டாப் 10 கார்கள்: 2016 vs 2026.. ரெனோ க்விட், ஹோண்டா சிட்டி டாப் 10ல இருந்ததுனு சொன்னா நம்புவீங்களா?
ஒரு பத்தாண்டுகளுக்கு ஒரு ஆட்டோமொபைல் சந்தையில் பெரிய மாற்றம் நிகழும். அது சந்தையையே புரட்டிப் போடக்கூடியதாக இருக்கும். அப்படித் தான் நடப்பு பத்தாண்டில் எஸ்யூவிக்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. குறைவான விலை முதல் அதிக விலை வரை எஸ்யூவி கார்களை வாங்குவதிலேயே வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். மாருதி சுஸூகியைத் தவிர மற்ற எந்த நிறுவனத்திற்கும் எஸ்யூவியைத் தவிர மற்ற வகை கார்களின் விற்பனை வெகுவாகக் குறைந்துவிட்டது.
மாருதி மட்டும் இல்லையென்றால் இந்தியாவில் தற்போது விற்பனையாகும் அனைத்து கார்களுமே எஸ்யூவியாகத் தான் இருக்கும். இதனை தற்போது அதிகம் விற்பனை செய்யும் கார்களின் பட்டியலைப் பார்த்தாலே நாம் புரிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு கடந்த மே மாதம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

- மாருதி டிசையர்
- மாருதி ஃபிராங்க்ஸ்
- மாருதி எர்டிகா
- டாடா பன்ச்
- டாடா நெக்ஸான்
- மாருதி பெலினோ
- மாருதி வேகன் ஆர்
- மாருதி ஸ்விஃப்ட்
- மஹிந்திரா ஸ்கார்பியோ
- ஹூண்டாய் கிரெட்டா
ஆகிய 10 கார்கள் தான் இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்கள். இதில் மாருதியைத் தவிர்த்து மற்ற நிறுவனங்கள் கார் அனைத்துமே எஸ்யூவிக்கள் தான்.
டாப் 25 கார்களின் பட்டியலை எடுத்தால் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருக்கும். (11 முதல் 25 வரையில் இடங்களில் இருக்கும் கார்கள்)
- மாருதி பிரெஸ்ஸா
- மாருதி விக்டோரிஸ்
- மாருதி ஈகோ
- ஹூண்டாய் வென்யூ
- மாருதி ஆல்டோ
- கியா செல்டோஸ்
- கியா சோனெட்
- மஹிந்திரா தார்
- டொயோட்டா இன்னோவா
- டொயோட்டா ஹைரைடர்
- மஹிந்திரா பொலேரோ
- மஹிந்திரா XUV 7XO
- ஹூண்டாய் எக்ஸ்டர்
- மாருதி கிராண்டு விட்டாரா
- மஹிந்திரா XUV 3XO

இந்த டாப் 25 பட்டியலில் 17 கார்கள் எஸ்யூவிக்கள் தான். அதிலும் மாருதி மற்றும் டொயோட்டா இன்னோவாவை தவிர, மற்ற நிறுவனங்களின் கார்கள் அனைத்தும் எஸ்யூவி தான். வேறு வகையான கார்களுக்கே இடமில்லை என்பது போல மாறியிருக்கிறது இந்திய ஆட்டோமொபைல் சந்தை. ஆனால், அப்படியே பத்தாண்டுகளுக்கு முன் சென்றீர்கள் என்றால், இது அப்படியே தலைகீழாக இருக்கும்.
இந்திய சந்தையை அப்போது ஹேட்ச்பேக் கார்கள் தான் ஆட்சி செய்து வந்தன. மேலும், தற்போது விற்பனையில் அதலபாதாளத்தில் இருக்கும் கார் மாடல்கள் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்திய சந்தையில் டாப் 10 இடங்களில் இருந்ததைப் பார்க்கவும், அதன் விற்பனை ஏன் படுத்துவிட்டது என்ற அனாலிசிஸும் சுவாரஸ்யமாக இருக்கும்.
2016ம் ஆண்டு இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்கள் இவை.
- மாருதி ஆல்டோ
- மாருதி டிசையர்
- மாருதி வேகன்ஆர்
- மாருதி ஸ்விஃப்ட்
- ரெனோ க்விட்
- ஹூண்டாய் கிராண்டு i10
- மாருதி செலரியோ
- ஹூண்டாய் கிராண்டு i20
- மாருதி பெலினோ
- ஹோண்டா சிட்டி
இந்தப் பட்டியலில் இருக்கும் மாருதியின் டிசையர், வேகன் ஆர், ஸ்விஃப்ட் மற்றும் பெலினோவைத் தவிர மற்ற கார் மாடல்கள் எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டன. அதாவது மேலே கூறியது போல விற்பனையில் அதலபாதாளத்தில் இருக்கின்றன. மேலும் இதில் பார்த்தீர்கள் என்றால் ஒரு எஸ்யூவி கூட இல்லை. எட்டு ஹேட்ச்பேக்குகள் மற்றும் இரண்டு செடான் கார்கள். இதன் பிறகு தான் எஸ்யூவிக்கள் தலைதூக்கத் தொடங்கின.
முதலில் சில மிட்-சைஸ் எஸ்யூவிக்கள், பின்னர் சில சப் 4 மீட்டர் எஸ்யூவிக்கள். அவை இந்தியாவில் பிரபலம் ஆக ஆக, ஒவ்வொரு நிறுவனமாக புதிய புதிய எஸ்யூவிக்களை வெளியிடத் தொடங்கி தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தை எஸ்யூவிக்களின் தளமாக மாறிவிட்டது. ஹேட்ச்பேக்குகளின் விற்பனை குறைந்துவிட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிளாஸியான செடான் டிசைன் அல்லது பிராக்டிகலான மற்றும் விலை குறைவான ஹேட்ச்பேக் டிசைனை விட, போல்டான ரோடு பிரசன்ஸ் கொண்ட ரக்கடான டிசைனுக்கு வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படுவதே அதிகளவில் எஸ்யூவிக்கள் விற்பனையாவதற்கான காரணமாக இருக்கிறது. மேலும், பத்தாண்டுகளுக்கு முன்பு சராசரி வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையிலான எஸ்யூவி கார்கள மிகவும் குறைவு.
குறிப்பாக குடும்பப் பயன்பாட்டிற்கு என்று யாரும் எஸ்யூவிக்களை பத்தாண்டுகளுக்கு முன்பு வாங்கியதில்லை. ஆனால் ஒரு சில கார்களின் வரவு அதனைப் புரட்டிப் போட்டது. குறிப்பாக ரெனோ டஸ்டர் மற்றும் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் ஆகியவற்றைக் கூறலாம். இவை வாடிக்கையாளர்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலம் ஆகவும் நிறுவனங்கள் இதனைப் பின்பற்றி, சராசரி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் எஸ்யூவிக்களை வடிவமைக்கத் தொடங்கின.
அதன் விளைவாக, தற்போது மைக்ரோ எஸ்யூவி முதல் சொகுசு எஸ்யூவி வரை பல்வேறு அளவிலும், விலையிலும் எஸ்யூவிக்கள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த அதிகபட்டியான எஸ்யூவி வரவு, அதன் விற்பனையை இன்னும் பல படிகள் மேலே எடுத்துச் சென்றுவிட்டது. இது ஒரு சைக்கிள் தான். அடுத்த பத்தாண்டுகளில் எம்பிவிக்களோ அல்லது மீண்டும் செடான்/ ஹேட்ச்பேக்குகளோ கூட தலைதூக்கலாம்.


Click it and Unblock the Notifications