போனியாகலை... டெஸ்லா வரலாற்றில் முதல் ஃபெயிலியர் மாடலான சைபர்டிரக்... முழுக்கு போடும் எலான் மஸ்க்!
உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் துறையின் கவனத்தை ஈர்த்த டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck) மின்சார பிக்கப் டிரக்கின் உற்பத்தியை நிறுத்த எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். வித்தியாசமான வடிவமைப்பு, அதிநவீன தொழில்நுட்பம் என பல எதிர்பார்ப்புகளை உருவாக்கிய இந்த வாகனத்தின் பயணம், அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வரவுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் வெளியிட்டுள்ள தகவலில், வரும் 2027-ம் ஆண்டு மத்தியில் டெக்சாஸ் ஆலையில் சைபர்டிரக் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்பட்டு முற்றிலுமாக நிறுத்தப்படும். இந்த முடிவுக்கு பின்னால் விற்பனை எதிர்பார்த்த அளவை எட்டாதது மட்டுமின்றி, நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்களும் முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

ஏமாற்றம் கொடுத்த சைபர்டிரக்
2019-ம் ஆண்டிலேயே சைபர்டிரக் கான்செப்ட் மாடலை டெஸ்லா வெளியிட்டது. ஆரம்பத்தில் 2021-ல் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தாலும், பல்வேறு உற்பத்தி சவால்களால் தாமதமானது. இறுதியாக 2023-ம் ஆண்டு வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி தொடங்கப்பட்டது. இதன் தோற்றம் வழக்கமான பிக்கப் டிரக்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது.
சைபர்டிரக் அறிமுகத்திற்கு முன்பே ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய முடியும் என்று எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அந்த இலக்கை எட்டுவது டெஸ்லாவுக்கு மிகவும் கடினமானதாக மாறியது. இதுவரை உலகளவில் சுமார் 63,000 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்க சந்தையில் இதன் விற்பனை தொடர்ந்து சரிவைச் சந்தித்தது. 2024-ம் ஆண்டு 38,965 வாகனங்கள் விற்பனையான நிலையில், 2025-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 20,237 ஆகக் குறைந்தது. அதாவது ஓராண்டில் சுமார் 48 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது. இது நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.
காரணம் என்ன?
சைபர்டிரக்கின் வெளிப்புறத் தோற்றம் பலரைக் கவர்ந்தாலும், அனைவருக்கும் பிடித்தமானதாக அமையவில்லை. கூர்மையான முனைகள், துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி போன்ற அம்சங்கள் இதனை மற்ற பிக்கப் வாகனங்களிலிருந்து வேறுபடுத்தின. இருப்பினும், இதன் தோற்றம் பல்வேறு நாடுகளில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.
மேலும், 2019-ல் முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோது தெரிவிக்கப்பட்ட விலையைவிட, விற்பனைக்கு வந்தபோது விலை கணிசமாக உயர்ந்தது. இதனால் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய வாடிக்கையாளர்களில் பலர் பின்வாங்கினர். ஐரோப்பிய சந்தையில் பாதசாரிகள் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளையும் இதன் வடிவமைப்பு பூர்த்தி செய்யவில்லை.
சைபர்கேப்-க்கு முக்கியத்துவம்
சைபர்டிரக் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் தொழிற்சாலையில் உற்த்திப் பிரிவில் கிடைக்கும் திறனை வைத்து புதிய சைபர்கேப் (Cybercab) காருக்கு தயாரிப்புக்குப் பயன்படுத்த டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முழுமையான தானியங்கி முறையில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இரண்டு இருக்கைகள் கொண்ட ரோபோ டாக்ஸி, நிறுவனத்தின் எதிர்கால வர்த்தகத் திட்டத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
சைபர்கேப் வாகனத்தில் வழக்கமான ஸ்டீயரிங் வீல், ஆக்சிலரேட்டர், பிரேக் பெடல்கள் போன்றவை கிடையாது. முழுமையான தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக டெக்சாஸ் ஆலையின் உற்பத்தித் திறனை மாற்றியமைக்க டெஸ்லா முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே சைபர்டிரக் முற்றிலுமாக நிரந்தரமாக நிறுத்தப்படுமா அல்லது வேறு தொழிற்சாலைக்கு உற்பத்தி மாற்றப்படுமா என்பது குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது இந்த வாகனத்திற்கான பிரத்யேக உதிரிபாகங்களைத் தயாரிக்கும் வசதி டெக்சாஸ் ஆலையில்தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அடுத்தகட்ட முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
டெஸ்லாவின் எதிர்காலத் திட்டம்
டெஸ்லா நிறுவனம் தற்போது பாரம்பரிய கார் தயாரிப்பைத் தாண்டி செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் தானியங்கி போக்குவரத்து சேவைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆப்டிமஸ் மனித உருவ ரோபோ, சைபர்கேப் ரோபோ டாக்ஸி உள்ளிட்ட திட்டங்கள் இதற்கு உதாரணங்களாக உள்ளன. இதனால் நிறுவனத்தின் உற்பத்தி முன்னுரிமைகளும் மாறிவருகின்றன.


Click it and Unblock the Notifications


