புதுசா பெருசா வருது புத்தம் புது எலெக்ட்ரிக் கார்.. இனி மஹிந்திரா எல்லாம் அவ்ளோ தான்!
கடந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த ஹேரியர் இவி (Harrier.ev) மாடலை இந்தியாவில் வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். அதன் ட்வின்னான சஃபாரி இவி மாடலை விரைவில் டாடா மோட்டார்ஸ் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்திராவின் XEV 9S எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலுக்குப் போட்டியாக சஃபாரி இவி மாடலை டாடா உருவாக்கி வருகிறது.
இந்தியாவில் முதல் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக XEV 9S மாடலை மஹிந்திரா வெளியிட்டது. எனவே அதற்கு போட்டியாக 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவியாக சஃபாரி இவியை டாடா வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. ஹேரியர் இவியை எப்படி உருவாக்கியதோ அதே அடிப்படையில் சஃபாரி இவி மாடலையும் உருவாக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

டாடாவின் முதல் மூன்று வரிசை சீட்கள் கொண்ட எலெக்ட்ரிக் கார்:
இந்தியாவில் தற்போது அதிகளவிலான மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருவது டாடா மோட்டார்ஸ் தான். ஆனால் அனைத்துமே இரண்டு வரிசையாக ஐந்து சீட்களைக் கொண்ட கார் மாடல்களே. சஃபாரி இவி தான் டாடாவின் முதல் மூன்று வரிசை சீட்கள் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும்.
மஹிந்திரா XEV 9S மட்டுமின்றி, கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி, அடுத்து வெளியாகவிருக்கும் வின்ஃபாஸ்ட் எம்பிவி 7 உள்ளிட்ட 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி மாடல்களுக்குப் போட்டியாகவும் புதிய சஃபாரி இவி இருக்கும். தீபாவளிப் பண்டிகையையொட்டி அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டைத் திட்டமிட்டு வருகிறது டாடா. அதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் இதன் தயாரிப்பு தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஃபாரி இவி என்ன டிசைனில் இருக்கலாம் என்ற ஆர்வம் எழுவது இயல்பு தான். தற்போது விற்பனையில் இருக்கும் சஃபாரி எஸ்யூவி மாடலினை அடிப்படையாகக் கொண்ட டிசைனையே புதிய சஃபாரி இவி கொண்டிருக்கும். அதில் எலெக்ட்ரிக் காருக்கே உரிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். குறிப்பாக குளோஸ்டு ஆஃப் கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள் மற்றும் ஏரோ ஆப்டிமைஸ்டு அலாய் வீல்களை ஆகியவற்றைக் கூறலாம்.
ஹேரியர் இவியைப் போலவே, ஆட்டோ பார்க் அசிஸ்ட், 540 டிகிரி கேமரா, ஆஃப்-ரோடு அசிஸ்ட், சம்மன் மோடு, ADAS பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய மேம்பட்ட வசதிகளை புதிய சஃபாரி இவியிலும் நாம் பார்க்கலாம். காரின் உட்புறம் தற்போது சஃபாரி எஸ்யூவி மாடலில் இருப்பதைப் போலவே தான் இருக்கும் எனத் தெரிகிறது. ஹேரியர் இவியிலும் இதே நடைமுறையையே டாடா பின்பற்றியிருந்தது.
ஹேரியர் இவியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி செட்டப்பே புதிதாக உருவாக்கப்பட்ட வரும் சஃபாரி இவி மாடலிலும் இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். ஹேரியர் இவியில் 65 kWh மற்றும் 75 kWh பேட்டரி பேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 627 கிமீ வரையிலான ரேஞ்சை இந்த பேட்டரிக்கள் கொடுக்கின்றன.
சிறிய பேட்டரி கொண்ட வேரியன்ட்களில் ரியர் வீல் டிரைவ் வசதியும், பெரிய பேட்டரி கொண்ட வேரியன்ட்களில் குவாடு வீல் டிரைவ் (QWD) வசதியும் ஹேரியர் இவியில் கொடுக்கப்பட்டுள்ளது. சஃபாரி இவியிலும் இதே வசதிகள் மற்றும் அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம். இந்த பேட்டரி பேக்குகளை 100 kW வரையிலான DC ஃபாஸ்ட் சார்ஜரை கொண்டு நாம் சார்ஜ் செய்ய முடியும்.
தற்போது ஹேரியர் இவி மாடலை ரூ.21.49 லட்சம் முதல் ரூ.28.99 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். சஃபாரி இவி எஸ்யூவி மாடலை இதனை விட சற்று கூடுதலாக ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சத்திற்குள்ளான எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கொஞ்சம் கொஞ்சமாக தங்களது மொத்த லைன்-அப்பையும் எலெக்ட்ரிக்காக மாற்றிவிட்டது டாடா மோட்டார்ஸ். தற்போது இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில முன்னணிலும் இருக்கிறது அந்நிறுவனம். புதிய சஃபாரி இவி டாடாவின் எலெக்ட்ரிக் மகுடத்தில் மற்றொரு கல்லாக வந்தமரவிருக்கிறது.


Click it and Unblock the Notifications








