ஓவர்-நைட்டில் காரின் விலையை ரூ.9 லட்சம் குறைத்த டெஸ்லா! ஷோரூம்களுக்கு வந்த அதிரடி உத்தரவு!
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அதன் எலெக்ட்ரிக் காரின் விலையை அதிரடியாக சுமார் ரூ.9 இலட்சம் அளவிற்கு குறைத்துள்ளது. கடந்த 2025 ஜூலை மாதத்தில் ரூ.50.89 லட்சத்தில் டெல்ஸா மாடல் ஒய் அறிமுகம் செய்யப்பட்டது. அது தற்போது ரூ.9 லட்சம் குறைக்கப்பட்டு ரூ.50.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாடல் ஒய் காரில் இன்னொரு முக்கியமான மாற்றத்தையும் டெஸ்லா செய்துள்ளது. அது என்ன என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் டெஸ்லா கால்பதித்தது. சீனாவில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மாடல் ஒய் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் முதல் டெஸ்லா காராக அறிமுகம் செய்யப்பட்டது. வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா கொண்டுவந்து விற்பனை செய்யப்படுவதால் சற்று அதிகமாக ரூ.58.89 லட்சத்தில் மாடல் ஒய் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டது.

இதன் காரணமாகவே, டெஸ்லாவின் வருகை பெரிய அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. டெஸ்லா கார்களின் விற்பனையும் பெரிய அளவிற்கு இல்லை. இந்த நிலையில், இந்தியாவில் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் சலுகை கிடைத்தது போன்று டெஸ்லா நிறுவனம் அதன் மாடல் ஒய் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை சுமார் ரூ.9 லட்சம் குறைத்துள்ளது.
2025 ஜூலையில் மாடல் ஒய் காரின் அறிமுகத்தை தொடர்ந்து, ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடல் ஒய் காரின் புதிய லாங்-வீல்பேஸ் வெர்சனாக மாடல் ஒய் எல் என்கிற எலெக்ட்ரிக் காரை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் டெஸ்லா அறிமுகம் செய்தது. ஆல்-வீல்-டிரைவ் காராக அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாடல் ஒய் எல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.61.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், மாடல் ஒய் எல் காரை காட்டிலும் அளவில் சிறியதான மாடல் ஒய் காரின் லாங் ரேஞ்ச் வேரியண்ட் சுமார் ரூ.67.89 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்த லாங் ரேஞ்ச் வேரியண்ட் ஆனது ரியர்-வீல்-டிரைவ் கார் மட்டுமே ஆகும். 'லாங் ரேஞ்ச்' வேரியண்ட் என அழைக்கப்பட்டாலும், புதிய மாடல் ஒய் எல் காரின் ரேஞ்சை விட ஏறக்குறைய 20கிமீ அளவிற்கு குறைவான ரேஞ்சை வழங்கக் கூடியதாக இருந்தது.
இதனால், மாடல் ஒய் காரின் லாங் ரேஞ்ச் வேரியண்ட்டை விற்பனை செய்வதே வீண், அதை யாரும் வாங்க மாட்டார்கள் என புதிய மாடல் ஒய் எல் காரின் அறிமுகத்தின் போதே தெரிவித்து இருந்தோம். அதன்படி, மாடல் ஒய் எலெக்ட்ரிக் காரின் லாங் ரேஞ்ச் வேரியண்ட்டின் விற்பனையை டெஸ்லா தற்போது நிறுத்தியுள்ளது.
இதனால், ஒரேயொரு ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் மட்டுமே மாடல் ஒய் எலெக்ட்ரிக் கார் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், அந்த ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் விலையும் ஏற்கனவே கூறியதுபோல் ரூ.9 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மாடல் ஒய் காருக்கும், மாடல் ஒய் எல் காருக்கும் இடையேயான விலை வித்தியாசம் ரூ.10.10 லட்சமாக விரிவடைந்துள்ளது.
விலை குறைக்கப்பட்டதை காரணமாக வைத்து, 2026 மாடல் ஒய் என்கிற பெயரில் புதிய மாடல் ஒய் காரை டெஸ்லா அறிமுகம் செய்துள்ளது. புதிய மாற்றங்களாக இந்த காரில் முழுவதும் கருப்பு நிறத்திலான கேபின் மற்றும் பிரீமியம் லுக்கிற்காக காருக்குள் பிரீமியம் தரத்திலான மெட்டீரியல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரை முன்தொகையாக ரூ.6 லட்சத்தை செலுத்தி மாதத்தவணையிலும் வாங்கலாம். மாதத்தவணை திட்டங்கள் ரூ.3,99,901-இல் இருந்து துவங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் அரசாங்கம் வழியாகவோ அல்லது வேறு ஏதேனும் வழியாகவோ டெஸ்லா நிறுவனத்திற்கு புதியதாக பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இல்லையென்றால், காரின் விலையை அதிரடியாக ரூ.9 லட்சம் அளவிற்கு குறைக்க முடியாது. எப்படியிருந்தாலும் இதன் மூலமாக இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கு கூடுதல் கவனம் கிடைக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications