எர்டிகா, இன்னோவா நெருக்கடியா இருக்கா? பெரிய குடும்பத்துக்கு டெம்போ டிராவலர் Own Board வாங்கலாமா?
எர்டிகா, இன்னோவா போன்ற கார்களில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகப் பயணம் செய்யும்போது இடநெருக்கடி பலருக்கு பிரச்னையாக இருக்கிறது. குறிப்பாக, பெரிய கூட்டுக் குடும்பமாக இருப்பவர்கள் சுற்றுலா செல்லும்போதும், சொந்த ஊருக்குச் செல்லும்போதும் இருக்கைகள் மற்றும் லக்கேஜுகளை எடுத்துச் செல்வது சவாலாக இருக்கும். அதுபோன்று இருப்பவர்களுக்கு டெம்போ டிராவலர் மாற்றுத் தேர்வாக யூட்யூப் சேனல்களில் வீடியோக்கள் வருகிறது. ஆனால், உண்மையில் ஒரு சாதாரண கார் வாங்குவது போன்று டெம்போ டிராவலர் வாங்க முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.
குடும்பச் சுற்றுலா, சொந்த ஊருக்குச் செல்லுதல், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களுக்கு அதிக இருக்கைகள் கொண்ட வேன் உதவியாக இருக்கும். ஆனால், வாங்குவதற்கு முன்பு வாகனத்தின் விலை, பதிவு நடைமுறை மற்றும் அன்றாடப் பயன்பாட்டுக்கான வசதிகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.

Own Board பதிவு சாத்தியமா?
எம்பிவி கார்களைவிட டெம்போ டிராவலர் சிறந்த இடவசதியையும், பொருட்களை எடுத்துச் செல்வதற்கான போதுமான பூட்ரூம் வசதியையும் அளிக்கிறது. மேலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், யூட்யூப் வீடியோக்களில் காண்பிப்பது போன்று டெம்போ டிராவலரை வாங்குவதில் சில நடைமுறை விஷயங்கள் எளிதாக இல்லை என்பதே கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
டெம்போ டிராவலரை தனிநபர் பயன்பாட்டுக்காக Own Board பதிவு செய்வதற்கு அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களிலும் செய்ய முடியாத நிலை உள்ளது. அதாவது, உரிய காரணங்களை முன்வைத்தால் மட்டுமே சில வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் பதிவு செய்ய முடியும். அப்படியே நீங்கள் வாங்க நினைத்தாலும், அந்த குறிப்பிட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட பகுதிகளில் உங்கள் வீட்டு முகவரி இருப்பதும் அவசியமாக இருக்கிறது.
உரிய காரணம்
மேலும், எந்த காரணத்திற்காக டெம்போ டிராவலரை வாங்குகிறீர்கள் என்பதற்கும் சரியான காரணத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் தெரிவிப்பதும் அவசியமாக கூறப்படுகிறது. அவ்வாறு நீங்கள் சிறப்பு அனுமதி பெற்ற பிறகே இந்த டெம்போ டிராவலர் வாகனத்தை வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
டெம்போ டிராவலர் வேனில் 9+1 இருக்கை அமைப்புடைய 3050 என்ற ஏசி வசதி கொண்ட மாடல் யூடியூபர்களால் பரிந்துரை செய்யப்படுவதை பார்த்து இருப்பீர்கள். ஆனால், இந்த மாடலை வாங்குவதற்கு விசாரணை செய்தால், டீலரில் உள்ள விற்பனை பணியாளர்கள் இதற்கு பதிலாக வேறு 12 சீட்டர், 13 சீட்டர், 17 சீட்டர் மற்றும் 22 சீட்டர் உள்ளிட்ட வாகனங்களை பரிந்துரைக்கின்றனர்.
இந்த வாகனங்களையும் நீங்கள் சொந்த பயன்பாட்டுக்கு வாங்க முடியும் என்று டீலர் பணியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் குறிப்பிட்ட ஆர்டிஓக்களில் மட்டுமே சென்னை உள்ளிட்ட நகரங்களில் இதுபோன்று தனிநபர் பயன்பாட்டுக்கான டெம்போ டிராவலர் பதிவு செய்து தரப்படுவதுடன் உரிய காரணங்களையும் கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால், நீங்கள் எர்டிகா, இன்னோவா போன்ற எம்பிவி கார்கள் வேண்டாம், வசதியாக செல்வதற்கு இந்த டிடி வேன் வேண்டும் என்றால் நிச்சயமாக வாங்க முடியும்.

நடைமுறை பயன்பாடு
அதேநேரத்தில், இந்த டிடி வேன் நடைமுறை பயன்பாட்டில் பார்க்கிங் செய்வது, போக்குவரத்து நெரிசலான இடங்களில் ஓட்டுவதற்கான விஷயங்கள், எவ்வளவு தூரம் அதனை பயன்படுத்துகிறீர்கள், பராமரிப்பு செலவு உள்ளிட்ட அனைத்தையும் கவனிக்க வேண்டியதும் அவசியமாகிறது. குடும்பத்தினர் மட்டுமே பயணம் செய்வார்கள், பெரிய குடும்பம் என்பதால் அதிக இருக்கைகள் தேவைப்படுகின்றன, வயதான பெற்றோருடன் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியுள்ளது போன்ற உண்மையான காரணங்களை வாகனத்தின் பயன்பாட்டை விளக்கி அனுமதி பெற முடியும். இருந்தாலும் நடைமுறை பயன்பாட்டை மனதில் வைத்து முடிவு செய்வது அவசியமாகிறது.
சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் டீலர்கள் மூலமாக குறிப்பிட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் மட்டும் உரிய காரணங்களுடன் தனிநபர் பதிவு பெற்று டெம்போ டிராவலரை வாங்க முடியும். ஆனால், நடைமுறை பயன்பாட்டு விஷயங்களை கருத்தில்கொண்டு முடிவு எடுப்பது அவசியம். மேலும், டீலரில் வாகனத்தின் இருப்பு, ரீசேல் விஷயங்களையும் மனதில் வைத்து முடிவு செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications


