அடுத்து இந்தியாவில் வெளியாகும் புதிய 7 சீட்டர் எஸ்யூவிக்கள் இவை தான்
இந்தியா போன்ற பெரிய குடும்பங்களைக் கொண்ட நாடுகளில் 7 சீட்டர் கார்களுக்கான தேவை சற்று அதிகமாகவே இருக்கிறது. ஒரு 7 சீட்டர் காரை வாங்கிவிட்டால், தேவைப்படும் போது கூடுதலான ஆட்களை காரில் ஏற்றிக் கொள்ளலாம் என்று நினைக்காத வாடிக்கையாளர்களே இந்தியாவில் இருக்க முடியாது. இதனாலேயே கார் தயாரிப்பு நிறுவனங்களும் தற்சமயம் நிறைய 7 சீட்டர் கார்களை, குறிப்பாக எஸ்யூவிக்களை வெளிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
அப்படி அடுத்த ஓராண்டிற்குள் இந்திாயவில் வெளியாகவிருக்கும் புதிய 7 சீட்டர் கார்களைப் பார்க்கலாம். எம்ஜி மோட்டார், மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், டொயோட்டா மற்றும் மாருதி சுஸூகி உள்ளிட்ட பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் விரைவில் புதிய 7 சீட்டர் கார்களை வெளியிடத் திட்டமிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடியாக இந்தியாவில் ஒரு 7 சீட்டர் காரை நாம் எதிர்பார்க்கலாம் என்றால் அது எம்ஜி மோட்டாரின் மெஜஸ்டர் எஸ்யூவி தான். ஃபுல் சைஸ் எஸ்யூவி காராக இதனை ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்துவிட்டது அந்நிறுவனம். இதன் வெளியீடு மட்டும் தான் பாக்கி. அடுத்த சில வாரங்களில் இந்த 7 சீட்டர் எஸ்யூவியின் வெளியீட்டை இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம். முன்னதாக தாங்கள் விற்பனை செய்து வந்த கிளாஸ்டர் எஸ்யூவிக்குப் பதிலாக இந்த மெஜஸ்டரை களமிறக்கவிருக்கிறது எம்ஜி மோட்டார்.
இரண்டாவதாக நாம் பார்க்கவிருக்கும் 7 சீட்டர் கார் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு கார். அது வேறெதுவும் இல்லை மஹிந்திராவின் ஸ்கார்பியோ தான். இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்கார்பியோ கிளாஸிக் மற்றும் ஸ்கார்பியோ N ஆகிய இரண்டு மாடல்களையுமே விரைவில் அப்டேட் செய்யவுள்ளது மஹிந்திரா. இரண்டு கார்களிலும் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் செய்யப்படாது. மாறாக தற்போதிருப்பதை விட கூடுதல் வசதிகளுடனும் மேம்பட்ட டிசைனுடனும் புதிய எஸ்யூவிக்கள் இருக்கும்.

தற்போது இந்தியாவில் ஸ்டாண்டர்டான கோடியாக் எஸ்யூவியை மட்டுமே ஸ்கோடா விற்பனை செய்து வருகிறது. விரைவில் இந்த 7 சீட்டர் ப்ரீமியம் எஸ்யூவியின் ஸ்போர்ட்டியான RS வடிவத்தையும் இந்தியாவில் வெளியிடுவது குறித்து அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. CBU முறையில் முழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தக் காரை இந்தியாவில் ஸ்கோடா விற்பனை செய்யலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.
அடுத்ததாக இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்களுள் ஒன்று ஃபோக்ஸ்வாகன் டேரான். தற்போது இந்தியாவில் டேரான் R-லைன் மாடலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் R-லைன் அல்லாத ஸ்டாண்டர்டு டேரான் மாடலையும் இந்தியாவிற்குக் கொண்டு வருவது குறித்து ஃபோக்ஸ்வாகன் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த R-லைன் எஸ்யூவி இந்தியாவில் வெளியானதால், ஸ்டாண்டர்டு வெர்ஷன் இந்தியாவிற்கு வர சில காலம் ஆகும்.
டாடாவின் 7 சீட்டர் எஸ்யூவி காராக சஃபாரி ஏற்கனவே விற்பனையில் இருக்கிறது. அதன் எலெக்ட்ரிக் வடிவமான சஃபாரி EV-யை விரைவில் இந்தியாவில் வெளியிடவுள்ளது டாடா மோட்டார்ஸ். எரிபொருள் சஃபாரி மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக புதிய சஃபாரி EV இருக்கும். கடந்த ஆண்டு ஹேரியர் EV காரை வெளியிட்ட நிலையில், இந்த ஆண்டு சஃபாரி EV காரை டாடா வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் 5 சீட்டர் எஸ்யூவிக்களில் ஒன்றாக மாருதியின் கிராண்டு விட்டாராவை சொல்லலாம். இந்நிலையில் இதன் 7 சீட்டர் வெர்ஷனையும் விரைவில் அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மாருதி கிராண்டு விட்டாராவின் ரீபேட்ஜ்டு வடிவமாகவே டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது எனவே, கிராண்டு விட்டாரா 7 சீட்டர் காரின் அடிப்படையில் புதிய அர்பன் க்ரூஸர் 7 சீட்டர் காரும் இந்தியாவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வேன் போன்ற வடிவமைப்பில் இருக்கும் 7 சீட்கள் கொண்ட எம்பிவியை வாங்குவதை விட கார் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் 7 சீட்டர் எஸ்யூவிக்களை நிறைய வாடிக்கையாளர்கள் விரும்புவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனாலேயே அடுத்த குறுகிய காலத்தில் நிறைய 7 சீட்டர் கார்களின் வெளியீடு மற்றும் அப்டேட்டை இந்தியாவில் நாம் பார்க்கவிருக்கிறோம். நீங்கள் ஒரு காரை வாங்கத் திட்டமிட்டிருந்தால், புதிய கார்கள் வெளியாகும் வரை கொஞ்சம் காத்திருங்கள் என்பதே எங்கள் பதிலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications