பெரிய பேட்டரியுடன் அப்டேட் செய்யப்பட்ட டாடா எலெக்ட்ரிக் கார்
இந்தியாவில் தனிநபர் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, வணிகப் பயன்பாட்டிற்கான கார்களையும் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. அதில் ஒன்று 'எக்ஸ்பிரஸ்-T' எலெக்ட்ரிக் கார் (Xpres-T EV). இது வேறெதுவும் இல்லை, டிகோர் EV-யின் வணிகப் பயன்பாட்டு வடிவம் தான். தற்போது இந்த எக்ஸ்பிரஸ்-T எலெக்ட்ரிக் காரை பல்வேறு மேம்பட்ட அம்சங்களுடன் அப்டேட் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
தனிநபர் பயன்பாட்டு கார் போல, வணிகப் பயன்பாட்டுக் கார்களை, அதாவது டாக்ஸி போல பயன்படுத்துவதற்கான கார்களை டிசைன், வசதிகள் என்ற வகைகளில் நிறுவனங்கள் அப்டட் செய்வதில்லை. மாறாக, பிராக்டிகலாக பயனாளர்கள் லாபம் ஈட்டக்கூடிய வகையிலான அப்டேட்களை மட்டுமே செய்கின்றன. அவையே வணிகப் பயன்பாட்டு கார்களுக்கான தேவையும் கூட.

2021ம் ஆண்டிலிருந்தே இந்த எக்ஸ்பிரஸ்-T எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். இதுவரை இந்தக் காரில் 24 kWh பேட்டரி பேக் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 32 kWh என்ற பெரிய பேட்டரி பேக் கொண்ட புதிய வெர்ஷனையும் இனி சேர்த்து விற்பனை செய்யவிருக்கிறது டாடா மோட்டார்ஸ். வாடிக்கையாளர்கள் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
24 kWh பேட்டரி பேக்கானது 277 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையே கொண்டிருந்தது. புதிய 32 kWh பேட்டரி பேக்கானது 391 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது. இதன் மூலம் 300 கிமீ வரையிலான உண்மையான ரேஞ்சை வாடிக்கையாளர்கள் பெற முடியும். சிறிய பேட்டரி பேக்கின் உண்மையான ரேஞ்சு 200 கிமீ தான்.

அதேபோல், இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ்-T காரில் 72V 3-பேஸ் AC இன்டக்ஷன் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த எலெக்ட்ரிக் மோட்டாரானது 41 hp பவர் மற்றும் 105 Nm டார்க்கை மட்டுமே உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருந்தது. இந்நிலையில் புதிய வெர்ஷனில் சற்று மேம்பட்ட PMS எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொடுத்துள்ளது டாடா.
இந்தப் புதிய எலெக்ட்ரிக் மோட்டார், 64 hp பவர் மற்றும் 114 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. டாக்ஸி பயன்பாட்டு கார் என்பதால் அதிகபட்ச வேகம் முந்தைய மாடலைப் போலவே மணிக்கு 80 கிமீ ஆகவே தொடர்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
மேலும், எக்ஸ்பிரஸ்-T EV-யின் புதிய வெர்ஷனில் CCS2 சார்ஜிங் போர்ட்டைக் கொடுத்து மேம்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். இதனால் சார்ஜிங் வேகமும் அதிகரித்திருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரை 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 10-70 சதவீதம் வரை வெறும் 30 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்த வணிகப் பயன்பாட்டு காருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வரவேற்கத்தக்க மேம்பாடாகும்.
பெரிய பேட்டரி பேக்கினால் கிரௌண்டு கிளியரன்ஸ் 176 மிமீ-ல் இருந்து 170 மிமீ ஆகக் குறைந்திருக்கிறது. பூட் ஸ்பேஸ் 255 லிட்டர்களில் இருந்து 293 லிட்டர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பிராக்டிகலாக வரவேற்கத்தக்க ஒன்று. முக்கியமாக வாரண்டி காலத்தை 3 ஆண்டுகள் அல்லது 1.25 லட்சம் கிலோமீட்டர்களில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது 6 லட்சம் கிலோமீட்டர்கள் வரையிலாக உயர்த்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ்.
தற்போது இந்த வணிகப் பயன்பாட்டு டிகோர் EV, அதாவது எக்ஸ்பிரஸ்-T எலெக்ட்ரிக் கார் மட்டுமே அப்டேட் செய்யப்பட்டுள்ளது. எனினும் விரைவிலேயே டிகோர் EV-யையும் டாடா மோட்டார்ஸ் அப்டேட் செய்யவுள்ளது. புதிய டிசைன் மற்றும் மேம்பட்ட வசதிகளுடன், டியாகோ EV-யைப் போலவே டிகோர் EV-யின் விலையையும் டாடா மோட்டார்ஸ் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட பெரிய பேட்டரி பேக் கொண்ட புதிய எக்ஸ்பிரஸ்-T வெர்ஷனை 13.04 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது டாடா மோட்டார். டாடாவின் மற்ற சில எலெக்ட்ரிக் கார்களைப் போல இந்த வணிகப் பயன்பாட்டு வெர்ஷனுக்கு BaaS திட்டம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறியது போல ஏஸ்தெடிக்காக இல்லாமல், பயன்பாட்டிற்கு ஏதுவாக இருக்கும் வகையில், பிராக்டிகலான மற்றும் லாபம் ஈட்டக்கூடிய வகையிலான மேம்பாடுகளை புதிய எக்ஸ்பிரஸ்-T வெர்ஷனுக்கு டாடா அளித்துள்ளது. குறிப்பாக பெரிய பேட்டரி பேக் கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் நல்ல விஷயமாகும். எனினும் விலை சற்று அதிகம் தான். ஆனால் அதற்கேற்ற வகையில் வாரண்டி காலமும் உயர்த்தப்பட்டிருப்பது சிறப்பான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications