மாருதி ஃபிராங்க்ஸ் எஸ்யூவியை வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை.. இந்தப் பிரச்சினைகள் எல்லாம் வரலாம்
குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற மாருதி கார்களில் ஃபிராங்கஸுக்கு முக்கிய இடம் இருக்கிறது. கிராஸ்ஓவர் எஸ்யூவிக்கான ஸ்டைலான லுக், உள்ளே நல்ல இடவசதி, பவர்ஃபுல்லான இன்ஜின் என்ற காம்போ மக்களை வெகுவாகவே ஈர்த்திருக்கிறது. எனவே அதிகளவிலான வாடிக்கையாளர்கள் மற்ற முறையான எஸ்யூவியை விட இந்த கிராஸ்ஓவர் எஸ்யூவியை நிறையவே விரும்புகிறார்கள.
2023ல் வெளியிடப்பட்ட இந்த மாருதி கிராஸ்ஓவர் எஸ்யூவி என்னென்ன அம்சங்களைக் கொண்டுள்ளது? பவர்ட்ரெயின் ஆப்ஷன்கன் என்னென்ன? இதில் என்னென்ன பிரச்சினைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது? இதன் ரீசேல் மதிப்பு என்ன? உள்ளிட்ட விவரங்களை எல்லாம் இந்தக் கட்டுரையில் இங்கே நாம் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள்:
ஃபிராங்க்ஸ் காரில் தான் நீண்ட காலத்திற்குப் பிறகு 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இன்ஜினை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது மாருதி. 100 hp பவர் மற்றும் 148 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனை இந்த இன்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது மாருதியின் லைன்-அப்பில் டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும் ஒரே கார் ஃபிராங்க்ஸ் தான்.
இந்த டர்போ பெட்ரோல் இன்ஜினைத் தவிர்த்து, 90 hp பவரை உற்பத்தி செய்யும், 1.2 லிட்டர், NA பெட்ரோல் இன்ஜின் மற்றும் இதே இன்ஜினுடன் கூடிய CNG பவர்ட்ரெயின் ஆகிய தேர்வுகளையும் ஃபிராங்க்ஸ் கொண்டுள்ளது. பெட்ரோல் இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. CNG-யுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே.

மைலேஜ்:
CNG பவர்ட்ரெயின் தான் இதில் அதிக மைலேஜைக் கொடுக்கும் ஒன்றாக இருக்கிறது. கிலோவுக்கு சுமார் 28.51 கிமீ மைலேஜை இந்தப் பவர்ட்ரெயின் கொடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது மாருதி. அதனைத் தொடர்ந்து NA பெட்ரோல் AMT மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகள் முறையே 22.89 கிமீ மற்றும் 21.79 கிமீ மைலேஜைக் கொடுக்கும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இறுதியாக டர்போ பெட்ரோல் ஆட்டோமேட்டிக் பவர்ட்ரெயினானது லிட்டருக்கு 21.50 கிமீ மைலேஜையும், மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலானது லிட்டருக்கு 20 கிமீ மைலேஜையும் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் ARAI அமைப்பு சோதனை செய்து வெளியிட்ட மைலேஜ் அளவுகளாகும். தினசரி பயன்பாட்டில் இதனை விடக் குறைவான அளவு மைலேஜ நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்:
இந்த கிராஸ்ஓவர் எஸ்யூவியை, சிக்மா, டெல்டா, டெல்டா பிளஸ், ஸெட்டா மற்றும் ஆல்ஃபா என ஐந்து வேரியன்ட்களாக இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது மாருதி. இதில் டெல்டா பிளஸ் வேரியன்ட் வரை மட்டும் CNG பவர்ட்ரெயின் கொடுக்கப்படுகிறது. அதேபோல் டாப் இரண்டு வேரியன்ட்களில் மட்டுமே நாம் மேலே பார்த்த பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வு கொடுக்கப்பட்டு வருகிறது.
வசதிகளைப் பொறுத்தவரை, 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜிங், 6 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம், ஆட்டோ டிம்மிங் IRVM, LED விளக்குகள், கனெக்டட் கார் தொழில்நுட்பம், ரியர் ஏசி வென்ட்கள், டைண்டு கட் அலாய் வீல்கள், பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.
குறிப்பு: இந்த அனைத்து வசதிகளும் டாப் எண்டு ஆல்ஃப் வேரியன்டிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வேரியன்டும் கீழே இறங்க இறங்க விலை குறைவதோடு, இந்த வசதிகளும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காருடன் 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ வரையிலான வாரண்டியை ஸ்டாண்டர்டாக வழங்குகிறது மாருதி. விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இதனை எக்டண்டு செய்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்படுகிறது.
என்னென்ன பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது?
இதுவரை ஃபிராங்க்ஸ் காரை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் கூறும் கருத்துக்களின் அடிப்படையில், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பிரச்சினைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக கீழ்நிலை வேரியன்ட்கள் கொண்டிருக்கும் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில். கனெக்டட் கார் தொழில்நுட்பம் இலகுவாக வேலை செய்வதில் பிரச்சினை ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சஸ்பென்ஷனில் வேகமாக தேய்மானம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் காரின் உட்புறம் ஓட்டை உடைசல் போன்ற சத்தம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறார்கள்.எனவே டெஸ்ட் டிரைவ் செய்யும் போது கொஞ்சம் கரடுமுரடான சாலைகளில் செய்து பார்ப்போது இன்னும் கொஞ்சம் உசிதம். பூஸ்டர்ஜெட் இன்ஜினை தேர்வு செய்கிறீர்கள் என்றால் அதற்கான ஸ்பேர்பார்ட்ஸ்களின் விலையையும் ஒரு முறை செக் செய்து விடுங்கள். இது பிரச்சினை கிடையாது. ஆனால் பின்னால் நீங்கள் ஷாக் ஆக வேண்டியிருக்காது.
ரீசேல் மதிப்பு:
மாருதி கார் என்றாலே பயன்படுத்திய கார்கள் சந்தையில் நல்ல மதிப்பு இருக்கிறது. அது ஃபிராங்க்ஸ் காருக்கும் பொருந்தும். இந்தக் கார் புதிதாக வெளியிடப்பட்டே சில ஆண்டுகள் தான் ஆகிறது என்பதால், தற்போது 6 லட்சம் ரூபாய்க்குக் கீழான விலையில் பயன்படுத்திய கார்கள் சந்தையிலும் விற்பனையில் இல்லை. 6 லட்சம் ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய்க்குள் நல்ல கண்டிஷனிலேயே கார்களை வாங்கலாம்.
விற்பனை செய்வதும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சில லட்சம் ரூபாய் குறைவான விலையிலேயே நீங்கள் விற்பனை செய்ய முடியும். தற்போது 6.85 லட்சம் ரூபாய் முதல் 11.98 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் புதிய ஃபிராங்க்ஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பயன்படுத்திய ஃபிராங்க்ஸ் காரை வாங்குகிறீர்கள் என்றால் 8.5 லட்சம் ரூபாய்க்கு மேல் போவது பரிந்துரைக்குப்படுவதில்லை. அதற்கு நீங்கள் புதிய காரையே வாங்கிவிடலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
புதிய காராக இருந்தாலும் சரி, பயன்படுத்திய காராக இருந்தாலும் சரி, மாருதி ஃபிராங்க்ஸ் ஒரு சிறந்த தேர்வு தான். எனினும் எந்தக் காரையும் வாங்கும் முன்னும் நன்றாக சோதனை செய்து விடுங்கள். இதுவரை இந்தக் காரில் பெரிய அளவில் பிரச்சினை இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறவில்லை. பட்ஜெட் விலையில் ஃபன் டூ டிரைவாக, ஐந்து பேர் நன்றாக அமர்ந்து செல்லக்கூடிய காராக ஃபிராங்க்ஸ் சிறப்பான ஒன்று தான்.


Click it and Unblock the Notifications