ஈரான் போரால் இந்தியாவின் டாடா நிறுவனத்திற்கு அடிச்ச 'லக்'... பண மழை கொட்ட போகுது...
இந்திய சந்தையில் தற்போது ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்கள் (Flex Fuel Vehicles) மெல்ல மெல்ல பிரபலமடைந்து வருகின்றன. வாடிக்கையாளர்கள் மத்தியில் 'டிமாண்ட்' உருவாகி வருவதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதில், இந்தியாவை சேர்ந்த முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமும் ஒன்றாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனத்தை, நடப்பு 2026ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்திலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சைலேஷ் சந்திரா (Shailesh Chandra) கூறுகையில், ''நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ எங்களது முதல் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனம் தயாராகி விடும். இந்த கால கட்டத்தில் குறைந்தபட்சம் எங்களிடம் ஒரு ஃப்ளக்ஸ் ப்யூயல் வாகனமாவது இருக்கும்'' என்றார்.
அத்துடன் இந்திய சந்தைக்கு தங்களது ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்களை கொண்டு வர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப ரீதியில் தயாராகி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஈடி ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ வாகன திருவிழாவில் ஏராளமான வாகனங்களை காட்சிக்கு வைத்திருந்தது.

இதில், இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் டாடா பன்ச் (Tata Punch) காரின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனும் ஒன்றாகும். எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனைதான் இந்திய சந்தையில் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா பன்ச் கார் தற்போதைய நிலையில் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இது இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக உள்ளது. எனவே அதன் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனும் வந்தால், டாடா பன்ச் காரின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டாடா பன்ச் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் காரில், 1.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இது 85 சதவீதம் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவில் எத்தனால் (Ethanol) கலக்கப்பட்ட எரிபொருளிலும் இயங்க கூடிய திறன் வாய்ந்தது. இந்தியாவில் பெட்ரோல் உடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை படிப்படியாக அதிகரிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
விவசாய பொருட்களில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. எனவே எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் இந்திய விவசாயிகளுக்கு நன்மையை ஏற்படுத்த முடியும். அத்துடன் கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதியை குறைத்து, இந்தியாவின் அந்திய செலாவணியையும் (Forex) சேமிக்க முடியும். எனவேதான் எத்தனாலை எரிபொருளின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
முன்னதாக ஈரான் (Iran) மீது அமெரிக்கா (US) மற்றும் இஸ்ரேல் (Israel) ஆகிய நாடுகள் போர் தொடுத்த காரணத்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியுள்ளது (Petrol, Diesel Price Hike). எனவே மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்குவது குறித்த விசாரணைகள் அதிகரித்துள்ளன.
அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. எனவே வரும் மாதங்களில் இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதை எட்ட வேண்டும் என்றால், ஃப்ளக்ஸ் ஃப்யூயல் போன்ற பலதரப்பட்ட வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வது மிகவும் அவசியம் ஆகும்.


Click it and Unblock the Notifications