சென்னையில் தடம்பதிக்கும் டெஸ்லா: தென்னிந்தியாவில் 3வது எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் விரைவில் திறப்பு!
அமெரிக்காவின் பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்திய சந்தையில் எதிர்பார்த்த அளவு விற்பனையை பெறவில்லை. தற்போது விற்பனையை அதிகரிப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவையை வழங்கும் வகையில், தனது நேரடி விற்பனை மையமான (Tesla Experience Center) எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தனது எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை அமைத்து வருகிறது. அந்த வகையில், சென்னையிலும் விரைவில் தனது எக்ஸ்பிரீயன்ஸ் சென்டரை டெஸ்லா நிறுவனம் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஹைதராபாத், பெங்களூரை தொடர்ந்து தென் இந்தியாவில் மூன்றாவது ஷோரூமாக இது அமையும்.

இதன்மூலமாக, இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் ஆறாவது ஷோரூமாக சென்னையில் அமைக்கப்பட உள்ள எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் அமைய உள்ளது. தற்போது ஷோரூம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதையடுத்து, விற்பனையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, நடப்பு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்ட கார்களை டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் டெலிவிரி கொடுத்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 600க்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ள டெஸ்லா, தமிழகத்தில் மட்டும் 38 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் திறக்கப்படுவதன் மூலம் தமிழகத்தை சேர்ந்த வாடிக்கையாளர்கள் எளிதாக டெஸ்லா கார்களை வாங்குவதற்கும், அதற்கான விற்பனைக்கு பிந்தைய சேவையை பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். டெஸ்லா கார்களை ஆன்லைன் தளத்தின் வாயிலாக முன்பதிவு செய்ய முடியும் என்பதோடு, வீடுகளிலேயே சார்ஜ் செய்வதற்கான ஹோம் சார்ஜிங் அமைப்புகளையும் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அமைத்துத் தருகிறது.
இந்திய சந்தையில் தற்போது டெஸ்லா மாடல் ஒய் என்ற கார் மாடல் இரண்டு வெர்ஷன்களில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்கிறது. இதில் 5 சீட்டர் அமைப்பைக் கொண்ட பிரீமியம் ரியர்வீல் டிரைவ் மாடல் ரூ.50.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இது 500 கிமீ ரேஞ்ச் மற்றும் சிறப்பான பூட் ஸ்பேஸ் வசதியுடன் வருகிறது.
கூடுதல் பயணிகளுக்கான இடவசதியை எதிர்பார்க்கும் குடும்ப வாடிக்கையாளர்களுக்கு 6 சீட்டர் அமைப்பைக் கொண்ட மாடல் ஒய் எல் ஆல் வீல் டிரைவ் வேரியண்ட் விற்பனையில் உள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.61.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒரே சார்ஜில் அதிகபட்சமாக 681 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.
டெஸ்லா மாடல் ஒய் மாடல் குடும்ப பயன்பாட்டை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று வரிசை இருக்கைகள் இருப்பதால் அதிகமான பயணிகள் செல்லும் வசதி கிடைக்கிறது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டும் திறனும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பிரீமியம் விலையில் கிடைக்கும் நீண்ட தூர மின்சார எஸ்யூவி பிரிவில் இது போட்டியிடுகிறது.
இந்தியாவில் ஷோரூம்களுடன் விரிவாக்கம் செய்வது மட்டுமின்றி, சார்ஜிங் மற்றும் சர்வீஸ் கட்டமைப்பையும் நிறுவனம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் சர்வீஸ் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சூப்பர்சார்ஜர் கட்டமைப்பை விரிவுபடுத்தும் திட்டத்தையும் அந்நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
டெஸ்லா இந்தியாவில் வழக்கமான டீலர் மாடலை பின்பற்றாமல் நேரடி விற்பனை முறையில் செயல்படுகிறது. வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக காரை ஆர்டர் செய்ய முடியும். பின்னர் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே வாகனங்களை டெலிவரி செய்யும் முறையை நிறுவனம் பயன்படுத்துகிறது.
தமிழகத்தின் மின்சார வாகன சந்தையும் வேகமாக வளர்ந்து வருகிறது. நடப்பு ஆண்டில் இதுவரை தமிழகத்தில் 19,700க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் BMW, Mercedes-Benz, Porsche, Volvo மற்றும் BYD போன்ற பிரீமியம் நிறுவனங்களின் மின்சார கார்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொடுத்து வருகின்றன. தமிழகத்தில் வளர்ந்து வரும் சந்தையில் டெஸ்லாவும் தனது இடத்தை உருவாக்க முயற்சிக்கிறது.
Source: Timesofindia


Click it and Unblock the Notifications


