ஜூலை மாத விற்பனையில் இந்தியாவின் டாப்-10 கார்கள்... பட்டியலில் 6 இடங்களை கைப்பற்றி மாருதி அசத்தல்!!
இந்திய பயணிகள் வாகன சந்தை 2026 ஜூலை மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உற்பத்தியாளர்களிடமிருந்து டீலர்களுக்கு அனுப்பப்பட்ட கார்கள் கடந்த மாதம் 4.7 லட்சத்தை தாண்டி புதிய சாதனையை பதிவு செய்துள்ளன. இதனுடன், ஜூலை மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது.
கடந்த மாத விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் 6 கார் மாடல்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்து மீண்டும் தனது வலுவான ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது. அடுத்து இந்த பட்டியலில் டாடா மோட்டார்ஸ் இரண்டு இடங்களையும், ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா கார் மாடல்கள் தலா ஒரு இடத்தையும் பிடித்துள்ளன. எந்தெந்த கார் மாடல்கள் எந்த இடங்களை பிடித்துள்ளது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

1. மாருதி சுஸுகி டிசையர்
ஜூலை மாதத்தில் இந்தியாவின் அதிகம் விற்பனையான காராக டிசையர் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 23,791 டிசையர் கார்கள் விற்பனையாகி உள்ளன. அதிக மைலேஜ், விசாலமான கேபின், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் மாருதியின் பரந்துவிரிந்த சர்வீஸ் மற்றும் டீலர் நெட்வொர்க் ஆகியவை குடும்ப வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக இந்த செடானை தொடர்ந்து வைத்திருக்கின்றன.
2. மாருதி சுஸுகி வேகன் ஆர்
நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற ஹேட்ச்பேக் மாடல்களில் ஒன்றான வேகன் ஆர், ஜூலை மாதத்தில் 23,338 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. உயரமான கேபின், எளிதான ஓட்டும் அனுபவம், அதிக இடவசதி, பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகள் ஆகியவை இந்த காரின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
3. மாருதி சுஸுகி எர்டிகா
இந்தியாவில் 7 பேர் செல்வதற்கான குடும்ப எம்பிவி கார் பிரிவில் மாருதி எர்டிகா கார் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த மாதம் 21,606 யூனிட்டுகள் விற்பனையாகி இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எம்பிவி என்ற பெருமையுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதிக இடவசதி, நல்ல மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு காரணமாக பெரிய குடும்பங்களின் விருப்பமான மாடலாக இது உள்ளது.
| Rank | Model | July 2026 sales (units) | July 2025 sales (units) | YoY growth (%) |
|---|---|---|---|---|
| 1 | Maruti Suzuki Dzire | 23,791 | 20,895 | 13.86 |
| 2 | Maruti Suzuki Wagon R | 23,338 | 14,710 | 58.65 |
| 3 | Maruti Suzuki Ertiga | 21,606 | 16,604 | 30.13 |
| 4 | Maruti Suzuki Swift | 21,538 | 14,190 | 51.78 |
| 5 | Tata Punch, Punch EV | 21,313 | 10,785 | 97.62 |
| 6 | Maruti Suzuki Fronx | 19,473 | 12,872 | 51.28 |
| 7 | Maruti Suzuki Baleno | 18,241 | 12,503 | 45.89 |
| 8 | Hyundai Creta | 18,088 | 16,898 | 7.04 |
| 9 | Tata Nexon | 17,471 | 12,825 | 36.23 |
| 10 | Mahindra Scorpio | 16,009 | 13,747 | 16.45 |
| Total | 2,00,868 | 1,46,029 | 37.55 | |
4. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் வாடிக்கையாளர் மத்தியில் தொடர்ந்து வரவற்பை தக்க வைத்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் 21,538 ஸ்விஃப்ட் யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. ஸ்போர்ட்டியான வடிவமைப்பு, புதிய இசட் சீரிஸ் எஞ்சின் மற்றும் அதிக மைலேஜ் போன்றவற்ரால் இளைய சமுதாய வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

5. டாடா பன்ச்
மைக்ரோ எஸ்யூவி பிரிவில் முன்னணி மாடலாக இருக்கும் டாடா பன்ச் கார் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் 21,313 பன்ச் கார்கள் விற்பனையாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு, அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் பெட்ரோல், சிஎன்ஜி, எலெக்ட்ரிக் என மூன்று விதமான எரிபொருள் தேர்வுகளில் கிடைப்பது இதன் பலமாகும்.
6. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ்
காம்பாக்ட் எஸ்யூவி தோற்றம் மற்றும் பிரீமியம் அம்சங்களால் மாருதி ஃப்ரான்க்ஸ் கார் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் 19,473 ஃப்ரான்க்ஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. டர்போ பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகள் மூலம் பல்வேறு வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. மேலும், இதன் டிசைன் மற்றும் குறைவான பராமரிப்பும் இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
7. மாருதி சுஸுகி பலேனோ
பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் முன்னணியில் இருக்கும் மாருதி பலேனோ கார் கடந்த மாதம் 18,241 யூனிட்கள் விற்பனையாகி எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. விசாலமான கேபின், நவீன வசதிகள் மற்றும் அதிக எரிபொருள் சிக்கனம் காரணமாக நகர்ப்புற வாடிக்கையாளர்களின் விருப்பமான மாடலாக இது உள்ளது.

8. ஹூண்டாய் க்ரெட்டா
நடுத்தர எஸ்யூவி பிரிவில் கடும் போட்டி இருந்தாலும் ஹூண்டாய் க்ரெட்டா கார் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. 18,088 யூனிட்டுகள் விற்பனையாகி தனது இடத்தை தக்க வைத்துள்ளது. பெட்ரோல், டர்போ பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் எரிபொருள் தேர்வுகள், ADAS உள்ளிட்ட பிரீமியம் அம்சங்கள் இதன் முக்கிய ஈர்ப்பாக உள்ளன.
9. டாடா நெக்ஸான்
டாடா மோட்டார்ஸின் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் எஸ்யூவியான நெக்ஸான், கடந்த ஜூலை மாதத்தில் 17,471 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என பல்வேறு எரிபொருள் தேர்வுகள் மற்றும் உயர்ந்த பாதுகாப்பு அம்சங்கள் இதன் முக்கிய பலமாக உள்ளன.
10. மஹிந்திரா ஸ்கார்பியோ
கடந்த ஜூலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகிய இரு மாடல்களின் மொத்த விற்பனை 16,009 யூனிட்களாக பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த எஞ்சின், வலுவான சாலை திறன் மற்றும் கம்பீரமான எஸ்யூவி தோற்றம் காரணமாக இந்த மாடல் தொடர்ந்து இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பமான முழு அளவிலான எஸ்யூவிகளில் ஒன்றாக உள்ளது.


Click it and Unblock the Notifications
