டெஸ்லா ரோட்ஸ்டருக்கு ரூ.2.5 கோடி அட்வான்ஸ்?... வித்தையைக் காட்டி கல்லாக்கட்டும் எலான் மஸ்க்!
ஒரு புதிய காரை வாங்க முன்பதிவு செய்வது வழக்கமான விஷயம்தான். சில ஆயிரங்கள் அல்லது சில லட்சங்களை முன்பணமாகச் செலுத்திவிட்டு, கார் உற்பத்தியாகி விற்பனைக்கு வரும்போது வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இன்னும் உற்பத்திக்குச் செல்லாத ஒரு காருக்காக ரூ.50 லட்சம் முதல் ரூ.2.5 கோடி வரை முன்பதிவுத் தொகை செலுத்த வேண்டும் என்றால், அது நிச்சயம் விவாதத்தை ஏற்படுத்தும்.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய ரோட்ஸ்டர் மின்சார ஸ்போர்ட்ஸ் கார் இப்படியொரு கேள்வியை எழுப்பியுள்ளது. காரின் செயல்திறன், ராக்கெட் உந்துவிசை தொழில்நுட்பம், பறப்பது போன்ற சாகசங்கள் எனப் பல அம்சங்களைக் காட்டி உலகையே வியக்க வைத்த டெஸ்லா, மறுபுறம் வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரிய முன்பதிவுத் தொகையையும் கேட்கிறது.

ரூ.2.5 கோடி புக்கிங் தொகை
இந்தியாவில் டெஸ்லா ரோட்ஸ்டர் பெர்ஃபார்மன்ஸ் மாடலுக்கான மொத்த முன்பதிவுத் தொகை ரூ.50.06 லட்சமாகவும், த்ரஸ்ட் மாடலுக்கு ரூ.2,50,25,000 செலுத்த வேண்டும். இதில் முதலில் ரூ.5.01 லட்சம் செலுத்தி, அடுத்த 10 நாட்களுக்குள் மீதமுள்ள தொகையைச் செலுத்த வேண்டும் என முன்பதிவு விதிமுறைகள் தெரிவிக்கின்றன.
இது காரின் இறுதி விலை அல்ல என்றும்; முன்பதிவுக்கான தொகையாகவும் தெரிவிக்கப்படுகிறது. டெஸ்லா நிறுவனம் காரின் இறுதி விலையையும், வாடிக்கையாளர்களுக்கான உறுதியான டெலிவரி தேதியையும் இன்னும் அறிவிக்கவில்லை. வரும் 2028-ம் ஆண்டில் உற்பத்தி தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான வலதுபுற ஸ்டியரிங் மாடல் எப்போது தயாராகும் என்பதும் தெளிவாகவில்லை.

வணிக தந்திரம்
புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நிறுவனங்கள் முன்பதிவுகளைப் பெறுவது தவறல்ல. குறிப்பாக, அதிக விலை கொண்ட சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை அளவிடுவதற்கும், ஆரம்பத்திலேயே வாங்க விரும்புபவர்களை அடையாளம் காண்பதற்கும் முன்பதிவுகள் உதவும்.
ஆனால், கோடிக்கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ள முன்பதிவுத் தொகையின் அளவுதான் கேள்விகளை எழுப்புகிறது. ரூ.5 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்வது ஒரு விஷயமாக இருந்தாலும், ரூ.50 லட்சம் அல்லது ரூ.2.5 கோடியை முன்கூட்டியே செலுத்துவது முற்றிலும் வேறொரு விஷயம். அதுவும் கார் எப்போது தயாராகும், இறுதியாக எவ்வளவு விலை நிர்ணயிக்கப்படும், இந்தியாவில் எப்போது டெலிவரி கிடைக்கும் என்பதற்கான உறுதி இல்லாத நிலையில், இவ்வளவு பெரிய தொகையைக் கேட்பது நியாயமா என்ற கேள்வி எழுகிறது.
வித்தைக்காட்டி கல்லாக்கட்டும் எலான்
எலான் மஸ்க்கின் பலம் அவரது தொழில்நுட்ப அறிவு மட்டுமல்ல; உலகளவில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் திறனும்கூட வியக்க வைக்கும் விஷயமாக கூறப்படுகிறது. புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே அதன் செயல்திறன், வித்தியாசமான தொழில்நுட்பம், எதிர்காலக் கனவு ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குகிறார்.
இது நிச்சயமாக எல்லா நிறுவனங்களும் செய்யக்கூடிய வணிக உத்திதான் என்றாலும், இந்தியாவில் டெஸ்லா ரோட்ஸ்டர் காருக்கான முன்பதிவு தொகை டெலிவிரி குறித்து எந்த ஒரு உறுதியும் இல்லாத நிலையில் நிச்சயம் இது பெரிய வணிக தந்திரமாகவே பார்க்க முடிகிறது.
இருப்பினும், முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களை கொடுத்தால் இந்த தொகை ஒரு பொருட்டாக இருக்காது என்பதே ஆட்டோமொபைல் துறையினரின் வாதமாக இருக்கிறது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உரிய பதில்களை டெஸ்லா வழங்கும் என்று நம்பிக்கையில்தான் முன்பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.


Click it and Unblock the Notifications


