மற்றும் 24 kWh பேட்டரி பேக் தேர்வுகள் டியாகோ EV காரில் கொடுக்கப்பட்டு வருகின்றன. சிறிய பேட்டரி பேக்குடன் 61 hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும், பெரிய பேட்டரி பேக்குடன் 75 hp பவரை வெளிப்படுத்தக்கூடிய செட்டப்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறத. இத்துடன் சிறிய பேட்டரியான 223 கிமீ வரையிலான ரேஞ்சையும், பெரிய பேட்டரியானது 293 கிமீ வரையிலான ரேஞ்சையும் கொடுக்கிறது.
மேம்படுத்தப்பட்டிருக்கும் டியாகோ EV காரில் இப்போது கொடுக்கப்படுவதை விட சற்று பெரிய பேட்டரி பேக்கை டாடா மோட்டார்ஸ் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு பன்ச் EV அப்டேட் செய்யப்பட்ட போது, முன்பு கொடுக்கப்பட்டதை விட சற்று பெரிய பேட்டரி பேக்குகளை ஃபேஸ்லிப்ட் மாடலில் டாடா கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய டியாகோ EV ஹேட்ச்பேக்கை 7.99 லட்சம் ரூபாய் முதல் 11.14 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். புதிய காரை இதனை விட சற்று கூடுதல் விலையில் அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வதோடு, புதிய காருக்கு BaaS (Battery as a Service) திட்டத்தையும் டாடா அளிக்கலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.
இதனால் விலை அதிகமானாலும் குறைவான தொடக்க விலையிலேயே, அதாவது 5 லட்சம் ரூபாயை ஒட்டிய தொடக்க விலையிலேயே இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். ஆனால் இதில் பேட்டரியின் விலை அடங்காது. அதற்கு தனியே பயன்பாட்டு அடிப்படையில் நாம் கட்டணம் செலுத்த வேண்டும். எலெக்ட்ரிக் காரின் தொடக்க விலைச் சுமையைக் குறைப்பதற்காகவே நிறுவனங்கள் BaaS திட்டத்தை வழங்கி வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது விற்பனைய செய்யப்படுவதை விட மேம்பட்ட காராகவே புதிய டியாகோ EV இருக்கும். இப்போது இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார் வாங்க விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கும் சில தேர்வுகளில் டியாகோ EV-யும் ஒன்று. எம்ஜி காமெட் மற்றும் சிட்ரன் eC3 ஆகிய கார்களுக்குப் போட்டியாக டியாகோ EV இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காமெட் EV-க்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது விலை குறைவான எலெக்ட்ரிக் காராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது டியாகோ EV.


Click it and Unblock the Notifications