சென்னையில் காலடி பதித்தது டெஸ்லா கார் நிறுவனம்... எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ஷோரூம் திறப்பு
அமெரிக்காவின் பிரபல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தமிழகத்தில் தனது முதல் அதிகாரப்பூர்வ எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அமைத்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள கார் பிரியர்கள் இனி நேரடியாகவே டெஸ்லா கார்களைப் பார்வையிட்டு, டெஸ்ட் டிரைவ் செய்து, புக்கிங் மற்றும் டெலிவரி சேவைகளை பெற முடியும்.
வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிந்தைய சேவைகளை மிகச் சிறப்பாக வழங்கும் நோக்கில், பூந்தமல்லி பகுதியில் பிரத்யேகமான விபத்து பழுதுபார்ப்பு மையத்தையும் (Collision Center) டெஸ்லா அமைத்துள்ளது. இங்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அசல் பாகங்கள் கொண்டு கார்கள் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால், பராமரிப்பு குறித்து உரிமையாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

சென்னையில் திறக்கப்பட்டுள்ள டெஸ்லா எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் 2026ம் ஆண்டு டெஸ்லா மாடல் ஒய் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மின்சார கார் மாடல் ஒய் பிரிமீயம் மற்றும் மாடல் ஒய் எல் ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கும்.
இதில் பிரிமீயம் வேரியண்ட் மாடலானது ரியர்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதுடன், 2,138 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டதாக வந்துள்ளது. இந்த 5 சீட்டர் எலெக்ட்ரிக் கார், 0-100 கிமீ வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டிவிடும். ஒரு முறை முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்தால் WLTP சான்றுபடி 500 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த காரின் எக்ஸ்ஷோரூம் விலையாக ரூ.50.89 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரிய குடும்பங்களுக்கான சொகுசு காராக மாடல் ஒய் எல் மாடலும் சந்தைக்கு வந்துள்ளது. மூன்று வரிசைகள் மற்றும் 6 இருக்கைகள் கொண்ட இந்த ஆல்-வீல் டிரைவ் எஸ்யூவியின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் WLTP சான்றுபடி 681 கிமீ ரேஞ்ச் வரை வழங்கும். வெறும் 5 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை அடையும் இந்த காரின் ஆரம்ப விலை ரூ.61.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப எளிய கடன் வசதிகளையும் டெஸ்லா அறிவித்துள்ளது. மாடல் ஒய் பிரீமியம் மாடலுக்கு ரூ.6 லட்சம் முன்பணமும், மாதம் ரூ.39,990 மாதத் தவணை வசதியும் வழங்கப்படுகிறது. அதுபோல, மாடல் ஒய் எல் மாடலுக்கு ரூ.6.50 லட்சம் முன்பணமும், மாதம் ரூ.49,990 மாதத்தவணை திட்டமும் வழங்கப்படுகின்றன.

டெஸ்லா கார்களின் சிறப்பம்சமே அதன் இணையவழி மென்பொருள் புதுப்பிப்புகள் (OTA) தான். இதில் க்ரோக் (Grok) AI அசிஸ்டெண்ட் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் இயங்கும் திறன் கொண்டதால், உள்ளூர் வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த மொழியிலேயே காரின் கட்டுப்பாடுகளை எளிதாக இயக்க முடியும்.
சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய முக்கிய நகரங்களில் டெஸ்லா தனது மையங்களை அமைத்து இந்திய சந்தையில் தனது சேவையையும், வர்த்தகத்தையும் வலுப்படுத்தி வருகிறது. சென்னை பட்டுல்லாஸ் சாலையில் அமைந்துள்ள ஷோரூமில் டெஸ்ட் டிரைவ் செய்ய விரும்புபவர்கள் டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது இலவச தொலைபேசி எண் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் ஏற்கனவே பல வாடிக்கையாளர்கள் டெஸ்லா கார்களை அண்டை மாநிலங்களில் உள்ள ஷோரூமுக்கு சென்று வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று, புதிதாக டெஸ்லா கார் வாங்க விரும்புவோருக்கும் இந்த புதிய ஷோரூம் மிக நெருக்கமான சேவையை வழங்கும் என்பதால் டெஸ்லா பிரியர்களுக்கு இந்த ஷோரூம் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. டெஸ்லாவின் வர்த்தகத்திலும் இந்த புதிய ஷோரூம் மிக முக்கியமானதாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications



