மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஒன்றை வெளியிடும் டெஸ்லா.. விலை என்னன்னு தெரியுமா?
சர்வதேச அளவில் முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமாக இருந்து வரும் டெஸ்லா, விலை குறைவான புதிய தொடக்க நிலை எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் ஒன்றை உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டிற்கு முன்னர் என்றால் இது இந்தியாவிற்கு தேவையில்லாத செய்தியாகியிருக்கும். ஆனால் இப்போது அப்படிக் கூற முடியாது. கடந்த ஆண்டு தான் இந்தியாவில் தங்களது 'மாடல் Y' (Model Y) எலெக்ட்ரிக் காரை வெளியிட்டது அந்நிறுவனம்.
தற்போது டெஸ்லாவின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்றால் அது மாடல் 3 மற்றும் மாடல் Y கார்கள் தான். இந்தக் கார்களை 35,000 முதல் 40,000 டாலர்களுக்குள்ளான தொடக்க விலையில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். பல ஆண்டுகளாகவே குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என அந்நிறுவனம் முயன்று தான் வருகிறது.

டெஸ்லா முதன் முதலில் ஆட்டோமொபைல் துறையில் கால் பதித்த போது, அதிகளவிலான வாடிக்கையாளர்களை சென்றடையும் மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதே தங்கள் நோக்கம் என அந்நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். 2020ம் ஆண்டில் இருந்து 25,000 டாலர்கள் விலையில் மாடல் 2 என்ற எலெக்ட்ரிக் காரையும் உருவாக்கி வந்தது டெஸ்லா. ஆனால் அதன் உருவாக்கம் 2024ல் நிறுத்தப்பட்டது.
மனிதர்களே இயக்கும் வகையிலான எலெக்ட்ரிக் கார்களை 25,000 டாலர்களுக்கு ஏன் உற்பத்தி செய்ய வேண்டும் என எலான் மஸ்க் அதுகுறித்துத் தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் அந்நிறுவனம் விலை குறைவான எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரானது தற்போது விற்பனையில் இருக்கும் மாடல் Y எலெக்ட்ரிக் காரை விட குறைவான வசதிகளுடன் அளவில் சிறியதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மாடல் Y எலெக்ட்ரிக் காரானது 4.7 மீட்டர்கள் முதல் 4.9 மீட்டர்கள் வரையிலான அளவைக் கொண்டுள்ளது. இந்தக் காரின் லாங் ரேஞ்சு வேரியன்டில் 661 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொடுக்கக்கூடிய 75 kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இந்த காரில் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய எலெக்ட்ரிக் காரானது 4.3 மீட்டர் அளவில் இருக்கும் எனத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் மாடல் Y-யில் பயன்படுத்தப்பட்டிருப்பதை விட சிறிய பேட்டரி பேக் மற்றும் ஒரேயொரு எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட பவர்ட்ரெயின் செட்டப் ஆகிய அம்சங்களையும் புதிய விலை குறைவான எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலில் டெஸ்லா கொடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் காரை என்ன விலையில் அந்நிறுவனம் வெளியிடலாம் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றே தெரிகிறது. 20,000 டாலர்கள் முதல் 25,000 டாலர்களுக்குள்ளாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாடல் Y எலெக்ட்ரிக் காரானது 36,000 டாலர்கள் விலையில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது. நேரடியாக டாலரில் இருந்து ரூபாய்க்கு மாற்றும் போது சுமார் ரூ.34 லட்சத்தை ஒட்டிய விலையைக் கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இறக்குமதி வரிகள் எல்லாம் சேர்த்து ரூ.67.89 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புதிய மாடல் விலை குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவிலும் அதனை டெஸ்லா வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், சர்வதேச அளவில் வெளியிடப்படும் அதே குறைவான விலையில் இந்தியாவில் எதிர்பார்க்க முடியாது. அதிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மடங்கு விலையிலேயே இந்தியாவில் அந்தப் புதிய கார் வெளியாகும். இந்தியாவில் ரூ.40 லட்சத்தை ஒட்டிய விலையில் புதிய காரின் வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் சற்று கூடுதல் விலை என்றாலும் மேம்பட்ட வசதிகளை டெஸ்லாவின் எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கும். சர்வதேச அளவில் குறைவான விலை என்றாலும், ஆட்டோ பைலட் வசதிகளை இந்தக் காரிலும் டெஸ்லா கொடுக்க ஆர்வமாக இருப்பதாகவே தெரிகிறது. இந்தியாவில் வேறெந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமும் ஆட்டோ பைலட் வசதியைக் கொடுக்கவில்லை. நாம் பார்க்கும் வரையிலான எதிர்காலத்தில் கொடுக்கவும் வாய்ப்புகள் குறைவு தான்.
இந்தியாவில் தற்போது தான் தங்களது சூப்பர்சார்ஜிங் கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது டெஸ்லா. 250 kW வரையிலான ஆற்றலுடன் டெஸ்லா கார்களை சார்ஜ் செய்யும் சூப்பர் சார்ஜர்களை இந்தியாவில் டெஸ்லா கார் பயன்பாடு அதிகம் உள்ள முக்கிய நகரங்களி அமைத்து வருகிறது அந்நிறுவனம். சமீபத்தில் தான் நவி மும்பையில் தங்களது ஐந்தாவது சூப்பர்சார்ஜிங் நிலையத்தை டெஸ்லா அமைத்தது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறியது போல டெஸ்லா தற்போது இருப்பதை விட குறைவான விலையில் எலெக்ட்ரிக் காரை வெளியிட்டாலும், அது ப்ரீமியம் அல்லது சொகுசு பிரிவிலேயே இருக்கும். இந்தியாவில் ரூ.25 லட்சத்திற்குள்ளான மாஸ் மார்க்கெட் பிரிவில் எலெக்ட்ரிக் கார் ஒன்றை டெஸ்லா விற்பனைக்குக் கொண்டு வருவது சாத்தியம் இல்லாதது.
இந்தியாவிலேயே டெஸ்லா கார்கள் தயாரிக்கப்படும் பட்சத்தில் மாஸ் மார்க்கெட் பிரிவில் டெஸ்லா கார்களை நாம் எதிர்பார்க்க முடியும். ஆனால் அது வரை பயணிகள் வாகனப் பிரிவில் டெஸ்லா தொடர்ந்து பயணம் செய்யும் என்பதே சந்தேகம் தான். நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வரும் மாடல் S மற்றும் மாடல் X கார்களின் விற்பனையை நிறுத்திவிட்டு ஹியூமனாய்டு ரோபோட்களின் தயாரிப்பில் கவனம் செலுத்த டெஸ்லா சமீபத்தில் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








