அதிகம் விற்பனையான டாப் 10 எலெக்ட்ரிக் கார்கள்... டாடாவுக்கு தண்ணி காட்டும் அந்த நம்பர் 1 மாடல் எது தெரியுமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை படுவேகத்தில் சூடுபிடித்துள்ளது. நடப்பு ஆண்டில் முதல் அரையாண்டு காலத்தில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், முதல் 20 இடத்தில் உள்ள எலெக்ட்ரிக் கார்கள் சேர்ந்து 1.39 லட்சம் யூனிட்டுகள் விற்பனைய செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2025ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 66 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் வாகன் தளத்தின் முதல் அரையாண்டு காலத்தில் பதிவு செய்யப்பட்ட மின்சார கார்களின் எண்ணிக்கையின்படி, விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை தொடர்ந்து காணலாம். இந்திய எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் டாடா, மஹிந்திரா நிறுவனங்கள் முதல் இரண்டு இடங்களில் இருந்தாலும், இந்த பட்டியலில் எம்ஜி கார் முதலிடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது.

MG Windsor

1. எம்ஜி விண்ட்சர்

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் அதிகம் பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை எம்ஜி விண்ட்சர் எலெக்ட்ரிக் கார் தக்க வைத்துள்ளது. கடந்த ஜனவரி-ஜூன் இடையிலான காலகட்டத்தில் 19,080 யூனிட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது இந்த காரின் விற்பனை சுமார் 10 சதவீதம் குறைந்திருந்தாலும், புதிய போட்டியாளர்கள் வந்த நிலையிலும் முதலிடத்தை இழக்காமல் தக்க வைத்துள்ளது.

Also Read

எம்ஜி விண்ட்சர் எலெக்ட்ரிக் கார் ரூ.13.99 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலை முதல் கிடைக்கிறது. இந்த காரை BaaS திட்டத்தில் வாங்க விரும்பினால், ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலேயே பெற முடியும். பேட்டரியின் பயன்பாடுக்கு தனி சந்தா செலுத்த வேண்டி இருக்கும். இந்த காரின் புரோ மாடலில் 52.9kWh பேட்டரியுடன் கிடைக்கிறது. இந்த மாடலானது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 449 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Mahindra XEV 9S Captain Seat Model

2. மஹிந்திரா XEV 9S

இந்த பட்டியலில் மிகப்பெரிய ஆச்சரியம் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் மாடலாக உள்ளது. சந்தைக்கு புதிதாக வந்த இந்த மாடல் ஆறு மாதங்களில் 18,074 யூனிட்டுகளை பதிவு செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் இருக்கும் விண்ட்சருக்கும் இதற்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 1,006 யூனிட்கள் மட்டுமே. பெரிய எஸ்யூவி வகையிலான எலெக்ட்ரிக் கார்களை வாங்க இந்தியர்கள் ஆர்வம் காட்டுவது இதன் மூலமாக புலனாகிறது.

மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காருக்கு ரூ.19.95 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 59kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அராய் அமைப்பின் சான்றுபடி, 521 கிமீ வரையிலும், 79kWh பேட்டரி மாடல் 679 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Also Read

3. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக்

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் 16,567 யூனிட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தின் விற்பனையுடன் ஒப்பிடும்போது 78 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. ஏற்கனவே வலுவான பிராண்டாக இருக்கும் நெக்ஸான் பிராண்டுக்கு, எலெக்ட்ரிக் மாடலும் வலு சேர்த்து வருகிறது. டாடா நெக்ஸான் காரில் 45kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 489 கிமீ MIDC ரேஞ்ச் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கார் ரூ.12.49 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது.

4. டாடா பன்ச் எலெக்ட்ரிக்

டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் மாடலானது 15,683 யூனிட்களுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக நடப்பு ஆண்டில் இந்த காரின் விற்பனை 108 சதவீதம் உயர்ந்துள்ளது. சிறிய ரக எஸ்யூவி என்பதுடன், நகரப் பயன்பாட்டுக்கு ஏற்ற தன்மை மற்றும் விலை ஆகியவை சாதகமாக உள்ளன. டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரில் உள்ள 40kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 468 கிமீ வரை ரேஞ்ச் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.9.69 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது.

Mahindra XEV 9e

5. மஹிந்திரா XEV 9e

நவீன டிசைன் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் மஹிந்திராவின் முக்கிய எலெக்ட்ரிக் மாடலான XEV 9e எலெக்ட்ரிக் கார் 11,242 யூனிட்டுகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள XEV 9S கார் மற்றும் XEV 9e ஆகிய இரு மாடல்களும் சேர்ந்து மஹிந்திராவின் எலெக்ட்ரிக் வரிசையில் விற்பனையில் கணிசமான பங்களிப்பை வழங்குவது இதன் மூலமாக தெரிய வருகிறது. இந்த காரில் உள்ள 79kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 656 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.21.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

6. டாடா ஹாரியர் எலெக்ட்ரிக்

டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் கார் 10,499 யூனிட்டுகளுடன் இந்த பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அதன் எண்ணிக்கை 2,110 சதவீதம் என்ற இமாலய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் 2025ல் சந்தைக்கு வந்ததால் கடந்த ஆண்டில் விற்பனை எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததாக கருதப்படுகிறது. டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் காரில் 75kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 627 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த கார் ரூ.21.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Maruti E Vitara

7. மாருதி இ-விட்டாரா

மாருதி சுஸுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்யூவியாக விற்பனையில் இருக்கும் இ விட்டாரா கார், நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 8,572 யூனிட்டுகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. எலெக்ட்ரிக் கார் சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் நாடி பிடித்து பார்ப்பதற்காக இறக்கப்பட்ட மாடலாக உள்ளதால், வரும் காலங்களில் இந்த காருக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த காரில் வழங்கப்படும் 49kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 440 கிமீ தூரம் வரையிலும், 61kWh பேட்டரியானது 543 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. ரூ.15.99 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

8. டாடா கர்வ் எலெக்ட்ரிக்

டாடா கர்வ் எலெக்ட்ரிக் கார் 7,281 யூனிட்டுகளுடன் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட இதன் எண்ணிக்கை 212 சதவீதம் அதிகரித்துள்ளது. எஸ்யூவி மற்றும் கூபே வடிவமைப்பை இணைக்கும் இதன் தனித்துவமான தோற்றம், வழக்கமான எஸ்யூவி மாடல்களிலிருந்து வேறுபட்ட எலெக்ட்ரிக் காரை விரும்பும் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த காரில் வழங்கப்படும் 45kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 502 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். 55kWh மாடலானது 585 கிமீ தூரம் வரை ரேஞ்ச் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கார் ரூ.17.49 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

9. மஹிந்திரா BE 6

மஹிந்திரா BE 6 எலெக்ட்ரிக் கார் 6,849 யூனிட்டுகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதன் விற்பனை கடந்த ஆண்டை விட 13 சதவீதம் அதிகரித்துள்ளது. மஹிந்திராவின் புதிய தலைமுறை எலெக்ட்ரிக் கார் பிளாட்ஃபார்மில் உருவான இந்த மாடல், செயல்திறன் மற்றும் ஸ்போர்ட்டியான வடிவமைப்பை விரும்பும் வாடிக்கையாளர்களை முக்கியமாக குறிவைக்கிறது. இந்த காரின் 59kWh பேட்டரியானது 557 கிமீ வரையில் பயணிக்கும் வாய்ப்பையும், 79kWh பேட்டரி மாடலானது 683 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ரூ.18.90 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

10. டாடா டியாகோ எலெக்ட்ரிக்

டாப் 10 பட்டியலில் கடைசி இடத்தை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் பிடித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 6,816 யூனிட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டை விட விற்பனை 19 சதவீதம் குறைந்துள்ளது. புதிதாக பல எஸ்யூவி ரக மாடல்கள் சந்தையில் வந்ததால், கடும் சந்தைப் போட்டியை சந்திக்க துவங்கி உள்ளது. ஆனாலும், குறைவான விலையில் போக்குவரத்து மிகுந்த நகர்ப்புறங்களுக்கு சிறப்பான தேர்வாக தொடர்ந்து தன்னை முன்னிறுத்தி வருகிறது. இந்த காரில் வழங்கப்படும் 24kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 293 கிமீ தூரம் வரை பயணிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ரூ.7.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

டாடா, மஹிந்திராவின் ஆதிக்கம்

இந்த டாப் 10 பட்டியலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நான்கு மாடல்களுடனும், மஹிந்திரா நிறுவனம் மூன்று மாடல்களுடனும் முன்னணியில் உள்ளன. இருப்பினும் எம்ஜி விண்ட்சர் கார் தொடர்ந்து முதலிடத்தை இதுவரை தக்க வைத்து வருகிறது. எரிபொருள் விலை உள்ளிட்ட பல சந்தை சூழல்களால் வரும் பண்டிகை காலத்தில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நடப்பு ஆண்டின் முடிவில் இந்த பட்டியலில் சில மாறுதல்கள் நடக்கும் வாய்ப்பும் உள்ளது.

Article Published On: Monday, August 24, 2026, 8:42 [IST]
English summary
Top 10 best selling electric cars india h1 2026 mg windsor mahindra xev 9s tata nexon ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X