6 பேர் நல்லா காலை நீட்டி அமர்ந்து செல்லக்கூடிய டெஸ்லா கார்! இதை முதலில் அறிமுகம் செய்து இருக்கலாமே!
டெஸ்லா (Tesla) நிறுவனத்தில் இருந்து முதல்முறையாக இந்தியாவில் கடந்த 2025ஆம் ஆண்டில் மாடல் ஒய் (Model Y) எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் லாங்-வீல்பேஸ் (Long-wheelbase) வெர்சன் 'மாடல் ஒய் எல்' (Model Y L) என்கிற பெயரில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான டெஸ்லா மாடல் ஒய் காருடன் ஒப்பிடுகையில் இது முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே அதிக தூரத்தை கொண்டதாகும்.
இதன் காரணமாகவே புதிய மாடல் ஒய் எல் காரில் அதிகமாக 6 இருக்கைகள் கிடைக்கின்றன. அதுவே, ஸ்டாண்டர்ட் மாடல் ஒய் காரில் 5 இருக்கைகள் மட்டுமே கிடைக்கின்றன. இதுமட்டுமின்றி, வழக்கமான மாடல் ஒய் கார் உடன் ஒப்பிடுகையில் புதிய மாடல் ஒய் எல் ஆனது இன்னும் சில சிறப்பம்சங்களை கொண்டதாக உள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

வெளிப்பக்க மாற்றங்கள்: மாடல் ஒய் காரை காட்டிலும் இந்தியாவில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடல் ஒய் எல் கார் 179மிமீ கூடுதல் நீளமானது, 44மிமீ கூடுதல் உயரமானது மற்றும் வீல்பேஸ் எனப்படும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரத்தை கூடுதல் 150மிமீ-க்கு கொண்டுள்ளது. மாடல் ஒய் காரில் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் மட்டுமே இரு பக்கங்களிலும் வழங்கப்படும் நிலையில், மாடல் ஒய் எல் காரில் மூன்றாவது சிறிய அளவிலான ஜன்னல் கண்ணாடி பின்பக்கத்தில் வழங்கப்படுகிறது.
19-இன்ச் அலாய் சக்கரங்களில் இந்த இரண்டு கார்களுக்கு இடையே மாற்றமில்லை என்றாலும், சக்கரங்களின் டிசைன் காரின் ஏரோடைனமிக்ஸ் பண்பை மேம்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. மாடல் ஒய் எல் எலெக்ட்ரிக் காரில் பிரத்யேகமாக பெரிய அளவிலான டக்-டெயில் ஸ்பாய்லர் மற்றும் பின்பக்க டெயில்கேட்டில் காரின் வெர்சனை குறிக்கக்கூடிய பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளன.

வெளிப்பக்க மாற்றங்கள்: மாடல் ஒய் எல் காரின் கூடுதல் பரிமாண அளவுகள் நேரடியாக, காரினுள் கேபினின் அளவையும், மேற்கூரையின் அளவையும் அதிகரித்துள்ளன. இதனால், மாடல் ஒய் காரில் இரு வரிசைகளில் மட்டுமே இருக்கைகள் வழங்கப்படும் நிலையில், புதிய மாடல் ஒய் எல் காரில் மூன்று வரிசைகளில், ஒவ்வொரு வரிசையிலும் தலா இரண்டு என மொத்தம் 6 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
தொழிற்நுட்ப அம்சங்கள்: தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், மாடல் ஒய் காரும் மாடல் ஒய் எல் காரும் பெரும்பாலானவற்றை ஒன்றுக்கொன்று பகிர்ந்துக் கொள்கின்றன. முன் இருக்கை பயணிகளுக்கு 16-இன்ச்சிலும், பின் இருக்கை பயணிகளுக்கு 8-இன்ச்சிலும் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் பனோராமிக் கண்ணாடி மேற்கூரை உள்ளிட்டவை இந்த இரு கார்களிலும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், மாடல் ஒய் எல் காரில் பிரத்யேகமாக அடாஸ் (ADAS) அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எலெக்ட்ரிக் மோட்டார் சிஸ்டம்: புதிய மாடல் ஒய் எல் காரில் இரு மோட்டார்கள் உடன் 88.2kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டத்தின் மூலமாக அதிகப்பட்சமாக 514 எச்பி மற்றும் 590 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும். இந்த காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 600கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். டெஸ்லாவின் சூப்பர்சார்ஜரை கொண்டு சார்ஜ் நிரப்பினால், 280கிமீ பயணத்திற்கான ரேஞ்சை வெறும் 15 நிமிடங்களில் பெற்றுவிடலாம்.
விலை: புதிய மாடல் ஒய் எல் எலெக்ட்ரிக் காரின் விலை ரூ.61.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மாடல் ஒய் காரின் விலைமிக்க லாங் ரேஞ்ச் ரியர்-வீல்-டிரைவ் வேரியண்ட்டின் விலையை விட சுமார் ரூ.5.9 லட்சம் குறைவாகும். அதேநேரம், எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டின் விலையை காட்டிலும் ரூ.2.1 லட்சம் அதிகமாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லாவில் மாடல் ஒய் காரை காட்டிலும் அதிக உட்புற இடவசதியை எதிர்பார்ப்பவர்களுக்கு மாடல் ஒய் எல் ஏற்றதாக இருக்கும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் விற்பனையில் இருக்கும் மாடல் ஒய் எல் ரைட்-ஹேண்ட்-டிரைவ் காரை அப்படியே இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் களமிறக்கி உள்ளது. பிஒய்டி சீலயன் 7 (BYD Sealion 7) மற்றும் வால்வோ இசி40 (Volvo EC40) எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இந்திய மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய டெஸ்லா காரின் டெலிவிரிகள் (Deliveries) வருகிற ஜூன் மாதம் முதல் துவங்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications