அக்டோபர் விற்பனையில் டாப் 10 கார்கள்: பட்டியலில் வலுவான நிலையில் மாருதி; வாஷ் அவுட் ஆன ஹூண்டாய்!!

இந்தியாவில் கார் விற்பனை சந்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. குறிப்பாக பண்டிகைக் காலத்தில் வழக்கம்போல் கார் விற்பனை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையைப் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் மாடல்களின் விவரங்களை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு முதல் 10 இடங்களைப் பிடித்த கார்களின் மொத்த விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மாருதி வேகன்ஆர் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், பிரெஸ்ஸா இரண்டாவது இடத்தையும், டாடா நெக்ஸான் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன. இதில், டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி ஏழு இடங்களையும், டாடா இரண்டு இடங்களையும், மஹிந்திரா ஒரு இடத்தையும் பிடித்தது. ஆனால், ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் ஒன்றுகூட இந்த பட்டியலில் இல்லை. எந்தெந்த கார்கள், எந்த இடத்தை பிடித்தன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

Maruti Wagon R

1. மாருதி வேகன்ஆர்

இந்திய குடும்பங்களின் விருப்பமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான மாருதி வேகன்ஆர், கடந்த அக்டோபர் மாதத்தில் 23,747 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 18,970 கார்கள் மட்டுமே விற்பனையாகின. தற்போது விற்பனை 25.18 சதவீதம் விற்பனை வளர்ந்துள்ளது. இதன்மூலம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த காரில் 1.0 லிட்டர், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் 1.0 லிட்டர் எஞ்சினில் சிஎன்ஜி எரிபொருள் தேர்வும் கிடைக்கிறது. மேலும், 6 ஏர்பேக்குகள், டச் ஸ்கிரீன், ஸ்டீயரிங் கட்டுப்பாடுகள், விசாலமான கேபின் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக உள்ளன. சென்னையில் ரூ.4.99 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

Also Read

2. மாருதி பிரெஸ்ஸா

கடந்த அக்டோபரில் மாருதி பிரெஸ்ஸா கார் 22,436 யூனிட்டுகள் விற்பனையாகி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் 12,072 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையான நிலையில், தற்போது 85.85 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. முதல் 10 கார்களில் ஆண்டுக்கு ஆண்டு அதிக வளர்ச்சியைப் பதிவு செய்த மாடலும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரெஸ்ஸாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. சிஎன்ஜி மாடலும் விற்பனை செய்யப்படுகிறது. எலக்ட்ரிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், பின்புற ஏசி வென்ட்டுகள் உள்ளிட்ட வசதிகள் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. சென்னையில் ரூ.7.49 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

Also Read

3. டாடா நெக்ஸான்

கடந்த மாதம் டாடா நெக்ஸான் மற்றும் அதன் எலக்ட்ரிக் வெர்ஷன் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விற்பனை 21,966 யூனிட்டுகளாக உள்ளது. கடந்த ஆண்டு விற்பனையான 22,083 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது 0.53 சதவீதம் சரிவாகும். இருப்பினும், செப்டம்பர் மாதத்தைவிட அக்டோபரில் 7.38 சதவீதம் அதிக விற்பனை பதிவாகியுள்ளது.

நெக்ஸானின் பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் டர்போ எஞ்சினும், டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சினும் வழங்கப்படுகின்றன. இதுதவிர சிஎன்ஜி தேர்வும் உள்ளது. மேனுவல், ஏஎம்டி, டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கிடைக்கின்றன. ஆறு ஏர்பேக்குகள், பெரிய டச் ஸ்கிரீன், 360 டிகிரி கேமரா, சன்ரூஃப் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக கூறலாம். சென்னையில் ரூ.7.39 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

4. மாருதி பலேனோ

பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் பிரபலமாக இருக்கும் மாருதி பலேனோ கடந்த அக்டோபர் மாதத்தில் 20,919 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 16,873 கார்கள் விற்பனையாகின. இதன் மூலம் 23.98 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதத்தைவிட விற்பனை சற்று குறைந்துள்ளது.

பலேனோவில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. சிஎன்ஜி தேர்வும் உள்ளது. இதனுடன் 9 இன்ச் டச் ஸ்கிரீன், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் உள்ளன. சென்னையில் ரூ.5.99 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

Maruti Dzire

5. மாருதி டிசையர்

இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் செடான் கார்களில் ஒன்றான மாருதி டிசையர், அக்டோபரில் 20,649 யூனிட்டுகள் விற்பனையுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் 20,791 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், தற்போது 0.68 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. முதல் பத்து இடங்களில் இடம்பெற்ற ஒரே செடான் கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசையரில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. சிஎன்ஜி தேர்வும் வழங்கப்படுகிறது. மேலும், 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பின்புற ஏசி வென்ட்டுகள் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக உள்ளன. சென்னையில் ரூ.6.31 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

6. மாருதி எர்டிகா

குடும்பப் பயணங்களுக்கான ஏழு இருக்கை கார்களைத் தேடுபவர்களின் விருப்பமாக இருக்கும் மாருதி எர்டிகா, கடந்த மாதம் 20,641 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 20,087 கார்கள் விற்பனையாகின. ஆண்டுக்கு ஆண்டு 2.76 சதவீத வளர்ச்சியுடன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

எர்டிகாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கிடைக்கின்றன. சிஎன்ஜி மாடலும் மேனுவல் கியர்பாக்ஸுடன் விற்பனை செய்யப்படுகிறது. மூன்று வரிசை இருக்கைகள், பின்புற ஏசி வசதி, ஸ்மார்ட் ஹைபிரிட் தொழில்நுட்பம், டச் ஸ்கிரீன் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்த கார் சென்னையில் ரூ.8.90 லட்சம் முதலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Tata Punch

7. டாடா பன்ச்

குறைந்த விலை எஸ்யூவி பிரிவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் டாடா பன்ச் மற்றும் அதன் எலக்ட்ரிக் வெர்ஷன் இணைந்து 20,525 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில் 16,810 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், தற்போது 22.10 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பன்ச் எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் தேர்வுகள் உள்ளன. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பம், சன்ரூஃப், டச் ஸ்கிரீன், ஆறு ஏர்பேக்குகள் உள்ளிட்டவை முக்கிய வசதிகளாக கூறலாம். சென்னையில் ரூ.5.75 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

8. மாருதி ஃபிரான்க்ஸ்

கடந்த மாதம் மாருதி ஃபிரான்க்ஸ் 20,014 யூனிட்டுகள் விற்பனையுடன் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடும்போது 17.71 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கூபே வடிவிலான எஸ்யூவி தோற்றம், சிறிய குடும்பங்களுக்கு ஏற்ற கேபின் மற்றும் பல எஞ்சின் தேர்வுகள் இதன் விற்பனைக்கு உதவுகின்றன.

ஃபிரான்க்ஸ் காரில் 1.2 லிட்டர் சாதாரண பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 1.2 லிட்டர் எஞ்சினுடன் மேனுவல், ஏஎம்டி கியர்பாக்ஸும், டர்போ எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் கிடைக்கின்றன. சிஎன்ஜி தேர்வும் உள்ளது. ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் உள்ளன. சென்னையில் ரூ.6.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

Mahindra Scorpio

9. மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திராவின் ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ என் ஆகிய இரண்டு மாடல்களும் இணைந்து 19,353 யூனிட்டுகள் விற்பனையாகி ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளன. இவை முறையே 8.24 சதவீத ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. வலுவான தோற்றம், பெரிய கேபின் மற்றும் நீண்ட தூரப் பயணங்களுக்கான திறன் வாய்ந்த எஞ்சின் ஆகியவை இந்த மாடல்களின் முக்கிய பலமாக உள்ளன.

ஸ்கார்பியோ கிளாசிக்கில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஸ்கார்பியோ என் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. இவற்றில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கிடைக்கின்றன. தொடுதிரை வசதி, சன்ரூஃப் மற்றும் 4X4 வசதி ஆகியவை குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் கிடைக்கின்றன. சென்னையில் ஸ்கார்பியோ கிளாசிக் ஆரம்ப விலை ரூ.13.37 லட்சமாகவும், ஸ்கார்பியோ என் ஆரம்ப விலை ரூ.13.69 லட்சமாகவும் உள்ளது.

10. மாருதி ஸ்விஃப்ட்

இந்தியாவில் நீண்டகாலமாக வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்று வரும் மாருதி ஸ்விஃப்ட் கார் கடந்த மாதத்தில் 18,866 யூனிட்டுகள் விற்பனையுடன் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் 15,542 கார்கள் விற்பனையாகின. தற்போது 21.39 சதவீத வளர்ச்சியுடன் முதல் பத்து பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கிடைக்கின்றன. சிஎன்ஜி மாடலும் மேனுவல் கியர்பாக்ஸுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 9 இன்ச் டச் ஸ்கிரீன், ஆறு ஏர்பேக்குகள், ஸ்டீயரிங் கட்டுப்பாடுகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்டவை இதன் முக்கிய வசதிகளாக உள்ளன. சென்னையில் ரூ.5.84 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

விற்பனை வளர்ச்சி

கடந்த அக்டோபர் மாதத்தில் முதல் பத்து இடங்களைப் பிடித்த கார்களின் மொத்த விற்பனை 2,09,116 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,78,111 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகின. இதன்மூலம் 17.41 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாருதி சுஸுகி மட்டும் ஏழு இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார்தான் அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில், புதிய கிரெட்டா வருகை குறித்த தகவலால், வாடிக்கையாளர்கள் காத்திருக்க தொடங்கி இருப்பதாக தெரிகிறது. இதனால், அந்த நிறுவனம் டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை.

Article Published On: Thursday, November 12, 2026, 12:33 [IST]
English summary
Top 10 best selling cars october 2026 wagon r brezza nexon sales
மேலும்... #maruti suzuki #tata motors #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X