மாருதியை முறியடிக்க டாடா போடும் திட்டம்.. இனி என்னலாம் நடக்கப் போகுதோ
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஒரு சப்-காம்பேக்ட் எஸ்யூவி காராக இருந்து வருகிறது டாடா நெக்ஸான். இந்தக் காரின் விற்பனையை மேலும் அதிகரிக்க புதிய வேரியன்ட் ஒன்றை விரைவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. அந்தப் புதிய வேரியன்ட் எது, அதில் என்னென்ன சிறப்பான வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும் என்னும் தகவல்கள் எல்லாம் இப்போது கசிந்திருக்கிறது. அது குறித்துப் பார்க்கலாம்.
ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் ஃபியர்லெஸ் என்ற வேரியன்ட்களாகவே நெக்ஸான் எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் புதிதாக ப்யூர்+PS (Pure+PS) என்ற வேரியன்டை நெக்ஸான் லைன்-அப்பில் டாடா அறிமுகப்படுத்த இருக்கிறதாம். எந்தெந்த வசதிகளை எல்லாம் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டு விரும்புகிறார்களோ, அந்த வசதிகளை அள்ளிப்போட்டு இந்தப் புதிய வேரியன்டை டாடா வடிவமைத்திருக்கிறதாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எல்லாம் சன்ரூஃப் வசதியை மையப்படுத்தி தங்களது கார்களை பிராண்டிங் செய்து வந்தன. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவான விலைக்கு சன்ரூஃப் வசதியை கொடுக்க முயற்சி செய்தன. தற்போது அதே போல் பனோரமிக் சன்ரூஃப் வசதியின் பின்னால் இப்போது ஓடி வருகின்றன. டாடாவின் புதிய ப்யூர்+PS வேரியன்டில் PS என்பது பனோரமிக் சன்ரூஃப் வசதியையே குறிக்கிறது.
நிறைய வாடிக்கையாளர்கள் பெரிய பனோரமிக் சன்ரூஃப் வசதி கொண்ட கார்களை விரும்பி கேட்கிறார்களாம். எனவே தான் இந்த முடிவை டாடா மோட்டார்ஸ் எடுத்திருக்கிறது. இதுவரை இந்த ப்யூர் வேரியன்டிற்கு மேலாக கிரியேட்டிவ் வேரியன்டில் இருந்தே நெக்ஸான் லைன்-அப்பில் பனோரமிக் சன்ரூஃப் வசதியை டாடா கொடுத்து வந்தது. இந்த வேரியன்டானது 11.32 லட்சம் ரூபாய் விலையைக் கொண்டிருந்தது.

அடுத்து அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ப்யூர்+PS வேரியன்டானது 10 லட்சம் ரூபாய் என்ற விலையிலேயே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மிகவும் குறைவான விலை கொண்ட காரிலேயே பனோரமிக் சன்ரூஃப் வசதியை வாடிக்கையாளர்களால் பெற முடியும். இது காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என டாடா மோட்டார்ஸ் நினைக்கிறது.
இந்த பனோரமிக் சன்ரூஃப் வசதி மட்டுமின்றி க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) வசதியையும் புதிய நெக்ஸான் ப்யூர்+PS வேரியன்டில் டாடா கொடுக்கவிருப்பது ஸ்பைஷாட் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. தற்போது இந்த க்ரூஸ் கண்ட்ரோல் வசதியும் நெக்ஸான் லைன்-அப்பில் கிரியேட்டிவ் வேரியன்டில் இருந்தே கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 4 ஸ்பீக்கர்கள், 4 இன்ச் MID ஸ்கிரீனுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், HD ரியர் வியூ கேமரா, உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் சீட், ரியர் ஏசி வென்ட்கள், ஆட்டோ முகப்பு விளக்குகள், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் ஆகிய வசதிகளையும் புதிய நெக்ஸான் வேரியன்ட் கொண்டிருக்கும்.
மெக்கானிக்கலாக டர்போ பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் இன்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளையே புதிய நெக்ஸான் வேரியன்ட் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. இந்தியாவில் மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மஹிந்திரா XUV 3XO, ஸ்கோடா கைலாக் உள்ளிட்ட சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக இந்த டாடா நெக்ஸான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன விற்பனையில் நெக்ஸான் தொடர்ந்து முன்னணியிலேயே இருந்து வருகிறது. எனினும் அந்த முன்னணியை தொடர்ந்து தக்க வைப்பதில் டாடா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வருகிறது. பெட்ரோல், டீசல், CNG மற்றும் எலெக்ட்ரிக் என அனைத்து விதமான பவர்ட்ரெயின் தேர்வுகளையும் கொண்டிருக்கும் ஒரு சில கார்களில் நெக்ஸானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications