இந்தியாவில் வெளியாகும் புதிய எஸ்யூவி இது தான்.. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் வெளியாகிறது!
டாடாவின் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தி ஜீப் நிறுவனம் உருவாக்கவிருக்கும் புதிய எஸ்யூவி குறித்த தகவல்கள் தற்போது கசிந்திருக்கின்றன. இந்தப் புதிய எஸ்யூவி உருவாக்கம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஸ்டெல்லான்டிஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. ஸ்டெல்லான்டில் நிறுவனமே ஜீப்பின் தாய் நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்படும் எஸ்யூவிக்கள் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது கிடைத்திருக்கின்றன.
இந்த புதிய எஸ்யூவியை இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமின்றி சர்வதேச அளவில் வளர்ந்து வரும் 50 நாடுகளில் விற்பனை செய்வதற்காக ஏற்றுமதி செய்யவும் ஸ்டெல்லான்டிஸ் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் புதிய எஸ்யூவியின் உருவாக்கத்திற்காக டாடா மோட்டார்ஸுடனான கூட்டணியை ஜீப் பயன்படுத்திக் கொள்ளவிருக்கிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாகவே ஸ்டெல்லான்டிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் இடையே கூட்டணி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சியரா எஸ்யூவிக்கு டாடா பயன்படுத்தியிருக்கும் ARGOS பிளாட்ஃபார்மையே தங்களுடைய புதிய எஸ்யூவிக்காகப் பயன்படுத்தவுள்ளது ஜீப். இதுமட்டுமின்றி சியரா எஸ்யூவியுடன் டாடா அறிமுகப்படுத்திய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினையும் தங்களது புதிய எஸ்யூவியில் ஜீப் பயன்படுத்திக் கொள்ளவிருக்கிறது. பல கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகே இந்த பிளாட்ஃபார்மும், இந்த இன்ஜினும் இறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
புதிய எஸ்யூவி மட்டுமின்றி ஏற்கனவே இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் காம்பஸ் மற்றும் மெரிடியன் ஆகிய எஸ்யூவிக்களிலும் டாடாவின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை ஜீப் பயன்படுத்தவிருப்பதாக முன்பே தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. BS6 விதிமுறைகள் அமலாவதற்கு முன்பு வரை இந்தக் கார்களில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் BS6 விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த இன்ஜினை ஜீப்பால் மேம்படுத்த முடியவில்லை.

இதன் காரணமாக பெட்ரோல் இன்ஜின் இல்லாமல் தற்போது 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் தேர்வுடன் மட்டுமே காம்பஸ் மற்றும் மெரிடியன் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த டர்போ டீசல் இன்ஜினை ARGOS பிளாடஃபார்முடன் பயன்படுத்த முடியாது. அடிப்படையில் இருந்து புதிய இன்ஜனைத் தயாரிப்பதும் பெரும் செலவு பிடித்த வேலை. எனவே தான் டாடாவின் உதவியுடன் புதிய காரை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது ஜீப்.
பிளாட்ஃபார்ம் மற்றும் இன்ஜினை வழங்குவதைத் தவிர்த்து ஜீப்பின் புதிய எஸ்யூவியின் உருவாக்கத்தில் டாடாவின் பங்கு எதுவும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய எஸ்யூவியின் ஒட்டுமொத்த டிசைன், கட்டமைப்பு மற்றும் பிற அம்சங்கள் அனைத்துமே மொத்தமாக ஜீப்பை மட்டுமே சேர்ந்தது. வணிக ரீதியாகவும் இந்த எஸ்யூவியினால் டாடாவிற்கு எந்த நன்மையும் இருக்கப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யூரோ 7 மற்றும் BS7 மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் டாடாவின் இன்ஜின் இருப்பதும், இதனை ஸ்டெல்லான்டிஸ் இறுதி செய்ததற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 2028ல் இந்தப் புதிய எஸ்யூவியின் வெளீயீடு சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக 2027ல் மற்றொறு ஜீப் எஸ்யூவியைக் கூட இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம். அல்லது இந்த ARGOS பிளாட்ஃபார்ம் எஸ்யூவியைத் தான் ஜீப் முன்னதாகக் குறிப்பிட்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த தெளிவான தகவல்கள் தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் பிளாட்ஃபார்ம் அல்லது இன்ஜினைப் பயன்படுத்துவது இதுவரை பலமுறை நடந்திருக்கிறது. ஆனால் வெளிநாட்டு நிறுவனம் இந்தியா தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவது அடிக்கடி நாம் கேட்கும் செய்தி கிடையாது. எனவே டாடாவின் இன்ஜினை ஜீப் ஏற்றுமதி செய்யும் கார்களுக்கும் பயன்படுத்தப் போவது இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு இனிப்பான செய்தி தான்.


Click it and Unblock the Notifications