இந்த ஒரு எஸ்யூவிய மட்டும் வாங்கிட்டா போதும்.. லைஃப் செட்டில்டு.. அப்படி இதுல என்ன இருக்கு?
மேம்படுத்தப்பட்ட மூன்றாம் தலைமுறை Q7 எஸ்யூவியை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆடி (Audi). ஏற்கனவே விற்பனையில் இருக்கும் Q5 மற்றும் அடுத்து வெளியாகவிருக்கும் Q9 ஆகிய கார்களுக்கு இடையில் இந்த Q7 பிளேஸ் செய்யப்பட்டிருக்கிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு அப்டேட் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை Q7 மாடலுக்கு மாற்றாக, இந்தப் புதிய மூன்றாம் தலைமுறை Q7 எஸ்யூவி விற்பனை செய்யப்படவிருக்கிறது.
இரண்டாம் தலைமுறை மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மூன்றாம் தலைமுறை Q7 மாடலானது கொஞ்சம் பெரிதாகவும், ரக்கடான தோற்றத்தைக் கொண்டிருப்பது போலவும் இருக்கிறது. முகப்புப் பக்கத்தில் தொடங்கி, பின்பக்க வரை அனைத்து பக்கமும் மறுவடிவமைப்பு செய்திருக்கிறது ஆடி. வசதிகளும் பல்வேறு வகைகளில் புதிதாகக் கொடுக்கப்பட்டிருப்பதுடன், மேம்படுத்தப்படவும் செய்திருக்கின்றன.

இதுவரை 5 சீட்டர் மற்றும் 7 சீட்டராக மட்டுமே இரண்டாம் தலைமுறை Q7 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மூன்றாம் தலைமுறை மாடலில் 6 சீட்டர் தேர்வையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறது ஆடி. 6 சீட்டர் வெர்ஷனில் இரண்டாம் வரிசையில் மூன்று பேர் அமரும் வகையிலான பென்ச் சீட்டாக இல்லாமல் இரண்டு கேப்டன் சீட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
காரின் உட்புறம் டேஷ்போர்டு முழுவதும் ஸ்கிரீன்களாலேயே நிரப்பப்பட்டிருக்கிறது. டிரைவர்ஸ் டிஸ்பிளே மற்றும் நடுவில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் இரண்டும் டிரைவரைப் பார்த்திருக்கும் வகையில் ஆங்கிள் செய்யப்பட்டிருக்கின்றன. புதிய 4 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டிருக்கிறது. மரத்தால் செய்யப்பட்டிருப்பது போல செண்டர் கன்சோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு வயர்லெஸ் சார்ஜிங் பேடுகள், இன்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் பட்டன், ரோட்டரி வால்யூம் நாப், ஸ்டோரேஜ் கப்பி ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இத்துடன் பனோரமிக் சன்ரூஃப், ADAS பாதுகாப்பு அம்சங்கள், 22 ஸ்பீக்கர்கள் கொண்ட பேங் & வுல்சென் 4D சவுண்டு சிஸ்டம், கனெக்ட்ட கார் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான சீட்கள் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தலைமுறை Q7-ல் 7 சீட் லேஅவுட்டை ஸ்டாண்டர்டாக ஆடி கொடுத்த நிலையில், புதிய Q7-ல் 5 சீட் லேஅவுட்டையே ஸ்டாண்டர்டாகக் கொடுக்கவுள்ளது. வேண்டும் என்றால் 6 சீட்டராகவோ, 7 சீட்டராகவோ மாற்றிக் கொடுக்கிறது.
சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுவதால் நிறைய பவர்ஃபுல்லான பவர்ட்ரெயின் தேர்வுகளைக் கொண்டிருக்கிறது Q7. ஸ்டாண்டர்டு Q7 மாடலை 2.9 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் V6 அல்லது 3.0 லிட்டர் மைல்டு ஹைபிரிட் டீசல் ஆகிய இரண்டு இன்ஜின் தேர்வுகளில் ஒன்றுடன் பெறலாம். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இந்தக் காரில் ஸ்டாண்டர்டாகவே கொடுக்கப்படுகிறது.
V6 பெட்ரோல் இன்ஜினானது 429 hp பவர் மற்றும் 599 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் உதவியுடன் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை வெறும் 4.8 நொடிகளில் எட்டும் திறனைப் பெறுகிறது Q7. V6 டீசல் இன்ஜினை இரண்டு வகையான ட்யூன்களுடன் வழங்குகிறது ஆடி.
கீழ்நிலை வேரியன்ட்களில் இந்த டீசல் இன்ஜினானது 245 hp பவர் மற்றும் 500 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. மேல் நிலை வேரியன்ட்களில் 299 hp பவர் மற்றும் 630 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. காற்று மாசுபாட்டு அளவைக் குறைக்கும் நோக்கத்தோடு இந்த டீசல் இன்ஜினை ஹைட்ரோட்ரீட்டட் வெஜிடபிள் ஆயிலிலும் இயங்கும் வகையில் ஆடி வடிவமைத்திருக்கிறது. இதனைப் பயன்படுத்துதன் மூலம் 95 சதவீதம் வரை கார்பன் வெளியேற்றம் குறைவாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது ஆடி.
சில சந்தைகளில் ஸ்போர்ட்டியான SQ7 மாடலையும் விற்பனை செய்து வருகிறது ஆடி. அந்த மாதிரியான ஸ்போர்ட்டியான Q7 கார்களில் இன்னும் பவர்ஃபுல்லான 4.0 லிட்டர், ட்வின் டர்போ பெட்ரோல் V8 இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது 591 hp பவர் மற்றும் 800 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் உதவியுடன் SQ7 காரானது மணிக்கு 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.7 நொடிகளில் எட்டிப் பிடிக்க முடியும்.
இந்தியாவிலும் Q7 எஸ்யூவியை ஆடி விற்பனை செய்து வருவதையடுத்து, இந்த மேம்படுத்பப்பட்ட மூன்றாம் தலைமுறை கார் இந்தியாவிற்கும் விரைவில் கொண்டு வரப்படும். இந்தியாவில் விற்பனையில் இருக்கும் Q7 காரில் 3.0 லிட்டர், டர்போ பெட்ரோல், V6 இன்ஜினே மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இன்ஜினானது 335 hp பவர் மற்றும் 500 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
இந்தியாவிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே Q7 காரில் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிய மூன்றாம் தலைமுறை Q7 இந்தியாவில் வெளியிடப்பட்டாலும், இன்ஜின் தேர்வு இதுவே தான் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பவர்ஃபுல்லான இன்ஜினைக் கூடக் கொடுக்கலாம். வெளியாகும் போது தான் ஆடி என்ன முடிவெடுத்திருக்கிறது என்பது தெரியவரும்.
தற்போது புதிய மூன்றாம் தலைமுறை Q7 எஸ்யூவியின் டீசல் இன்ஜின் கார்களுக்கான விலையை மட்டுமே சர்வதேச அளவில் ஆடி அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்திய மதிப்பிற்கு 96.90 லட்சம் முதல் 99.76 லட்சம் வரையிலான விலையை அந்த மாடல்கள் கொண்டிருக்கின்றன. பெட்ரோல் இன்ஜின் Q7 எஸ்யூவிக்கான விலை விரைவில் அறிவிக்கப்படும்.
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தற்போதைய இரண்டாம் தலைமுறை Q7 எஸ்யூவி மாடலானது 87.17 லட்சம் முதல் 96.15 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேம்படுத்தப்படும் புதிய மூன்றாம் தலைமுறை Q7 மாடலானது இதனை விட கூடுதலான விலையிலேயே இந்தியாவில் வெளியாகும் எனத் தெரிகிறது. அந்த வகையில் 1 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடி Q7 எஸ்யூவியின் விலை உயரவிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்பை விட சிறப்பான, சொகுசான, வசதிகள் நிறைந்த எஸ்யூவியாக மாறியிருக்கிறது ஆடி Q7. இந்தியாவில் இதன் வெளியீடு குறித்த தகவல்கள் இப்போது இல்லை. 2027லேயே இதன் வெளியீட்டை நாம் இந்தியாவில் எதிர்பார்க்கலாம். BMW X5 மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் GLE ஆகிய சொகுசு எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக இந்தப் புதிய ஆடி Q7 இருக்கும்.


Click it and Unblock the Notifications