விற்பனையில் இந்தியாவின் டாப்-10 கார் நிறுவனங்கள்... டாடா, மஹிந்திரா இடையே போட்டா போட்டி!!
நாட்டின் கார் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஜூலையில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 4.7 லட்சம் பயணிகள் வாகனங்கள் டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, 33 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. வழக்கம்போல் மாருதி சுஸுகி கார் நிறுவனம் மிகப்பெரிய வித்தியாசத்துடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
இரண்டாவது இடத்திற்கு உள்நாட்டு கார் நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேநேரத்தில், ஜூன் மாதத்தில் உதிரிபாக சப்ளையர் ஆலையில் தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை ஜூலை மாதத்தில் வலுவான எண்ணிக்கையை பதிவு செய்து மீண்டு எழுந்துள்ளது. கடந்த மாதம் விற்பனை நிலவரப்படி, டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எந்தெந்த நிறுவனங்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

1. மாருதி சுஸுகி
கடந்த ஜூலை மாதத்தில் மாருதி கார் நிறுவனம் இந்தியாவில் 1,96,203 கார்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1,37,776 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 58,427 கார்களை அதிகம் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது 42.41 சதவீதம் கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மற்றொரு விஷயம், கடந்த ஜூன் மாதத்தில் 1,47,187 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், சென்ற மாதம் 49,016 யூனிட்டுகளை கூடுதலாக டீலர்களுக்கு அனுப்பி உள்ளது. இதனால், அடுத்தடுத்த இடங்களில் உள்ள நிறுவனங்களை விட மாருதி சுஸுகி தொடர்ந்து மிகப்பெரிய வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது.
2. டாடா மோட்டார்ஸ்
இரண்டாவது இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. அந்த போட்டியை சமாளித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 62,611 பயணிகள் வாகனங்களை கடந்த மாதம் விற்பனை செய்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 39,521 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், சென்ற ஜூலையில் 23,090 கார்களை அதிகம் விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது 58.42 சதவீதம் கூடுதல் வளர்ச்சியாக பதிவு செய்து அசத்தி உள்ளது டாடா மோட்டார்ஸ்.
3. மஹிந்திரா
கடந்த மாதம் மஹிந்திரா நிறுவனம் 60,048 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 49,871 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், சென்ற ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் 10,177 யூனிட்டுகளை கூடுதலாக விற்பனை செய்துள்ளது.இது 20.41 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
4. ஹூண்டாய் மோட்டார்ஸ்
கடந்த ஜூலையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் உள்நாட்டு சந்தையில் 54,210 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆணஅடு ஜூலையில் 43,966 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது விற்பனை 23.3 சதவீதம் கூடுதலாக பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த ஜூன் மாதத்தில் உதிரிபாக சப்ளையர் ஆலையில் தீவிபத்து காரணமாக, விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. மொத்தமாக 39,635 கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. ஆனால், ஜூலையில் ஹூண்டாய் இந்தியா விற்பனை மீண்டு எழுந்துள்ளது.
5. டொயோட்டா
டொயோட்டா நிறுவனம் சென்ற ஜூலை மாதம் 30,516 கார்களை பிடித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 29,159 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது விற்பனை 4.65 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 28,441 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், ஜூலை விற்பனை 7.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
6. கியா மோட்டார்ஸ்
கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் ஜூலை விற்பனை நிலவரப்படி ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 28,200 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது கியா. கடந்த ஆண்டு ஜூலையில் 22,135 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது விற்பனை 27.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், கடந்த ஜூனில் 24,552 கார்கள் விற்பனையான நிலையில், கடந்த 3,648 கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
7. எம்ஜி மோட்டார்
கடந்த மாதம் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் 8,158 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 6,687 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், சென்ற மாதம் 22 சதவீதம் உயர்வை பதிவு செய்துள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் 7,568 கார்கள் விற்பனையாகி உள்ளன. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனையில் முக்கால்வாசி மின்சா கார்கள் மட்டுமே பங்களிப்பை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
8. ஹோண்டா கார்ஸ் இந்தியா
கடந்த மாதம் இந்தியாவில் 6,014 கார்களை ஹோண்டா கார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 4,050 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில் கடந்த மாதம் விற்பனை 48.49 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோன்று, சென்ற ஜூனில் 5,243 கார்களை விற்பனை செய்திருந்த அந்நிறுவனத்தின் விற்பனை ஜூலையில் 14.71 சதவீதம் உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
9. நிஸான்
கடந்த மாதம் நிஸான் நிறுவனத்தின் விற்Hனை 218 சதவீதம் அதிகரித்து அசத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 1,421 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஜூலையில் 4,518 கார்களை விற்பனை செய்துள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டெக்டான் எஸ்யூவியின் வருகை நிஸான் நிறுவனத்திற்கு புதிய பலத்தை கொடுத்துள்ளது.
10. ரெனோ இந்தியா
கடந்த மாதம் 3,293 கார்களை ரெனோ இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 2,575 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது விற்பனை 28 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், சென்ற ஜூன் மாதம் 4,063 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால், ஜூலையில் விற்பனை 19 சதவீதம் குறைந்துவிட்டது.
கார் விற்பனையில் ஏற்றம்
இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய கார் சந்தையில் பல நிறுவனங்கள் பெரிய அளவிலான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. வரும் பண்டிகை காலத்தை ஒட்டி அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாடல்கள் மற்றும் எஸ்யூவி மட்டுமின்றி சிறிய கார்களுக்கான தேவையும் அதிகரித்து வருவதும் கடந்த மாதத்தில் விற்பனையை எகிடுதகிடாக உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications