அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்கள்.. மாருதியை பின்தள்ளி டாடா மோட்டார்ஸ் முதலிடம்.. இதை எதிர்பார்க்கவே இல்லையே!
கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. எப்போதும் முதல் இரண்டு இடங்களில் ஏதாவது ஒன்றில் மாருதியின் கார் வந்துவிடும். ஆனால் கடந்த ஜூன் மாதம் முதலிரண்டு இடங்களையுமே டாடா மோட்டார்ஸ் கைப்பற்றி அசத்தியிருக்கிறது.
டாடாவின் பன்ச் மற்றும் நெக்ஸான் ஆகிய இரண்டு கார்கள் தான் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களாக இருக்கின்றன. இதில் முதலிடத்தில் இருக்கும் பன்ச் காரின் விற்பனை கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது 101 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் வெறும் 10,446 கார்களை மட்டுமே டாடா இந்தியாவில் விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இந்த அளவு 21,006 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கிறது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவியின் விற்பனையும் 58 சதவீதம் விற்பனை உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் 11,602 நெக்ஸான் கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 18,335 யூனிட்டுகள் விற்பனையாகி அசத்தியிருக்கிறது. மேலும், டாப் 10 பட்டியலில் உள்ள கார்களில் அதிக விற்பனை உயர்வைப் பதிவு செய்த கார்கள் இவை இரண்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை மாருதிக்கு மூன்றாவது இடம் தான். மாருதி டிசையர் தான் கடந்த ஜூனிலும் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக இருக்கிறது. கடந்தாண்டை விட 15.60 சதவீதம் அதிகமாக 17,899 டிசையர் கார்களை கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது மாருதி.

அடுதடுத்த இடங்களிலும் மாருதி கார்களே இருக்கின்றன. நான்கு, ஐந்து மற்றும் ஆறு ஆகிய இடங்களில் மாருதியின் வேகன் ஆர், எர்டிகா மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய கார்கள் இருக்கின்றன. இந்த மூன்று கார்களும் முறையே 16,952 யூனிட்டுகள், 16,111 யூனிட்டுகள் மற்றும் 15,215 யூனிட்டுகள் என்ற விற்பனையைப் பதிவு செய்திருக்கின்றன.
டாப் 10 பட்டியலில் எப்போதும் 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட பட்ஜெட் கார்களின் ஆதிக்கமே நிறைந்திருக்கும். அது இல்லாமல் ஒரு கார் இந்தப் பட்டியலில இடம்பெறும் என்றால் அது ஹூண்டாய் கிரெட்டா தான். ஆனால் இந்த முறைய கிரெட்டா டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 10.65 சதவீதம் அதிகமாக 14,097 ஸ்கார்ப்பியோ கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது மஹிந்திரா. எட்டு மற்றும் ஒன்பதாம் இடங்களில் மாருதியின் ஃபிராங்க்ஸ் மற்றும் பெலினோ ட்வின்ஸ் உள்ளது. இரண்டு கார்களின் விற்பனையும் முறையே 34 சதவீதம் மற்றும் 39 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. ஃபிராங்க்ஸ் எஸ்யூவியானது கடந்த ஜூனில் 13,135 யூனிட்டுகள் விற்பனையையும், பெலினோ ஹேட்ச்பேக் 12,488 யூனிட்டுகள் விற்பனையையும் பதிவு செய்துள்ளது.
ஹூண்டாயின் கோட்டாவில் இந்த முறை கிரெட்டாவுக்குப் பதிலாக வென்யூ பத்தாவது இடத்தை ஆக்கிரமித்துள்ளது. கடந்தாண்டை விட வென்யூ சப்-காம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனை 57 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் 6,858 வென்யூ கார்களையே இந்தியாவில் விற்பனை செய்திருந்தது ஹூண்டாய். கடந்த ஜூன் மாதம் இந்த அளவு 10,776 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா, மாருதி இடையிலான போட்டியில் இந்த முறை டாடா முதலிடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஆனால் வழக்கம் போல எண்ணிக்கையில் மாருதி தான் டாப். முதல் 10 இடங்களில் மாருதியின் கார்கள் தான் ஆறு இடங்களில் உள்ளன. 10 லட்சம் ரூபாய்க்கும் கீழான விலையில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் நிறைய கார்களை மாருதி விற்பனை செய்து வருவதே இதற்கு முக்கியக் காரணம். எண்ணிக்கையில் மாருதியை மிஞ்ச இன்னும் யாரும் வரவில்லை.


Click it and Unblock the Notifications